அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #42

9-12-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மார்கழி மாதத்தில் நல்காரியங்கள் செய்யாதது ஏன்? அதனை ஏன் பீடை மாதம் என்று அழைக்கின்றனர்?

மார்கழி மாதமானது பீடை மாதம் அல்ல. அது பீடம் மாதம் என்று கூறுதல் வேண்டும். தெய்வங்கள் குறிப்பாக சக்தியை பீடத்தில் அமர்த்தி வழிபடும் காலம் மார்கழி மாதம் என்பதை உணர்தல் வேண்டும். மார்கழி மாதத்தில் தெய்வ காரியத்தை தவிர வேறு காரியம் செய்யக்கூடாது என பெரியோர்கள் கருதினர். அதற்காக நல்காரியங்கள் செய்யாதீர்கள் மற்ற காரியங்கள் யாதும் செய்யாதீர்கள் தெய்வ வழிபாட்டில் மட்டும் அமருங்கள் என்றால் மனிதன் கேட்க மாட்டான். இத்தகைய நிலையில் பீடம் என்பது சிறிதாக மாறி பீடை மாதமாக மாறி விட்டது. இது ஒன்றே இதற்கான விளக்கம் தெய்வ நல்காரியங்கள் தெய்வ காரியங்கள் செய்யும் காலம் என்பதால் மற்ற காரியங்கள் செய்யாதீர் என்பதே இதற்கு விளக்கமாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகவே இக்காலம் மண்டல காலம் என அழைக்கப்பட்டும் ஐயப்பன் வழிபாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் அக்காலத்தில் தெய்வ காரியங்கள் தெய்வ நல்காரியங்கள் எடுத்துச் செய்வீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

18-9-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: செல்வத்தை சேர்ப்பது தவறானதா?

சேர்ப்பது என்பது எப்பொழுதும் அளவிற்கு மீறியதையே குறிக்கின்றது. கலியுகத்தில் செல்வம் தேவையானது தான். இருப்பினும் நமது தேவைக்கு வேண்டுமானதை வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக கையில் நிலைத்து விட்டால் புத்தி துர்புத்தியாக மாறுவது எளிதாகின்றது. அவ்விதம் அதிகம் நீயும் சம்பாதித்தால் நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். உழைக்க வேண்டாம் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாம் கூறவில்லை. தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு மற்றதை நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இக்காலத்தில் பொறுப்புகள் அதிகமாகின்றது குடும்ப செலவுகள் பெரிதாகின்றது மேலும் தூரம் சென்று பணிபுரிய வாகனங்கள் தேவைப்படுகின்றது. இருக்க ஓர் இடம் தேவைப்படுகின்றது. இவையாவும் பூர்த்தி செய்த பின்பு சிறிது குழந்தைகளுக்கு எடுத்து வைப்பது உண்டு இதுவும் நியாயமானதே. இதற்கும் மேலாக சொத்துக்கள் சேகரித்து வைத்து நகைகள் வைத்து எப்பொழுது திருடன் வருவான் என பயம் கண்டு வாழ வேண்டாம். தேவைக்கு வேண்டியதை வைத்துக் கொள்ள வேண்டும் நல் காரியங்கள் செய்வதற்கு பல உண்டு இல்லாதோர் பலர் இருக்க குறிப்பாக தவிக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நலன் கொடுங்கள். மேலும் அன்னதானங்கள் இவையாவும் நலம் தருபவை என்கின்ற போதிலும் நிரந்தரமாக ஒருவருக்கு உண்ண வசதி செய்தால் அது மிகவும் சிறப்பாகின்றது. கல்வி தானம் ஒருவருக்கு தேவையான கல்விகள் பூர்த்தி செய்ய உதவினால் அதுவும் சிறப்பானது. நம் குழுந்தைகள் இருக்க ஒரிரு குழந்தைகளை படிக்க வைப்போம் உணவு நன்றாக உண்ண வைப்போம் என்கின்ற மனப்பான்மை வளர்த்தால் உம்மை உறுதியாக தெய்வம் வாழ்த்தும் தன் அருகில் சேர்க்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #40

18-07-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

கேள்வி: நான் என்ற சொல்லினை குறித்தே. நான் என்பது அகங்காரம் என்றால் எதார்த்தத்தில் எவ்விதம் நடப்பது? என்பதே வினாவாகும்.

அதன் பொருளாவது எதார்த்த வாழ்க்கையில் நான் என்ற சொல் அது இல்லாமல் அறிமுகபடுத்தும் போது என் பெயர் இது. நான் இது என்று ஆரம்பிக்கிறோம். எதார்த்த வாழ்க்கையில் நான் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் இல்லாமல் வாழ முடியாது. அப்படியானால் எப்படி வாழ்வது என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.

