பாடல் #1255

பாடல் #1255: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.

விளக்கம்:

உயிர்களுக்குள் இருக்கும் மூலாதாரமானது நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் வடிவத்தில் சக்திமயமான சக்கரமாக இருக்கின்றது. அதை தியானம் தவம் ஆகிய சாதகங்களின் மூலம் மாற்றி அமைக்கும் போது அதிலிருக்கும் குண்டலினி சக்தியானது எழுச்சி பெற்று சுழுமுனை நாடி வழியே மேலெழுந்து வரும் போது பிரகாசமான வெளிச்சமாக வருகின்றது. அந்த வெளிச்சத்திலிருந்து சத்தம் வெளிவருகின்றது. இந்த வெளிச்சமும் சத்தமும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சித் துளை வரை முழுவதும் நிறைந்து நிற்கும் போது அதன் நடுவில் அக்னியாக இருக்கும் சுடரே ஏரொளிச் சக்கரமாகும்.

பாடல் #1256

பாடல் #1256: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வன்னி யெழுத்தவை மாபல முள்ளன
வன்னி யெழுத்தவை வானுற வோங்கின
வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி யெழுத்திடு மாறது சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #1255 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் நடுவில் ஏரொளிச் சக்கரமாக இருக்கும் அக்னியின் எழுத்தானது ஒளி ஒலி வடிவத்தில் மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன. இந்த மாபெரும் சக்திகளே ஆகாயம் வரை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சக்திகளே மிகவும் பெரிய சக்தி மயமாக இருக்கின்றன. இந்த சக்திகளின் எழுத்துக்களை சரியாக வடிவமைக்கும் வழிமுறைகளை ஏரொளிச் சக்கரமே உள்ளிருந்து அறிய வைக்கின்றது.

கருத்து:

ஏரொளிச் சக்கரம் ஒளி ஒலி வடிவத்தில் இருக்கின்ற எழுத்துக்களை சரியாக அமைக்கும் வழி முறையை உள்ளுக்குள் இருந்து அறிவுறுத்தும். அந்த வழி முறைகளை சரியாக கடைபிடிக்கும் சாதகர்கள் இறைவனின் பேரொளியோடு இணைந்து விடுவார்கள்.

பாடல் #1257

பாடல் #1257: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

சொல்லிய விந்துவு மீராறு நாதமாஞ்
சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுருச்
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

விளக்கம்:

பாடல் #1256 இல் உள்ளபடி உள்ளுக்குள் இருந்து சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி மேலே ஏறி வந்த வெளிச்சத்திலிருந்து வெளிப்படும் சத்தங்கள் பன்னிரண்டு வகையான ஒலிகளாக இருக்கின்றது. இந்த பன்னிரண்டு வகையான ஒலிகளும் சாதகருக்குள் வீற்றிருக்கும் தலைவனாகிய இறைவனின் அம்சமாகவே இருக்கின்றன. இந்த பன்னிரண்டு வகையான ஒலிகளையும் அசபையாக (உச்சரிக்காமல்) மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் அவை பலவிதமாக பரிணமித்து மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களாக வெளிப்படும். இந்த நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களும் ஒன்று சேர்ந்து வெளிப்படும் போது மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்.

பாடல் #1258

பாடல் #1258: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமு மோங்கு மெழுத்துடன்
மேல்வரும் அப்பதி யவ்வெழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.

விளக்கம்:

பாடல் #1257 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும் போது அதனுள் அடங்கியிருக்கும் எழுத்தின் வடிவமாக வெளிச்சமும் பீஜமாக சத்தமும் வெளிப்படும் போது அந்த எழுத்துடன் சாதகருக்குள் இருக்கும் இறைவனும் சேர்ந்து வந்தால் வெளிப்படும் ஏரொளிச் சக்கரமானது உலகமாகவே விளங்கும்.

பாடல் #1259

பாடல் #1259: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடு மப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே.

விளக்கம்:

பாடல் #1258 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகமாகவே விளங்குகின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களாகவும் ஆகி விடுகின்றது. அந்த சக்கரத்தோடு வெளிச்சமும் சத்தமும் இறை சக்தியும் எழுத்து வடிவமும் ஒன்றாகச் சேரும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் எழுத்தானது பல விதமான உலகங்களாக விரிந்து சிந்திக்க முடியாத அளவு பல யோசனை தூரத்திற்கு பரவுகின்றது.

பாடல் #1260:

பாடல் #1260: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரிந்த வெழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த வெழுத்தது சக்கர மாக
விரிந்த வெழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த வெழுத்தினி லப்புற மப்பே.

