11-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: சுகம் ஏன் நிலைப்பதில்லை?
சுகம் எது? துயரம் எது? என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை. துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும் ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும் அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.