நான் என்கின்ற வாக்குதனில் பிழை இல்லை. நான் என்கின்றதை இயற்கையிடம் கோர்த்திடவே பிழை ஆகின்றது. நான் என்பது மற்றவர்களிடம் ஒப்பிட நாம் சிறப்பென கண்டும் மற்றவர் இதில் எளியோர் என காண்பதும் தவறாகின்றது. இவ்விதமே அகங்காரம் பிறவியும் காண்கின்றது. மற்ற சீவன்கள் அனைத்திலும் இறை சக்தியை உணர்ந்தால் அனைத்திலும் இறை நிலையை கண்டால் இவ்விதம் அகங்காரம் வளர்வதில்லை. பின்பு நான் என்பதில் பிழையும் இல்லை என்றும் எடுத்துரைத்தோமே. நான் பெரியோன் மற்றவர் எல்லாம் தாழ்ந்த நிலையில் உள்ளனர். நான் சிறப்பானவன் மற்றவர் எளியோர். நான் செல்வந்தன் மற்றவர்கள் ஏழைகள். நான் கல்வியில் சிறந்தவன். மற்றவர் மூடர்கள் என்பதெல்லாம் எண்ணத் துவங்கினால் அகங்காரம் வளரும் என்பதேயாகின்றது. வாக்கில் பிழை இல்லை. நாம் அதை உபயோகிக்கும் மனநிலையில் தவறாகும் என்றும் இங்கு விளக்கிட்டோமே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

28-6-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

கேள்வி: இறைவனின் நாமத்தை தொடர்ந்து கூறுவதன் பலன் என்ன?

இறைவனும் நாமமும் வேறல்ல. தெய்வ நாமத்தை நாம் முதலில் வசப்படுத்துகின்றோம். இதனை குருவிடம் பெற்றும் இல்லையெல் நாமாக நாடியும் இவ்வாக்குகளை ஓதிக்கொண்டே இருக்கின்றோம். நல்வழியில் சிரத்தையுடன் இவ்விதம் செய்துவர பின்பு அந்நாமம் நம்மை வசப்படுத்துகின்றது. இவ்விதம் இருக்கும் போது தெய்வம் நம்மை வசப்படுத்தியதாக கண்டு கொள்ளலாம். இதுவே நாம மந்திரத்தின் விஷேசமாகும்.

கேள்வி: இவ்வுலகில் சிறந்த மந்திரம் எது?

ராம நாமம் ஆகும். இதிலும் குறிப்பாக சிறப்பான அதிர்ச்சிகள் உருவாக்குவது ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்கின்ற மந்திரமாகும். இதன் முன் ஓர் ஓம் சேர்த்தல் வேண்டும். அப்பொழுதே இம்மந்திரம் முழுமையாகிறது. இது பெரும் அமைதியை அளிக்கவல்ல மந்திரம் மட்டுமல்லாது தொடர்ச்சியாக சிரத்தையுடன் ஜெபிக்க முக்தியை அளிக்க வல்லது. இதனை நன்கு உணர்தல் வேண்டும். சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் ஜெபித்து வர அவர்களை இது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே நல்நிலையில் இருக்கின்றவர் பெருமுக்திக்கு சிவநாமம் கூறுவது நலம். இதன் பொருள் என்னவென்றால் ஹரிதனிலிருந்து ஹரனுக்கு சென்று ஹரன்தனிலிருந்து பரம்பொருளில் கலத்தல் வேண்டும் என்பதாகும். இதற்கு காரணம் உண்டு ஹரி என்பவர் காக்க வல்லவர் சாதாரண லௌகீக காரியங்கள் என்பதை தொட்டு அனைத்தும் அவர் சிரத்தையாக கூர்ந்து கவனிக்கிறார். இவ்விதம் இருக்க செல்வங்கள் கொடுப்பதும் அவனே சுக வாழ்வது அளிப்பவனும் அவனே. முக்தியை அளிப்பது ருத்திரன் என்றும் முதன்மையில் ஓர் முக்தி நிலைக்கு ஹரி அழைத்துச் செல்ல ஹரன் அங்கிருந்து பெருமுக்திக்கும் பிறவி இல்லா நிலைக்கும் அழைத்துச் செல்வான் என்பதே பொருளாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

