அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #12

3-3-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக வழியில் செல்கின்றவர்க்கு உணவில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது என்ன?

ஆன்மீக வழியில் செல்வோர்க்கு சில பொருட்களை நீக்குமாறு குருக்கள் கூறுவதுண்டு. உதாரணமாக பூண்டு வெங்காயம் வகைகள் இருப்பினும் அனைத்திற்கும் மேலாக ஒதுக்க வேண்டியது புலால் வகைகள் அதாவது உயிருள்ள நடமாடும் ஜீவன்களை நாம் சாப்பிடுவதால் அவ்வுயிரின் சில கர்ம பாக்கிகளை நாமும் பெறுகின்றோம். இதன் வழியாக முன்னேற்றங்கள் தடைபெறுகிறது மேலும் மற்றோர் உயிரை நீக்கி நாம் வாழ்வது என்பது மட்டுமல்லாது ருசித்து உண்பது ஆகாது என்கின்ற ஒன்றும் உண்டு. இது நாம் கர்ம வினைகளை ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் அதனை நீக்கிட மறுபிறவி எடுத்திடல் வேண்டும் என்கின்ற ஓர் விதியுமுண்டு. மற்றவை நிச்சயம் நீக்க வேண்டும் என விதி இல்லை ஏனெனில் மரக்கறி வகைகள் உட்கொள்ளும் காலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்கின்ற போதிலும் கார வகைகளை எருவு வகைகள் அதிக புளி என்பதெல்லாம் தவிர்த்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. ஆன்மீக பாதையில் சென்று தியானம் ஜபம் என படிப்படியாக முன்னேறுவோர்க்கு ஜீரண உறுப்புகள் பலவீனம் அடையும். இவ்விதம் இருக்க சிறிது மாற்றங்கள் ஏற்பட்டாலே உடல் அசௌகர்யங்கள் காணக்கூடும் என்கின்றதால் தவிர்க்கச் சொல்கின்றோம். இது புலால் உண்பவர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருக்கும். ஏனெனில் அத்தகைய உணவுகள் ஜீரணிக்க அதிகசக்தி வேண்டும் என்கின்ற ஓர் நிலையும் உண்டு என்பதுமட்டுமல்லாது உஷ்ண தன்மைகள் (உடல் சூடு) வளர்க்கும் என்பதுமாகும். தவிர்ப்பது நல்லது என கூறிவிட்டோம் பொதுவாக கடின விதிகள் இல்லாப் போதிலும் அவரவர்க்கு ஏற்றவாறும் உடல் நிலைக்கு எற்றவாறும் விதிகள் அமைப்பது நன்று.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #11

4-2-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

குரங்கிற்கும் மனிதர்க்கும் உள்ள பந்தம் என்ன ?

அனைத்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஓர் ஏணிப்படியை மனதில் வைத்துக் கொண்டால் கீழ் உள்ள முதல் படியில் செடி கொடி என்கின்ற வகைகளும் மேல் உள்ள கடைசி படியில் ஜீவன் முக்தனும் இருப்பதை உணரலாம். இதில் விசித்திரம் என்னவென்றால் மண்ணில் இருக்கும் செடி கொடிகள் நீரில் கடலிலும் உண்டு. இது இடம் மாறுவதும் உண்டு. சிறு காலம் சென்றவுடன் கடலில் இருப்பது பூமியிலும் பூமியில் இருப்பது கடலிலும் வளரும் பின்பு விலங்குகள் நீரிலும் பூமியிலும் வாழும் ஜீவன்களும் உண்டு. உதாரணமாக ஆமை, நண்டு ஆகிய வகைகள் ஆகும். வானத்தில் வாழும் விலங்குகளும் உண்டு. இத்தகைய விலங்குகளுக்கும் மனிதனுக்கும் மத்தியில் இருப்பதே குரங்கு என அறிய வேண்டும். உடல் கூறு என எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ மனிதனை போல் உண்டென்றும் செயலாற்றும் திறனும் அவ்விதமே இருக்கின்றது. குரங்கிற்கு மற்றொரு பெயரும் உண்டு வானரன் என அழைக்கும் இதனை முழுமையாக எடுத்தால் வால் உள்ள நரன் என்கின்ற பொருளாகின்றது. இதிலிருந்தே அக்காலத்திலும் இத்தொடர்பினை நன்கு உணர்ந்தனர். குறிப்பாக விலங்குகளுக்கும் மனிதருக்கும் மத்தியில் உள்ள ஓர் ஜீவனே குரங்காகிறது. குரங்கின் சுபாவம் இக்காலத்தில் மனிதருக்கும் உண்டு என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். குரங்கு சமயங்களில் தமக்கு தேவைக்கும் மேலானதை பிடுங்கி செல்வதுண்டு. இதனை மனிதனும் உறுதியாக பற்றிக் கொண்டுள்ளான் தொடர்கின்றான். குரங்கின் மனம் ஓர் இடத்தில் நிற்பதில்லை என்பது மற்றொரு குறை அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருக்கும். இது போலவே மனிதனின் மனமும் உள்ளது. இவையாவையும் வென்று மேல் சென்று ஜீவன் முக்தனாக நீற்க வேண்டுமெனில் மனஉறுதி தியானம் மனவலிமை என்பதெல்லாம் வேண்டும். அனைத்திற்கும் மேலாக தெய்வ அருளும் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #10

