பாடல் #93

பாடல் #93: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

விளக்கம்:

இறைவன் வழங்கிய ஆகமங்கள் எவ்வளவு என்று எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்க அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருக்கும் இறைவனே உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக வீசிக்கொண்டு இருக்கின்றான்.

பாடல் #94

பாடல் #94: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

விளக்கம்:

நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனை எனது நெஞ்சத்துள் வைத்து இரவு பகல் பாராமல் எப்போதும் அவனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன். எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.