பாடல் #1130: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
தார்மே லுறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மே லிருப்ப தொருநூறு தானுள
பூமே லுறைகின்ற போதகம் வந்தனள்
நாமே லுறைகின்ற நாயகி ஆணையே.
விளக்கம்:
தண்டின் மேல் வளர்ந்து விரிந்து இருக்கும் குளிர்ந்த தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் உலகத்தில் வந்து பிறவி எடுக்க வேண்டி உயிர்களுக்கு அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப ஆயுளைக் கொடுத்து படைக்கின்றான். வெள்ளைத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற சரஸ்வதி தேவியும் அவனோடு சேர்ந்து வந்து உயிர்களுக்கு ஞானத்தை அருளுகின்றாள். ஞானத்தின் தலைவியாக உயிர்களின் நாக்கின் மேல் அமர்ந்த சரஸ்வதி தேவி அருளிய அனைத்தும் ஆணையாக இருக்கின்றது.
குறிப்பு: பிரம்மன் தன்னுடைய தேவியாகிய சரஸ்வதியுடன் பூரண சக்தியாக சேர்ந்து இருந்து உயிர்களுக்கு ஞானத்தை அருளுவதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.