8-1-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனித ஜென்மங்கள் ஏழு என்றும் ஏழு ஜென்மங்கள் முடித்திட பின்பு மனிதனின் நிலை என்ன?

மனித பிறவியை எண்ண இயலாது என்கின்றதை நன்கு உணர்தல் வேண்டும் மண்ணாகி கல்லாகி புல்லாகி என பல பல பிறவிகள் எடுத்து ஜட பொருட்களாக இருக்கும் நிலைகளை தாண்டி மிருக உயிருள்ள அசையும் பிறவிகள் பல எடுத்து பின்பே மானிட நிலை கிடைக்கிறது. பின்பு ஏன் ஏழு ஜென்மங்கள் என்று கூறுகிறார்கள் என்றால் பொதுவாக இது ஏழு நிலைகளை கூறிக்கின்றது. மனிதன் பிறவியிலிருந்து ஓர் நல்ல நிலை அடையும் வரை ஏழு நிலைகளை தாண்டுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதில் பொதுவாக விழிப்பு நிலை, தூக்க நிலை, ஆழ்தூக்க நிலை, இதற்கு மேலான நான்கு நிலைகளும் தாண்டி செல்கின்றோம். இந்நிலைகளை அன்று உள்ள மகான்கள் ஏழு ஜென்மங்கள் என எடுத்துரைத்தனர். ஏழு நிலைகளும் நாம் தாண்டிட ஓர் நல்ல ஆன்மீக ஞான நிலை அடைவோம் என்பதேயாகும். மற்றொரு கருத்தாக சூரியன் பூமி என்கின்ற கோள்கள் அனைத்தும் இருப்பது போல் ஏழு பிரபஞ்சங்கள் உள்ளன. இந்த ஏழு பிரபஞ்சங்களிலும் நாம் பிறவி எடுப்போம் என்கின்ற ஓர் நிலையும் உண்டு. இந்த ஏழும் கடந்த பின்பே முக்தி நிலை கிடைக்கும். எத்தனை பிறவிகள் என நீங்களே கணக்கிட புரிந்து விடும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #9

11-12-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நெறியில் எவ்விதம் வாழ வேண்டும் என்று ஓர் மகானிடம் கேட்ட கேள்விக்கு எச்சை இலையை போல் இருத்தல் வேண்டும் என்று கூறினார். அதன் அர்த்தம் என்ன?

சாதாரண நிலையில் அவரவர் சற்கர்மங்கள் (தினந்தோறும் செய்யும் செயல்கள்) செய்யும் காலங்களில் தீமை தரும் செயல்கள் எதுவென்றும் நலம் தரும் செயல்கள் எதுவென்றும் நன்கென உணர்ந்து செயல்படுதல் வேண்டும். ஏனெனில் இரண்டும் அதிகரிக்க முடிவினை (பிறவி இல்லாமை) காணாது என்கின்ற ஓர் விதியும் உண்டு. இது குடும்பஸ்தர் தொழில் செய்கின்றவர் அனைவருக்கும் பொருத்தமாகும். ஆகவே சிந்தித்து செயல்படுதல் வேண்டும். நலம் தரும் செயல்களில் ஈடுபடவேண்டும். ஆன்மீக பாதையில் முழுமையாக செல்வோர்க்கு அனைத்தும் இறைவன் வழி என விட்டுவிடுதல் வேண்டும். இதற்காகவே எச்சை இலையை கூறி விட்டார். எச்சை இலையானது காற்று அடித்தால் குப்பையில் செல்லும் வீதியில் செல்லும். ஏன் வீட்டுக்குள்ளும் பறந்து வரும். இந்நிலை போல் இருத்தல் வேண்டும். எங்கு இறைவன் உம்மை தள்ளுகிறானோ அந்நிலையை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்பது மட்டும் இல்லாது அதுவும் இறைவனின் கருணை என எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக நிலையில் சூழ்நிலைகளோ இடங்களோ முக்கியத்துவம் அல்ல. பற்று அறுக்கப்படுகின்றது என்றால் எத்தலமும் (இடம்) இறைவன் தலமே. இந்நிலையும் இறைவன் அளித்ததே என ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். இருப்பினும் கலியுகத்தில் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் நாடுவோர் அனைத்தும் வேண்டும். பின்பு இறைவனும் வேண்டும் என எண்ணுகின்றனர். அனைத்தும் என்பது இறைவன் அளித்ததே என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #8

14-11-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்விதம் வழிபாடு நடத்துவது? எவ்விதம் வழிபடுவது? என்ன படைப்பது?

