பாடல் #74

பாடல் #74: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே.

விளக்கம்:

சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் சிவாகமம் என்ற பேர் பெற்று பெருமை வாய்ந்த ஆகமங்களை அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல அவரின் திருவடிகளை வணங்கி பெற்றுக்கொண்ட பின் ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திரு நடனத்தைக் கண்டு களித்து அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

பாடல் #73

பாடல் #73: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாடொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

விளக்கம்:

குருநாதராக வந்த இறைவனின் இணையில்லாத திருவடிகளை என் தலை மேல் வைத்துக்கொண்டு அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்திக்கொண்டு சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனை தனது திருமுடியில் அணிந்துகொண்டிருக்கும் அரன் என்று அழைக்கப்படும் அந்த இறைவனின் பெருமைகளைப் போற்றி அவன் திருவடிகளை தியானித்துக் கொண்டு நாள்தோறும் அவன் அருளிய ஆகமங்களை சொல்கின்றேன்.