பாடல் #147

பாடல் #147: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலியாகக் காட்டிய வாறே.

விளக்கம்:

மனிதர்களின் இந்த உடலானது நோய்கள் செய்த வினைகள் எல்லாம் முடிந்து போனபின் ஒரு நாள் முதுமை பெற்று நாடி நரம்புகள் செயலிழந்து எலும்புகள் பழுத்துத் தளர்ந்துபோக இறந்து போய்விடும். இறந்து போனபின் மற்றவர்கள் வந்து அந்த உடலின் மூக்கின் மேல் கைவைத்து மூச்சிருக்கின்றதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு மூச்சில்லை என்பது உறுதியானவுடன் துணியால் உடலை மூடி அதைக் கொண்டு போய் சுடுகாட்டில் வைத்து சடங்குகளைச் செய்தபின் புதைத்துவிட்டு (அல்லது எரித்துவிட்டு) திவசம் செய்யும்போது காகங்களுக்குச் சாதம் வைத்து அது இறந்தவர்களுக்குச் சென்று சேரும் என்று எண்ணி செய்கிறார்கள் மூடர்கள். இறந்தவர்களின் உயிரும் அங்கேயே இருப்பதில்லை இவர்கள் காகத்திற்கு வைக்கும் சாதமும் அவர்களால் உட்கொள்ளப் படுவதில்லை. இறந்தபின் மதிப்பில்லாத இந்த உடலின் மேல் நாட்டம் கொள்ளாமல் என்றும் நிலைத்திருக்கும் இறைவன் மேல் நாட்டம் கொள்ளுவது நல்லது.

பாடல் #146

பாடல் #146: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

காலும் இரண்டு முகட்டல கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளவும் புகஅறி யாதே.

விளக்கம்:

மனிதர்களின் இரண்டு கால்களே சுவர்களாகவும் முதுகுத் தண்டே அந்தச் சுவற்றிற்கு நடுவில் கூரையைத் தாங்கியிருக்கும் உத்திரமாகவும் உடலைச் சுற்றியிருக்கும் முப்பத்தி இரண்டு விலா எலும்புகளே சுவற்றைச் சுற்றி அது விழுந்துவிடாமல் இருக்கவேண்டி வைக்கப்பட்ட சட்டங்களாகவும் தலையே உத்திரத்தின் உச்சியிலிருக்கும் கூரையாகவும் இருக்கும் இந்த உடலாகிய வீடு எப்படி வீட்டின் மேலே இருக்கும் கூரை பிரிந்து விட்டால் வெறும் சுவர்களும் அதைத் தாங்கியிருக்கும் சட்டங்களும் மட்டுமே நிற்க உபயோகிக்க முடியாததாக ஒரு வீடு இருக்குமோ அதுபோலவே தலைவழியே மூச்சுக்காற்று வெளியேறி விட்டால் உடலும் இறந்துபோய் வெறும் சதையும் எலும்புகளும் மட்டுமே நிற்க வெளியில் சென்ற உயிர் மீண்டும் அந்த உடலுக்கும் புகுந்துகொள்ளும் வழி என்னவென்று தெரியாமல் நிற்கும். உயிராகிய ஆன்மா உடம்பிலிருந்து பிரிந்தால் உடல் மீண்டும் உயிர்பெறுவது இல்லை.

பாடல் #145

பாடல் #145: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்:

உயிர் உடலில் இருக்கும் வரை அவனுடன் வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர் சுற்றத்தார் ஊரார்கள் என்று அனைவருமே அவன் இறந்துபோன பின் ஒன்றாகக் கூடி சத்தம்போட்டு அழுது புலம்பிவிட்டு அவனுக்கு அதுவரை வைத்திருந்த பேரைச் சொல்லிக் கூப்பிடாமல் பிணம் என்று ஒரு பேரை வைத்துவிட்டு அனைவரும் சேர்ந்து அவனுடைய உடலை எடுத்துச்சென்று ஊருக்கு வெளியில் இருக்கும் சூரைப்புற்கள் நிறைந்த சுடுகாட்டில் வைத்து அதை எரித்துவிட்டு அந்த உடலைத் தொட்டதை தீட்டு என்று சொல்லி அதைப் போக்க ஆற்றினில் மூழ்கி எழுந்தபின் மெல்ல மெல்ல அவனைப் பற்றிய நினைவுகளையும் மறந்து போவார்கள்.