முதன்மையில் வழிபடும் முன்னதாக பூரண சரணாகதி அடையவேண்டும். பூரண சரணாகதி இல்லையேல் முழுமையாக பூஜையிலோ ஜெபத்திலோ ஈடுபட இயலாது. இத்தகைய நிலையில் வழிபடும் காலத்தில் முதலில் முழுமையாக சரணாகதி அடையுங்கள். பின்பு ஜெபிக்க மனதில் எவ்வித சச்சரவுகளும் உண்டாகாது தடைகளும் நேரிடாது. நாம் என்ன உணவு உண்கின்றோமோ அதை தைரியமாக படைத்திடலாம். தகாதது (ஆகாதது) படைத்தால் என்ன ஆகும் என்று சிலர் அஞ்சுவது (பயப்படுவது) உண்டு. இதை மாற்றும் திறமை தெய்வங்களுக்கு உண்டு. நாம் உண்ண அல்லது குடிக்க பயப்படுவதை இறைவனுக்குப் படைத்தல் ஆகாது. புஷ்பங்கள் (பூக்கள்) இயன்ற அளவில் நல் கந்தத்துடன் (வாசனையுடன்) இருத்தல் வேண்டும். அவ்விதம் கிடைக்காவிடில் பன்னீர் மற்றும் சந்தனத்தை அதில் கலந்து புஷ்பத்தை உபயோகிப்பது நலமாகும். இவ்விதம் இருந்த போதிலும் ஏதும் படைக்காத போதும் சிறிது நீரையாவது நித்யம் (எப்போதும்) வைத்தல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

18-10-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நிலையில் புத்தர் என்கின்றவரை பின்பற்றுவோர்கள் அம்மதத்திற்கு புத்திசம் என்றும் முகம்மதை பின்பற்றுவோர்கள் முகம்மதியர் என்றும் கிறிஸ்துவை பின்பற்றுவோர்கள் கிறிஸ்துவர் என்றும் அவரவர் மதத்திற்குப் பெயர் சூட்டினார்கள். இவ்விதம் இருக்க பாரதத்தில் இந்து மதம் என்று கூறுகின்றார்கள் இது எப்படி வந்தது?

பொதுவாகப் பலர் தன் மதத் தலைவர்களின் பெயர்களைப் பொருத்தி அம்மதத்திற்குப் பெயரும் அளித்து அதனைப் பின்பற்றுகின்றார்கள். ஆயினும் இதிலிருந்து இந்து மதம் மாறானது. முன்காலத்தில் பின்பற்றும் வழிகள் இருந்தது. இவைகளுக்குப் பெயர்கள் யாரும் சூட்டவில்லை. பிற்காலத்தில் இவை சனாதன தர்மம் என்று அழைக்கப்பட்டுள்ளன. மதத்தில் நடக்கும் வழிகள் பல வழிகள் பல தத்துவங்கள் உள்ளது. இவை அனைத்திற்கும் இப்பெயரைச் சூட்டினார்கள். தனிப்பெயர் இதற்கு இல்லை. சனாதன தர்மம் என்று கூறிக்கொண்டால் இதற்குப் பொருள் நல் நெறியில் நடத்தும் வழி என்பதேயாகும். அதாவது மற்றவர்கள் தன் மதத் தலைவர்களின் பெயரைச் சூட்டிப் பின்பற்றினார்கள். இங்கு நம் நாட்டில் இந்து எனக் கூறிக்கொண்டால் அவர்களில் பல ரிஷிகள் ஞானிகள் வரிசையாகத் தோன்றி இருக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் பெயரில் இம்மதம் செயல்படவில்லை. தத்துவங்களின் அடிப்படையில் இந்து மதம் நடக்கின்றது இங்குத் தனி நபருக்கு இடமில்லை ஏனெனில் தர்மங்கள் பொதுவானது. இந்து மதம் எனக் கூறிக்கொண்டால் இங்கே ஆன்மீகத் தத்துவங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்தத்துவங்களை எடுத்துரைப்பவர்களுக்கு அல்ல. ஏனெனில் எடுத்துரைப்போர் மாள்வார்கள் (இறந்து போவார்கள்) அவர்கள் கூறியது தொடர்ந்து நிற்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6

24-8-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மார்க்கங்கள் பல உண்டு இதில் இரண்டு மார்க்கங்களை சேர்த்து செய்தால் ஆகாதா?

ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், யோக மார்க்கம் என்பதெல்லாம் உண்டு. இவையாவும் கலந்தும் சாதனைகள் செய்ய முடியும். இருப்பினும் பக்தி மார்க்கத்துடன் யோக மார்க்கத்தை எப்படி இணைப்பது என்பதெல்லாம் ஓர் பெரும் சர்ச்சை ஆகிறது. பொதுவாக ஓர் மனிதனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு என்னவென ஆராய்தல் வேண்டும். ஒருவன் ஜீவனுடன் (உயிருடன்) இருக்க பிரதானமாக நாம் காண்பது சுவாசமே. சுவாசம் நிற்க மாண்டு (இறந்து) விட்டான் என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இச்சுவாசமே இவ்வுடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இணைப்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இது இப்படியிருக்க சுவாசத்தை கவனித்தல் வேண்டும். பொதுவாக சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிடும் காலத்தில் அதை நிதானமாக உள்ளிழுக்க வேண்டும். இதை விட நிதானமாக வெளிவிடுதல் வேண்டும். சுவாசம் உள்ளிழுக்கும் காலத்தில் ஓர் மந்திரம் சொல்ல காற்றுடன் மந்திரமும் உள் செல்ல பெரும் நன்மைகள் உண்டாகும். இவ்விதமே காற்று வெளி செல்லும் காலத்தில் அம்மந்திரத்தின் மறுபகுதி சொல்ல நன்மை தரும். ஏனெனில் உள் சென்ற காற்று மந்திரத்துடன் வெளிவந்து வியாபிக்கும் (பரவும்). உள்சென்ற காற்று தனக்கு மட்டும் உபயோகமாகியும் வெளி செல்வது மற்றவர்களுக்கும் பயன் கொடுக்கும் என்கின்ற தத்துவம் இதில் பூர்த்தியாகின்றது. இந்நிலையில் சுவாசம் உள்ளிழுக்கும் காலத்தில் ஓங்காரத்தை (ஓம்) மனதிற்குள் உச்சரித்தும் வெளிவிடும் காலத்தில் தன் இஷ்ட தெய்வத்தை கூறுவதும் பெரும் நன்மை அளிக்கும். இதன் வழியாக யோக நிலைகளும் பக்தி மார்க்கமும் ஒன்று கூடும். இதனை கடைபிடித்து வர இச்சுவாசமானது பின்பு அனுநிலையில் நரம்பு நாடிகளில் ஊடுருவ இது பிராணன் என்று அழைக்கப்படுகிறது. படிப்படியாக சுவாசம் வாய் மூக்கு வழியாக மட்டும் அல்லாது சருமத்தில் உள்ள துவாரங்கள் வழியாகவும் பிராணன் (காற்று) உள் சென்று வெளியாகும். இதன் வழியாக கோஷங்கள் உணர்ந்து அதன் பிறகு ஆன்மாவை உணர இயலும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #5

28-7-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நன்கென கற்றோர் அறிவுள்ளோர் பாண்டித்யம் உள்ளோர் மகாபாதகங்கள் செய்வது ஏன்?

கல்லாதோர் செய்ய அஞ்சும் (பயப்படும்) பாதகங்கள் இவர்கள் செய்கின்றனர். அப்போது கல்வி எதற்கு என்று ஓர் வினா இங்கு கேட்கப்படுகிறது. கல்வி என்பது இருவகையாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஒன்று அறிவும் ஒழுக்கமும் நலமும் தரும் கல்வி. மற்றொன்று வெறும் தகவல்களை தரும் கல்வியாகும். இத்தகைய தகவல்கள் நன்கென படித்தும் புள்ளி விவரங்களை உணர்ந்தும் சமயங்களில் இதனை கூறியும் எழுதியும் காட்டுவது வெறும் பாண்டித்யம் ஆகும். இத்துடன் ஒழுக்கமும் அறிவும் குறிப்பாக நல்அறிவு சேராது இருந்தால் அது கல்வியே இல்லை. கல்லாதோர் பலர் பெருமளவில் ஒழுக்கமும் அறிவாற்றலும் படைத்து நேர்வழியில் செல்கின்றனர். பாண்டித்யம் மேல் படிப்பு படித்தவர்கள் எல்லாம் பலர் தீய வழிகளிலும் மனம் வக்ர நிலை கொண்டு செயல்படுகின்றனர். இதிலும் நல்லோர் உள்ளனர். கற்றோர்களில் சிலர் தீயவர்களும் உண்டு. கல்லாதோர்களில் பல மகான்களும் உண்டு.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #4

