பாடல் #1141: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
தாமே லுறைவிட மாறித ழானது
பார்மே லிதழ்பதி னெட்டிரு நூறுள
பூமே லுறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மே லுறைகின்ற பைங்கொடி யாளே.
விளக்கம்:
பாடல் #1140 இல் உள்ளபடி இறைவனை தமது நெஞ்சத்திற்குள் அடையும்படி பெற்ற சாதகருக்குள் இறைவன் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிஷ்டான சக்கரத்தில் வந்து பின்பு அங்கிருந்து நான்கு இதழ்கள் கொண்ட மூலாதார சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சாதகரின் 3600 சுவாசங்களின் மூலம் எழுப்பி விடுகிறார். அங்கிருந்து வெளிப்பட்ட சக்தியானவள் ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவதாக இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின் மேல் வீற்றிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவாள். உலகங்கள் அனைத்திலும் பரவி வீற்றிருக்கின்ற இறைவியே சகஸ்ரதள சக்தியாக அங்கிருந்து பசுமையான கொடி போல வெளிப்படுவாள்.
கருத்து:
இறைவியும் தாமும் வேறில்லை என்று எண்ணுகின்ற சாதகரின் நெஞ்சத்தில் இறைவன் வந்து வீற்றிருக்கின்றார். அந்த இறைவன் சாதகரின் மூச்சுக்காற்றில் 3000 எண்ணிக்கையை எடுத்து சுவாதிஷ்டான சக்கரத்தை எழுப்பி விடுகின்றார். அதன் பிறகு சாதகரின் மூச்சுக்காற்றில் 3600 எண்ணிக்கையை எடுத்து மூலாதார சக்கரத்தில் இருக்கின்ற குண்டலினி சக்தியை எழுப்பி விடுகின்றார். அந்த குண்டலினி சக்தியானது அதற்கு மேலுள்ள ஐந்து சக்கரங்களையும் தாண்டி மேலே ஏறிச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின் மேல் வீற்றிருக்கும் சக்தியை எழுப்பி விடுகின்றது. அங்கிருக்கும் சக்தியானவள் பசுமையான கொடி போல சாதகரின் உடலுக்குள்ளிருந்து வெளிப்படுவாள்.
குறிப்பு:
மனிதன் ஒரு நாளுக்கு மொத்தம் 21,600 முறை சுவாசிக்கின்றான். யோகப் பயிற்சிகள் செய்யும் சாதகர்களுக்கு இந்த சுவாசக் காற்றானது நுரையீரலில் இருந்து உடலுக்குள் இருக்கும் ஆறு சக்கரங்களுக்கும் முறையே 3000 சுவாசங்களாக சென்று சக்தியூட்டுகிறது (6 x 3000 = 18,000). மூலாதார சக்கரத்தில் 3600 சுவாசங்களாக சென்று சக்தியூட்டுகின்றது (18,000 + 3,600 = 21,600). ஆக மொத்தம் 21,600 சுவாசங்களும் சக்கரங்களுக்கு சென்று சக்தியூட்டுகிறது.