பாடல் #144

பாடல் #144: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

விளக்கம்:

தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட கூரையும் அதைத் தாங்கியிருக்கும் கழியும் நீண்ட காலம் உபயோகிக்கப்பட்டபின் ஒரு நாள் விழுந்துவிடும். அதுபோலவே நல்ல வினை தீய வினை ஆகிய இரண்டுவித வினைகளால் பின்னப்பட்ட இந்த உடலென்னும் கூரையும் அதைத் தாங்கியிருக்கும் மூச்செனும் கழியும் அந்த இருவினைகளின் பயன்களை முழுவதும் அனுபவித்தபின் முதுமை பெற்று ஒரு நாள் மூச்சு வெளியேறி இறந்துவிடும். கூரை இருந்த வரையில் அதனடியில் வசித்து வந்த மக்கள் கூரை விழுந்தபின் அதனோடே இறந்து விழுவதில்லை. அதுபோலவே மனிதன் வாழும்வரை அவனோடு கூடவே இருந்து அவனால் பயன்பெற்ற மனைவியும் குழந்தைகளும் அவன் இறந்து போனபின் அவனோடு கூடவே இறந்து போவதில்லை. உயிர் இறந்து மேலுலகத்திற்குத் தனியாகச் செல்லுகின்ற போது அதனுடனே பாதுகாவலர்கள் போல துணைக்கு வருவது அந்த உயிர் வாழும் போது செய்த விரதங்களின் பலன்களும் இறையருளால் பெற்ற ஞானங்களும் மட்டுமே. மற்ற எதுவும் அந்த உயிரோடு வருவதில்லை. எனவே வாழும்வரை இறைவனை நினைத்து காரியங்களைச் செய்து குருவின் அருள்பெற்று ஞானத்தை வளர்ப்பதே நல்லது.

பாடல் #143

பாடல் #143: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தரும் இறக்கின்ற வாறே.

விளக்கம்:

உயிர்களின் உடல் குயவன் செய்யும் மண் பாத்திரம் போன்றது. குயவன் பல பாத்திரங்கள் செய்தாலும் அவன் பயன்படுத்தும் மண் எதுவென்று பார்த்தால் அது களிமண் ஒன்றுதான். அதுபோலவே உயிர்களின் உடல் பலவகைப் பட்டதானாலும் ஆன்மா ஒன்றுதான். குயவன் செய்யும் மண் பாத்திரங்கள் ஒரே மண்ணில் செய்யப்பட்டாலும் இரண்டு வகையாக இருக்கின்றன. ஒன்று தீயினால் சுட்டப்பட்டு திண்ணென்று இருக்கும் பாத்திரம். இரண்டாவது தீயினால் சுடப்படாமல் பச்சை மண்ணாக இருக்கும் பாத்திரம். உயிர்களும் இருவகை உடல்களைத் தாங்கியே உலகிற்கு வருகின்றன. உயிர்களின் உடலோடு அவை செய்த தீவினைகளும் சேர்ந்தே இருக்கின்றன. எப்படி வானிலிருந்து மழை பெய்தால் சுடப்படாத பச்சை மண்ணாலான பாத்திரங்கள் கரைந்து மறுபடியும் களிமண்ணாகவே மாறிவிடுமோ அதுபோலவே உயிர்கள் இறைவனின் மேல் நாட்டமில்லாமல் தங்களின் தீவினைகளிலேயே கட்டுண்டு பச்சை மண்ணாகவே இருந்து ஒரு நாள் அழிந்து போகின்றன. இப்படி உலக வாழ்க்கை வாழ்ந்து இறந்து போகும் மனிதர்கள் எண்ணிலடங்காதவர்கள். எனவே நிலையில்லாத உடலின் மேல் நாட்டம் வைக்காமல் என்றும் நிலையான இறைவனின் மேல் நாட்டம் வைக்க வேண்டும்.