பாடல் #1575

பாடல் #1575: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சித்திக ளெட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியு மெண்முத்தி தூய்மையும் யோகத்துச்
சத்தியு மந்திரஞ் சாதகம் போதமும்
பத்தியு நாத னருளிற் பயிலுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிததிக ளெடடொடுந திணசிவ மாககிய
சுததியு மெணமுததி தூயமையும யொகததுச
சததியு மநதிரஞ சாதகம பொதமும
பததியு நாத னருளிற பயிலுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்திகள் எட்டோடும் திண் சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் முத்தி துய்மையும் யோகத்து
சத்தியும் மந்திரம் சாதகம் போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே.

பதப்பொருள்:

சித்திகள் (மாபெரும் சித்திகளாகிய) எட்டோடும் (அட்டமா சித்திகளோடு) திண் (உறுதியான) சிவம் (சிவப் பரம் பொருளாகவே) ஆக்கிய (அடியவரையும் ஆக்குவதற்கு)
சுத்தியும் (பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும்) எண் (பல விதமான எண்ணங்களில் இருந்து) முத்தி (விடுதலை அடைந்து மோன நிலையில்) துய்மையும் (எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும்) யோகத்து (அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும்)
சத்தியும் (அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும்) மந்திரம் (மந்திரம் போன்ற சொற்களும்) சாதகம் (செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும்) போதமும் (முக்காலமும் அறிந்த ஞானமும்)
பத்தியும் (உண்மையான சரணாகதியாகிய பக்தியும்) நாதன் (ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய) அருளில் (இறைவனின் திருவருளால்) பயிலுமே (அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்).

விளக்கம்:

மாபெரும் சித்திகளாகிய அட்டமா சித்திகளோடு உறுதியான சிவப் பரம் பொருளாகவே அடியவரையும் ஆக்குவதற்கு பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும், பல விதமான எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்து மோன நிலையில் எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும், அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும், அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும், மந்திரம் போன்ற சொற்களும், செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும், முக்காலமும் அறிந்த ஞானமும், உண்மையான சரணாகதியாகிய பக்தியும், ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய இறைவனின் திருவருளால் அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.