அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #52

15-4-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆத்ம ஞானம் நாடும் பொழுது நிராகரிப்பு (எதுவும் வேண்டாம் என்பது) வேண்டுமோ?

எதார்த்த நிலையில் இறைவனை நாடி ஆத்ம நிலை உணர வேண்டும் என எண்ணுவோர் கட்டுப்பாட்டுடன் இருத்தல் வேண்டுமே ஒழிய நிராகரிப்பு அவசியமற்றதாகும். மாற்றாக முழுமையாக துறவம் கண்டோன் நிராகரிப்பு செய்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. ஆச்சார்யம் எனும் நிலை கண்டால் அங்கு முழுமையாக நிராகரிப்பு இல்லை என்பதே கருத்தாகின்றது. இதற்கு சான்றாக கோத்திர ரிஷிகள் இருந்தார்கள். இக்காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்தே இவ்வினா எழும்பி உள்ளது. எது எவ்விதம் இருந்த போதிலும் மற்றவர்களை வழி நடத்துவோர் தான் செல்லும் பாதை முதன்மையில் சீராக்குதல் வேண்டும் தாம் அடுத்தவர்க்கு கூறுவதை தாமே பின்பற்ற வேண்டும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து ஆன்மீக பாதையில் செல்ல விரைவில் ஆத்ம ஞானங்கள் உண்டாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #51

23-1-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: கொடுத்த வாக்கு காப்பாற்ற இயலாதவர் வாக்கானது நீரில் எழுதியது போல் என்பார்கள் இதன் பொருள் என்ன? இதற்கு உள் அர்த்தம் உண்டா?

பொது அறிவின் வழியில் இதை சிந்திக்க நீரில் எழுதியது அவ்வடிவத்தில் நிலைப்பதில்லை என்றும் உடனடியாக மறைந்து விடுவதாக நாம் அறிகின்றோம். அத்தகைய நிலை தான் பொய்யரின் வாக்கும் இந்த வினாவின் விளக்கம் எளிதாகின்ற போதிலும் மறு விளக்கம் ஒன்று அளிக்க உள்ளோம். இத்தகைய நீர் என்கின்ற போதிலும் திருவருள் என்பது அதனுடன் சேர திருநீரில் எழுதியது அனைத்தும் நற்பலனைத் தரும். உலகத்தில் லட்சக்கணக்கான பூஜ்யங்கள் இருந்த போதிலும் இறையருள் என்கின்ற ஒன்று அதனுடன் சேர்ந்திடவே எண்ணிக்கை உண்டாகின்றது. இதனை மனதில் நிறுத்தி சிந்தித்து செயல்படுவதும் நன்றே ஏனெனில் திருவருள் இன்றி எதுவும் இல்லை திருவருள் இன்றி அனைத்தும் சூன்யமே என்ன வடிவங்களில் இறைவனை நீங்கள் வணங்கிய போதிலும் முடிவானது அனைத்தும் பிரம்மமே என்பதாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #50

6-10-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

உறுதியாக எதுவும் நிலைப்பதில்லை என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். கர்ப்பவாசம் கண்ட அனைத்திற்கும் அழிவுண்டு என்பதையும் உறுதியாக மனதில் வைக்க வேண்டும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் வந்தவர் செல்லுதல் வேண்டும் மத்தியில் ரோகங்கள் நோய்கள் என்பதெல்லாம் காணுதல் வேண்டும் என்பது இறைவனின் விதி மட்டுமல்லாது அவனின் லீலையும் ஆகும். ஏனெனில் கடினங்கள் கொடுத்து பிறவி அறுக்கும் சூட்சுமத்தை காட்டுகின்றான் என்பதை உணர வேண்டும். இவ்விதமிருக்க சென்றவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுவீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #49

8-9-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நீலன் (சனிஸ்வர பகவான்) அவன் கொடியவன் என பலரும் கூற நீலன் கொடிய காரியங்களை மட்டும் செய்கின்றவன் அவனை நேரக நின்று வணங்கக் கூடாது சாய்ந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர் இதன் நிலை என்ன விளக்க வேண்டும்?

நீலன் (சனிஸ்வர பகவான்) தீயவன் அல்ல கெட்டவன் அல்ல கிரகங்களில் அவன் ஞானகாரகன் என பட்டம் பெற்றவனும் ஈஸ்வரன் என கூட்டு பெயரும் கிரகங்களில் அவனுக்கு மட்டுமே. நீங்கள் செய்த பூர்வ ஜென்மதீய கர்மங்களின் பாக்கியை நீக்கவே இவன் ஜாதகத்தில் வருகை தருகின்றான். இது சிந்தித்தோமானால் நலம் தருபவர் என்று புரியும் தீயதல்ல என்று அறிதல் வேண்டும். மேலும் இதனை விளக்கிட வீணாக அவன் பெயரை பலர் அழைப்பதும் கண்டோம் மற்றவர்களை திட்டும் போது அவன் பெயரில் ஈஸ்வரன் நீக்கி விட்டு முன்பாகம் மட்டும் கூறுகின்றனர் இது பெரும் தவறாகின்றது. ஏனெனில் அவன் நாமத்தை கூறியவுடன் அவன் பார்வை உங்கள் மீது திரும்புகின்றது. கருணை வடிவமான அவன் மேலும் சில கடினங்களை கொடுத்து கர்மத்தை தீர்க்கின்றான். இவ்விதமிருக்க தேவையற்ற காலங்களில் மற்றவர்களை திட்டுவதற்கும் ஈஸ்வரனின் நாமத்தை கூறாதீர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #48