4-5-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

காலமதன் முக்கியத்துவம் இங்கும் உணர்த்திட உள்ளோம்
காலத்தில் அனைத்தும் நடத்துதல் வேண்டும் என்றும்
காலமே அனைத்திற்கும் விதி என்றும்
காலமே பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியத்தில் நிற்பதென்றும்
காலமே அனைத்திலும் முக்கியத்துவம் காண்பது என்பேன்
காலமதில் முக்கியம் என்றிட்ட போதிலும்
காலமதை எவரும் பொருட்படுத்துவதில்லை
காலத்தில் ஓர் இடம் செல்ல வேண்டுமென்றால்
காலத்திற்குள் செல்லுதல் வேண்டும்
காலம் கடந்து செல்லுதல் பெருமையென்ற நிலை நவீன நிலையாக உள்ளது
காலம் தவிர்த்து செல்லுதல் தவிர்த்தல் வேண்டும் நீங்களும்
காலத்தின் முக்கியத்துவத்தை பொதுவாக கூறினோம்
காலத்தின் முக்கியத்துவம் ஆன்மீக நிலையில் கூறிட
காலமது சென்றிட்டால் ஞானமும் சென்றிடுமே
காலமது சென்றிட்டால் பிராப்தங்கள் விலகிடுமே
காலமது சென்றிட்டால் கிடைக்கக் கூடிய பாக்கியமும் விலகிடுமே
காலமதன் முக்கியத்துவம் பூஜை விதிகள் என்கின்ற வகைகளில் பார்த்தால்
காலத்தில் வராதோர் பயனற்ற நிலையும் காண்பரே
காலம் காலம் காலம் காலம் ஒன்றே காக்கும் ஏனெனில்
காலமும் சிவனும் ஒன்றே
காலத்திற்கும் மதிப்பினை கொடுக்கா விட்டால்
சிவனை அவமதிக்கும் நிலையும் காண்போம்.

ஓர் நாள் ஊதியம் சென்று விடும் என்றால் காலத்திற்குள் வேலை செய்யும் இடத்திற்கு ஓடுவதை அனைவரும் காண்கிறோம். இருப்பினும் தெய்வத்தை காக்க வைப்பது சகஜ நிலை ஆயிற்று. இவ்விதம் இருப்பது ஆன்மீக நிலைக்கும் சீரானதல்ல.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

7-4-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மந்திரத்திற்கும் பலன் உண்டு என பலரும் அறிந்ததே. இறைவனின் நாமம் தனியென கூறினால் அதற்கு என்ன பலன்?

இறைவனும் அவன் நாமமும் தனியல்ல என்றும் இறைவனே நாமம் நாமமே இறைவனும் என்பதே விதியாகும். அவன் நாமத்தை எப்பொழுதும் கூறிக்கொண்டே இருக்க அவனே அருகில் இருக்கும் நிலையும் உண்டு. மந்திரங்கள் தந்திரங்கள் என்பதெல்லாம் அவசியமற்றதாகும். வெறும் நாமம் ஒன்றே ஜெபித்து வர அதிலிருந்து மாறாமல் இருந்தால் இறைவனை நாம் அங்கு சென்று வழிபட்ட பலன் உண்டாகி முக்திக்கும் வழி தானென உண்டாகும். பின்பு மந்திரம் தந்திரம் எல்லாம் என்பதெல்லாம் எதற்கு? மன சிரத்தை மனம் ஓர் நிலைப் படுத்தவே அனைத்தும். மாற்றாக சில காரியங்கள் சாதித்தல் வேண்டுமென்றால் இதற்கு மந்திரங்கள் தேவையானது. இறைவனை அடைதல் வேண்டும் என ஓர் நோக்கம் மட்டும் நிலைத்திருந்தால் தெய்வ நாமம் சதா (எப்பொழுதும்) உரைப்பது மட்டுமின்றி சதா தெய்வ எண்ணத்துடன் வாழ்வதே போதுமானது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

11-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது? துயரம் எது? என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை. துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும் ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும் அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

12-2-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகம் இல்லை தெய்வத்தை நாடி செல்லும் காலங்ளில் உடலை அடக்க வேண்டுமா?

ஆம் அடக்க வேண்டியது உடலே என்றும் கூற இயலும். ஏனெனில் உணர்ச்சிகள் பொதுவாக ருசி கண்கள் வழியே காணுதல் காது வழி கேட்டல் ஸ்பரிசம் (தொடு உணர்ச்சி) உணர்வுகள் அனைத்தும் அடக்குதல் வேண்டும். இருப்பினும் இவையாவும் அடங்குவதற்கு எது உபயோகம் என சிந்தித்தால் மனமே என நன்கு உணர்தல் வேண்டும். மனமதை முழுமையாக அடக்குதல் வேண்டும். ஓர் பொருள் உட்கொள்ள தகாது என உணர்ந்தும் நாக்கின் ருசிக்கு அடிமையாகி அதை சாப்பிடுகின்றோம். அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம் குறிப்பாக கொழுப்பு சக்தி அதிகமா இருக்கும் நபர் இதை நன்கு உணர்வார். வேண்டாம் என மனம் கூறிய பின்பும் மீறி ருசிக்கு அடிமையாகி சாப்பிடுகின்றனர். மனதில் திடமிருந்தால் இது நேரிட்டிருக்காது இந்நிலை காண மனதை உறுதிப்படுத்த வேண்டும். மனதை திடப்படுத்த வேண்டும் மனம் நம் வசம் இருத்தல் வேண்டும் நம் மனம் கட்டுக்குள் அடங்கி விட்டால் உடல் நம் கட்டுக்குள் அடங்கி விடும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #34

16-1-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஏகன் என்றால் என்ன? ஏகனை அடைய என்ன வழி? அதாவது ஏகனுக்குள் செல்ல என்ன வழி?