விளக்கம்:

பாடல் #1259 இல் உள்ளபடி உலகங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவிய எழுத்தானது வெளிச்சமாகவும் சத்தமாகவும் இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகங்கள் முழுவதும் விரிந்து பரவிய அந்த எழுத்தே ஏரொளிச் சக்கரமாகவும் பிறகு பஞ்ச பூதங்களில் முதலில் நிலத்தின் தன்மையையும் அதன் பிறகு அதிலிருந்து நீரின் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது.

பாடல் #1261

பாடல் #1261: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினி லப்புற மவ்வன லாயிடும்
அப்பினி லப்புற மாருத மாயெழ
அப்பினி லப்புற மாகாச மாமே.

விளக்கம்:

பாடல் #1260 இல் உள்ளபடி வெளிப்பட்ட நீரின் தன்மையாகவே உலகங்களுக்கு ஏரொளிச் சக்கரமாக விரிகின்றது. அதன்பிறகு அந்த நீரின் தன்மையிலிருந்து நெருப்பின் தன்மையாகவும் பிறகு காற்றின் தன்மையாகவும் பிறகு அதுவே ஆகாசத்தின் தன்மையாகவும் மாறுகின்றது.

பாடல் #1262

பாடல் #1262: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஆகாச வக்கர மாவது சொல்லிடில்
ஆகாச வக்கரத் துள்ளே யெழுத்தவை
ஆகாச வவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச வக்கர மாவ தறிமினே.

விளக்கம்:

பாடல் #1261 இல் உள்ளபடி ஆகாசத்தின் தன்மையாக மாறிய எழுத்தின் வடிவமாக ஏரொளிச் சக்கரம் மாறுவது எப்படி என்று சொல்லப் போனால் பாடல் #1257 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்தின் உள்ளே இருக்கின்ற நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்களும் ஆகாசத் தன்மையில் இருக்கின்ற ஒரு எழுத்துக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் எழுத்து வடிவமே பிறகு ஓர் எழுத்தாகி கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் சிவானந்தத்தைக் கொடுக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் எழுத்து வடிவமே ஓர் எழுத்தாக எப்படி மாறி சிவானந்தத்தைக் கொடுக்கின்றது என்று அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

பாடல் #1263

பாடல் #1263: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அறிந்திடும் சக்கர மையைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

விளக்கம்:

பாடல் #1262 இல் உள்ளபடி சாதகர் அறிந்து உணர்ந்து கொண்ட ஏரொளிச் சக்கரத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களின் தன்மைகளும் ஐந்து மடங்கு பெருகி வெளிச்சமாகின்றது. இந்த ஏரொளிச் சக்கரத்தில் இருக்கின்ற அனைத்து தன்மைகளுக்கும் முதலாக சத்தமே இருக்கின்றது. ஏரொளிச் சக்கரத்திலிருக்கும் ஐந்து தன்மைகளும் வெளிச்சமும் நாதமும் ஒன்றாகச் சேர்ந்து மாறிய ஓர் எழுத்தே இறை நிலையில் தலைவர்களாக இருக்கின்ற தெய்வங்களாகவும் இருக்கின்றது. இதை முழுவதும் அறிந்து உணர்ந்து கொண்ட சாதகர் பேரொளியாகிய சிவசூரியனின் நிலையை அடைந்து விடுவார்கள்.

பாடல் #1264

பாடல் #1264: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அம்முத லாறுமவ் வாதி யெழுத்தாகும்
அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்
இம்முதல் நாலு மிருந்திடு வன்னியே
இம்முத லாகு மெழுத்தவை யெல்லாம்.

விளக்கம்:

பாடல் #1265 இல் உள்ளபடி சிவசூரியனின் நிலையை அடையக் காரணமான ஒரு எழுத்தே ஆதியான பரம்பொருளைக் குறிக்கின்ற எழுத்தாகும். சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்களுக்கு இந்த ஒரு எழுத்தே முதன்மையானதாக இருக்கின்றது. சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்கள் இறைவியின் சக்தி மயத்தைக் குறிக்கின்ற எழுத்துக்களாகும். இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களில் முதலில் இருக்கின்ற நான்கு சக்கரங்களுக்கு (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம்) நடுவில் (மணிப்பூரகத்திற்கும் சுவாதிஷ்டானத்திற்கும்) இருக்கின்ற தொப்புள் கொடியில் அக்னி வீற்றிருக்கின்றது. இந்த அக்னியிலிருந்தே ஏரொளிச் சக்கரத்தில் இருக்கும் நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்கள் எல்லாம் வெளிப்படுகின்றன.