12-8-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: சமீப காலங்களில் கொடிய நோய்களினால் பலர் மாண்டு (இறந்து) விடுகின்றனர். இதில் குறிப்பாக குழந்தைகளும் சிசுக்களும் எப்பாவமும் அறியாதவர்களும் மாண்டு விடுகின்றனர்களே இது ஏன்? இவ்விதம் நடந்திட இறைவன் கருணையற்றவனா?

கேள்வி கேட்கின்றவர் வெறும் மாயையின் பிடியினால் இப்படி கேட்கின்றார். பிறப்பு என்றால் இறப்பு உண்டு. பெற்றவர்கள் அவர்கள் செய்த கர்மவினைகளை அனுபவித்துக் கொள்கின்றனர். ஏதோ ஜென்மத்தில் மற்றவரின் குழந்தைகளை அபகரித்தோ பிரித்தோ வேதனையளித்த காரணத்தால் இன்று அக்குழந்தைகளின் பெற்றோர் பட்ட வேதனைகளை அனுபவிக்கின்றனர். யாம் கூறுவது கொடுமையாகவே உங்களுக்குத் தோன்றும் இருப்பினும் உண்மை நிலை இதுவே. எந்த அளவிற்கு இந்த பூமியும் தாங்கும் என்பதை சிறிது சிந்தித்துக் கொள்ளுதல் வேண்டும். மாயைப் பற்றி எமக்கு யாதும் தெரியாது யாம் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் கூறிவிட்டால் உண்மையான நிலையை நீ உணரவில்லை என்பதே பொருளாகின்றது. விதிவிலக்கு இங்கு இல்லை. நீ பார்ப்பது ஆத்மாவை அல்ல வெறும் உடலை என்று வருத்தத்துடன் யாம் கூறுகின்றோம். இருப்பினும் இது துக்கம் தரும் நிலை என யாம் எடுத்துரைப்போம். இதிலிருந்து மீள என்ன வழி என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். மற்றவை அனைத்து வீண் வாக்குவாதத்தில்தான் செல்லும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #47

16-7-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: கடைத் தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு என்ற வாக்கியத்திற்கு முழு அர்த்தம் என்ன?

மற்றவர்கள் பொருட்களை அபகரித்து தெய்வத்திற்கு அளிப்பது சிறந்ததல்ல என்பதே கருத்தாகின்றது. தன் உழைப்பில் சேமித்ததை தெய்வத்திற்கு அளிப்பதே சிறப்பாகின்றது. பல தவறுகள் செய்த பின் இறைவன் காப்பான் என எண்ணம் பலருக்கு உண்டு. கலியுகத்தில் இவ்விதம் ஓர் தோற்றமும் காணக்கூடும். இதைக் கண்டு மற்றவர்களும் தீயோருக்குரிய காலம் அவர்களே வாழ்கின்றனர் என கூறுகின்றனர். இது அவ்விதம் இல்லை நவீன கால அசையும் படங்களில் (சினிமா) நீங்களும் வசனங்களை கேட்டிருப்பீர்கள் தீயோரை ஆண்டவன் கைவிடுவான் என்பதும் உறுதியாக நல்லோரை சோதிப்பான் கைவிடமாட்டான் என்பதே இதன் பொருளாகின்றது. இவ்விதமிருக்க தீமை வழியில் சென்றால் லாபங்கள் உண்டாகும் என இளைஞர்கள் எண்ணுதல் தவறாகும் இவ்விதம் சென்றிட நஷ்டங்களே நேரிடும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #46

28-3-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: முக்தி பெறுதல் வேண்டும் என்கின்ற எண்ணம் எவ்வகைகள் உண்டு?

மூன்று விதங்கள் உண்டு ஒன்று முதலில் முக்தி அடைதல் வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் நிலைக்கும். அதற்கான முயற்சி இருக்காது அது சாதாரண நிலை. இரண்டாவது முக்தி காணுதல் வேண்டும் என்றும் அதற்கான சிறு சிறு பயிற்சிகள் செய்வதும் இதுவும் ஓர் சாதாரண நிலையே. மூன்றாவது முக்தி அடைதல் வேண்டும் என்று அக்னி போல் எண்ணமும் செயல்பாடும் இது உறுதியாக முக்தி அளிக்கும். இதற்கும் மேலாக இதனை விளக்க இயலாது. ஏனெனில் முக்தி அடைவதும் பிறவியிலிருந்து விடுதலை பெறுவதும் அவரவர் முயற்சியால் வருவது. இத்தகைய நிலையில் எவ்வளவிற்கு தீவிரம் கொள்கின்றோமோ அவ்வளவிற்கு வெற்றியும் உண்டு என அறிவோம் உழைப்போம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #45

1-3-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: குருவை எவ்விதம் அணுகுதல் வேண்டும்?