இதற்கு விடையானது வினாவைப் போல் எளிதாகவும் கடினமாகவும் உள்ளதாம். ஏனெனில் ஏகன் என்னவென வினாவிட்டால் அதற்கு விடை எளிதாக ஒன்று கூறுவோம். இவ்வொன்று என்பது என்னவென்றால் இது கடினமான விடையும் ஆகின்றது. ஒன்று ஏகம் என்பது பரம்பொருள் பரம்பொருள் என்பது என்னவென வினாவிட்டால் அது சத்தியம் அதுவே தூய்மை அதுவே மாசற்றது என்பதெல்லாம் விளக்கிக் கொண்டே போக இயலும். இருப்பினும் கேள்வி இதல்ல. ஏகனை அடைய என்ன வழி என்பதேயாகின்றது.

ஏகன் எங்கு இருக்கின்றான் என்பதை முதன்மையில் உணர்தல் வேண்டும். ஏகன் அனைத்திலும் உள்ளான் என்பதை உணர்ந்து அத்தகைய ஏகன் நமக்குள்ளும் உள்ளான் என்பதை உறுதியாக நம்புதல் வேண்டும் என்பதே முதல் படியாகின்றது. அந்த உள்ளிருக்கும் ஏகனை அடைதல் வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டுமென சிந்தித்தால் உள்ளுக்குள் செல்லுதல் வேண்டும் என விடையும் எளிதாக கிடைக்கின்றது. இதுவரைக்கும் எளிதாகவே உள்ளது இதற்கும் மேலாகவே கடினம் எவ்விதம் அடைகின்றது என்பது இதற்கு எளிதான வழிகள் இல்லை என்பதும் இங்கு யாம் எடுத்துரைக்கின்றோம். உள் செல்லுதல் வேண்டும் மனம் முழுமையாக உள்தனில் நிலைத்தல் வேண்டுமென்றல் நம் எண்ணம் வெளியாக செல்லுதலாகாது என்பதே இதற்கு விளக்கமாகின்றது. எண்ணம் வெளியாக செல்லுதல் வேண்டாம் என்றால் கட்டுப்பாடு வேண்டும் என்றும் வெளியாக நாம் கண்பது அநித்யமானது (உண்மையில்லாதது) என்றும் நித்யமாக நிலைப்பது ஏகன் மட்டுமே என்றும் மனதில் உறுதியாக நிறுத்தி இயன்ற அளவிற்கு மனமதை உள் நிறுத்தல் வேண்டும் என்றும் விளக்கமாக இங்கு அளித்தோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

20-12-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீக பாதையில் செல்லும் காலத்தில் அன்பு காட்டுவது விடுதல் வேண்டுமோ?

அடிப்படையாக கூறுவது அன்பே சிவம் என்று அனைத்தும் அன்புக்குரியதாம். குடும்பத்தில் அன்பு காட்ட வேண்டாம் என்று யாம் கூறியதில்லை. குடும்பத்தில் காட்டும் அன்பை உலகத்தில் காட்டுவாய் என்றே கூறுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டுதல் வேண்டும். குறுகிய குடும்பத்தில் காட்டிய அன்பு வெளியில் உள்ள படைப்புக்கு அணைத்திற்கும் காட்டுதல் வேண்டும் என்பதே உண்மையான ஆன்மீக நிலை. இதனை உணராமல் அன்பு காட்டுவது தவறு. அன்பு காட்டாதிருந்தால் ஆன்மீக வளர்ச்சி உண்டாகும் என எண்ணிக் கொண்டால் இது பாதாளத்திற்கே செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அன்பு அன்பு அன்பு ஏனெனில் நாம் இன்று இங்கு நிலைப்பதே இறைவனின் அன்பின் விளைவாகும் என்பதை மறவாது அவ்அன்பினை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும் அனைத்து ஜீவராணிகளும் உமது அன்பை பெறுதல் வேண்டும் என்பதே ஓர் நோக்கமாகக் கொண்டால் அதுவே ஜெயம் என கூறுகின்றோம்.