30-6-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

குருநாதர் கருத்துக்கள் #4

கேள்வி: நல்லதோர் விக்னம் தீர்ப்போனை (வினாயகர்) வினாயகர் சதுர்த்தி அன்று மண்ணில் பிம்பம் உண்டாக்கி இதனை பூஜை செய்தபின் சில நாட்கள் கழித்து நீரில் எறிவதும் தசரா காலங்களில் துர்க்கையை மண்ணில் உருவாக்கி பூஜை செய்த பின் நீரில் எறிந்து சமயங்களில் மனிதர்கள் கண்ணீரை விடுகின்றனரே இதன் பொருள் என்ன?

வீட்டில் ஓர் குழந்தை பிறக்க அக்குழந்தை வடிவம் எடுத்ததால் ஆத்மா உண்டு என்று உணர்கிறோம். இது வளர்ந்து படித்து திருமணம் குழந்தைகள் உண்டாகிய பின் இறக்க இதனை சடங்குகளுடன் அக்னியிலோ இல்லை பூமிக்கோ செலுத்துகிறோம். கண்ணீர் தழும்ப திருப்புகின்றோம். இதனை உணர்ந்தால் வினாவுக்கு விடை எளிதாக உணர முடியும். வணங்குவது மூர்த்தியை அல்ல அதைக்குறிக்கும் சக்தியை இதை உணர்த்திடும் வழியாக மூன்று நாள் நன்றாக அதனை பூசித்த பின் சில நாட்கள் கழித்து நீரில் கலந்து விடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றானது அப்பூதமோடு கலந்து விடுகிறது. மண் மண்ணாகி விடுகிறது. இருப்பினும் அச்சக்தி பொதுவாக அங்கு நிரம்பி நிற்கின்றது என அறிந்து கொள்ள வேண்டும். மனிதன் தற்காலிக நிலையை உணர்த்திடவே இச்சடங்குகளை செய்து வருகின்றோம். பஞ்ச பூதங்களில் உருவானது அப்பூதங்களில் கலந்து விடும் என்றும் அதனை ஆட்டுவிக்கின்ற சக்தியானது என்றும் இருக்கும் என்பதை உணர்த்திடவே இத்தகைய ஓர் சிறு நாடகம் நடத்தப்படுகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #3

3-6-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

தேவையின்றி காரணமில்லாமல் பலர் சினம் (கோபம்) கொள்கின்றனர், இச்சினத்திற்கு காரணத்தை தேடினால் காரணமானது எதிர்பார்ப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோபம் பொங்குகிறது, தீர்வு கிடைக்காவிட்டால் ஏசுவதே (திட்டுவதே) நல்ல பொழுது போக்காகின்றது. இவையாவும் எதிர்பார்ப்புகளின் விளைவுகளே இதனை திருத்திட முயற்சிகள் வேண்டும். பணப்பையை விட்டுவிட்டால் எவருக்கேனும் உதவும். கோபத்தை விட்டுவிட்டால் எவருக்கும் உதவாது. இந்நிலையில் கோபத்தினால் பலப்பல வாய்ப்புகள் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த கோபத்தை நீக்காவிடில் மன அமைதி குறையும் என்பது மட்டுமல்லாமல் மன அமைதியோடு இறை நாட்டமும் குறையும் என்பது விதியாகும். ஏனெனில் அசையாமல் அளந்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் இரண்டு சிறு கற்கள் விழுந்தால் அந்த தண்ணீர் மொத்தமாக கலைந்து விடுகிறது. அந்த தண்ணீரின் அளவையும் காணமுடியாது என்பது பொது அறிவாகும். இத்தகைய நிலையில் கோபப்படுகின்றவர்கள் எமது வேண்டுகோளாக கோபத்தை குறைப்பீர்களாக மற்றவர்களை தீட்டுவதால் உங்களின் கர்ம நிலை ஏறுகிறது என்பது மட்டுமல்லாமல் மன நிம்மதியும் இழந்து விடுகின்றீர்கள். வாய்ப்புகள் சென்று விடுகிறது. கோபத்தின் விளைவாக அகங்காரம் அதிகமாகின்றது. ஆதலால் கோபத்தை உறுதியாக தவிர்த்தல் வேண்டும் அன்பர்களே.