பாடல் #1153: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
தாவித்த வப்பொருள் தான்அவ னெம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொருள் தாமது தானே.
விளக்கம்:
பாடல் #1152 இல் உள்ளபடி சாதகருக்குள் புகுந்து வீற்றிருக்கும் இறைவியானவள் தானே இறைவனாகவும் இருக்கின்றாள். அசையா சக்தியாகிய இறைவன் தன்னுடைய அம்சமாகவே உலகங்கள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போதே அவனுடன் சேர்ந்து அசையும் சக்தியாக இருந்த இறைவியும் மேலிருக்கும் 7 உலகங்களையும் கீழிருக்கும் 7 உலகங்களையும் அவனோடு சேர்ந்து உருவாக்கினாள். அது மட்டுமின்றி இந்த 14 உலகங்களில் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும் இறைவனின் அம்சமாக இறைவியே இருக்கின்றாள்.
மேல் ஏழு உலகங்கள்
- சத்ய லோகம்
- தப லோகம்
- ஜன லோகம்
- மகர லோகம்
- சுவர் லோகம்
- புவர் லோகம்
- பூலோகம்
கீழ் ஏழு உலகங்கள்
- அதல லோகம்
- விதல லோகம்
- சுதல லோகம்
- தலாதல லோகம்
- மகாதல லோகம்
- ரசாதல லோகம்
- பாதாள லோகம்