பாடல் #138

பாடல் #138: முதல் தந்திரம் – 1. உபதேசம்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

விளக்கம்:

பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளை உணர்ந்து கொண்டால் இறைவனின் திருவடியே சிவமாக இருக்கும். இறைவன் இருக்கும் சிவலோகம் எது என்று சிந்தித்தால் இறைவனின் திருவடிகளே சிவலோகமாக இருக்கின்றது. உயிர்கள் சென்று சேருகின்ற இடம் எது என்று சொன்னால் இறைவனின் திருவடிகளே சென்று சேரும் இடமாக இருக்கின்றது. தாமக்குள் இருக்கும் இறைவனை உள்ளுக்குள் உணர்ந்து தெளிபவர்களுக்கு இறைவனின் திருவடிகளே அவர்கள் எப்போதும் சென்று தஞ்சமடையும் இடமாக இருக்கின்றது.

One thought on “பாடல் #138

 1. Manohar Msk Reply

  பாடல்.138
  திருவடி யேசிவ மாவது தேரிற்
  றிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கிற்
  றிருவடி யேசெல் கதியது செப்பில்
  றிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே

  விளக்கம்:- ஈசனது திருவடியே மனிதனுக்கு சிவலோதத்தை அடைய வழி என்பதை பற்றி விளக்குகிறார். மேலும் திருவண்ணாமலையில் மலை மீது இரண்டு பாதங்கள் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. அதற்கு மக்கள் பூசை வழிபாடுகள் செய்து தற்போதும் வழிபாடு செய்து வருகின்றனர். அதனால் தான் ஈசனது தாள் எனும் பொற்பாதம், திருப்பாதமே எல்லாம் என்கிறார்.

  அ)திருவடி யேசிவ மாவது தேரிற்:- திருவடியே+சிவம்+ ஆகும். தேரில் இறைவனது சிலையை வைத்து ஊர் மக்கள் கூடி தேர் இழுப்பதாகும். எனவே தேர் என்றால் ஒரு ஊடகம். இறைவனை அடைய மூலமாக ஒரு ஊடகமாக இருப்பது தேர் ஆகும் . அதுவே மனிதனது உடல் அதனால்தான் மனிதனுக்குள்ளும் இறை சக்தி உள்ளது என்பதை விளக்குவதற்காக நமக்கு கொடுத்துள்ள ஊடகம் நமது உடல் என்னும் தேர் ஆகும். இறைவனது திருவடியே சிவம் ஆகும்.

  ஆ)றிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கிற்: திருவடியே சிவம் திருவடியே சிவலோகம் என சிந்திக்கின்ற மனப்பக்குவம் எப்பொழுது மனிதன் அடைகின்றானோ அப்பொழுது சிவன் ஈசன் உனக்குள் இருக்கிறான் என தெரிந்து கொள்ளலாம். காரணம் இதற்கு முந்தைய பாடலில் ஈசனது அடியையும் முடியையும் காண முடியாது என்பதற்கு ஏற்ப ஈசனது பொற்பாதங்களை வணங்கு என்று திருமூலர் பாடியுள்ளார் அதையே மிகப் பிற்காலத்தில் வாழ்ந்த மனிதனாக பிறந்த மாணிக்கவாசகர் திரூவாசகத்தின் முதல் பாடலில் *நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க எனப்பாடி இறைவனை அடையும் வழியை உலக மக்களுக்கு தந்துள்ளனர்.

  இ)றிருவடி யேசெல் கதியது செப்பிற்:- ஈசனின் திருவடியே உனக்கு கதி என்று நினைத்து துதி. செப்புதல் என்றால், சொல்லப்பட்டவற்றை, சொல்லியவாறே சொல்லுதலுக்குச் செப்புதல் என்று பெயர். சொல்லப்பட்ட அல்லது எழுதப்பட்ட இந்தப் பாடல்களை படி அல்லது எழுது அல்லது மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இரு என்று பொருள் வருவதால் ஈசனை அல்லது அதில் சொல்லப்பட்ட அறிவுரைகளை ஞானத்தை திரும்பத் திரும்ப படித்து உணர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டுமே மனிதர்களுக்கு சீசனது அருளை பெற வழி வகுக்கும் என்பதை உணர்த்துகிறார் சாதாரணமாக மனிதர்கள் தனக்கு துன்பம் நேரும் பொழுது மட்டுமே இறைவனை வேண்டி வணங்கி இந்த துன்பத்திலிருந்து விடுவிக்க அருள் புரிவாயாக என்று வேண்டுவது மனிதர்களின் இயல்பு அதையே அனுதினமும் மறவாமல் திரும்பத் திரும்ப ஈசனின் திருநாமத்தை குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை பற்றி உணர்த்துகிறார் என தோன்றுகிறது. அதுவே ஈசனுடைய அருளை பெறுவதற்குரிய நெறியாகும்.

  ஈ)றிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே;- மேலும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஈசனுடைய திருவடியை தஞ்சம் என அடைந்து உனக்கு தெளிந்து வணங்குபவர்களுக்கும் வழிபடுபவர்களுக்கும் மட்டுமே ஈசனுடைய முழு அருள் கிடைக்கும் வாழ்பவர்களுக்கு ஈஸ்வரி அருள் முழுமையாக கிடைக்கும் அதனால் தான் மாணிக்கவாசகர் தனது முதல் பாடலில் தாள் வாழ்க தாள் வாழ்க என்று பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.