விசுவாசம் என்கின்ற நிலையில் அணுகுதல் வேண்டும். விசுவாசம் என்பதற்கு மறுபெயர் நம்பிக்கை. நம்பிக்கையானது பிரதானமாக எல்லாவித உறவிலும் எல்லா நிலையிலும் காண்கிறோம். நாளை நாம் இருக்கப் போகின்றோம் என்கின்ற நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றோம். நாளை நமக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செயல்படுகின்றோம். இவ்விமிருக்க நாம் நல்வழியில் சீடனாக அமைந்து நல்வழியில் நமக்கு குரு அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கையுடன் விசுவாசம் நிலைத்திட அனைத்தும் பெற்றிட இயலும். இரண்டாவதாக எண்ணம் போல் வாழ்க நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ அவ்விதமே வாழ்வோம் எண்ணம் சிறிது பழுது பட்டு போனாலும் அவ்விதமே நமது வாழ்க்கையும் அமையும் என்பதை மறக்காமல் வாழுதல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #44

2-2-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: வேள்விகள் என்பதெல்லாம் வெறும் செலவினம் தானே? அப்பொருள்கள் யாவும் நல்வழிக்கு உபயோகப் படுத்தலாமே?

வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் வீணாவதில்லை. ஆண்டவனுக்கு நாம் கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் அவருக்கு எதுவும் தேவையில்லை என்கின்ற போதிலும் நாம் நமது திருப்திக்கென சிறிது அளிக்கின்றோம். உதாரணமாக ஒன்று கூறினால் விடை எளிதாக புரியும். விவசாயி ஒருவன் தானியங்களை விதைக்கும் காலத்தில் அது ஏன் தூவுகின்றான் அது வெறும் செலவு தானே மக்கள் பட்டினியாக இருக்க இவ்விதைகள் உதவுமே என எண்ணினால் அது தவறாகும். விதைகள் விதைத்தால் தான் உணவு உண்டாகும் என்பதை உணருதல் வேண்டும். இவ்விதமே நாம் சிறிதாக வேள்வியில் அளிக்கும் பொருட்கள் இறைவனின் அருள் பெறுவதற்கு உதவுகிறது. இத்தகைய அருளால் பல நன்மைகள் உண்டாகிறது. பெறும் நன்மைகள் உண்டாகின்றது. உதாரணமாக நல்ல மழை விளைவாக தானியங்கள் அமைதியின் விளைவாக பொருளாதார முன்னேற்றங்கள் என்பதெல்லாம் கிடைக்கக்கூடும். வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் சிறிதே. கிடைக்கும் இறையருள் பெரிதே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #43

5-1-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இறைவன் மட்டும் தான் சத்தியம் (உண்மை) என்றும் மற்ற அனைத்தும் அசத்யம் அநித்யம் (உண்மை இல்லாதது) என்கின்றதை பெரியோர்கள் கூறியுள்ளனர். அவ்விதமிருக்க வேதங்களும் அநித்யம் அசத்யம் என்றும் எடுத்தல் வேண்டுமா?

வேதங்கள் இறைவனின் கீழ்நோக்கும் முகமான ஐந்தாம் முகத்திலிருந்து வெளிவந்தாக கருதப்படுகின்றது. தெய்வத்தின் வாக்கு தெய்வம் போல் என்றும் நித்யமாகவே இருக்கும் என்கின்றதால் வேதங்களும் நித்யமானதே. அசத்யமாக இருப்பதை வைத்து சத்யத்தை உணருதல் இயலும். இதற்கு உதாரணமாக தூக்கத்தில் கனவில் ஓர் காட்சி காண அதில் புலி ஒன்று நம்மை விரட்டுவதாக கண்டு கொண்டால் அந்நேரத்தில் அக்காட்சியானது முழுமையாக உண்மையாகவே தோற்றம் அளிக்கும். நமக்கு பயம் தோன்றி சட்டென்று எழுந்து ஒடத் தோன்றும். முழித்தால் அது கனவு என உணருவோம். இருப்பினும் அக்காலத்தில் நடைபெற்றது நமக்கு உண்மையாகவே தோன்றியது அல்லவா? இவ்விதம் இங்கிருக்கும் பொய்யான உலகத்தில் காணும் தோற்றங்கள் அனைத்தும் சட்டென்று நாம் முழிக்கும் போது இவையாவும் உண்மையல்ல உண்மையென்பது ஆண்டவன் ஒன்றே என்கின்ற ஓர் நிலை உண்டாகும். இருக்கும் போது அதுவே உண்மையாக தோன்றும் மறைந்த பின் இவையாவும் இல்லை என்றும் நித்யமானது இறைவன் ஒன்றே என நாம் கூறுவோம். இந்நிலையில் வேதங்கள் இறைவனின் வாக்கு என்கின்றதால் அதிலிருந்து நாம் கற்க வேண்டியதை அனைத்தும் கற்று இறைவனை அடைந்தால் பின்பு அது ஒன்றே சத்தியமாகிறது இதற்கே நமது முயற்சிகள் வேண்டும்.