பாடல் #123

பாடல் #123: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்தும் சிவமாகவே இருக்கும் உண்மையையும் தேவர்களும் அமரர்களும் அறியாத பேரின்ப உலகையும் உயிர்கள் உய்வதற்கென்று தில்லை அம்பலத்தில் ஆடும் தம் திருவடிகளையும் பேரின்பம் சூழ்ந்த அருள்வெளியாகிய பரவெளியையும் இறைவன் தன் பெருங்கருணையால் உயிர்களுக்கு அளித்து அருளினான்.

பாடல் #124

பாடல் #124: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

விளக்கம்:

பரவெளி மற்றும் உலகத்தைச் சுற்றியிருக்கும் வெற்றிட வெளிகளில் (ஆகாயம்) இறைவன் பரவி இருக்கும் முறைகளையும் உயிர்களிடத்தில் அன்பு அடங்கி இருக்கும் முறைகளையும் பேரொளியாக இருக்கும் இறைவனிடத்தில் சிற்றொளியாகிய ஆன்மாக்கள் சேர்ந்து இருக்கும் முறைகள் அனைத்தையும் தம் பேரறிவு ஞானத்தால் அறிந்து தெளிவாக உணர்ந்து இருப்பவர்களே சிவயோகியர்கள் எனப்படும் சித்தர்கள்.

பாடல் #125

பாடல் #125: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத்து ஆறே.

விளக்கம்:

சித்தர்கள் என்பவர்கள் சிவ உலகத்தை இறைவனின் அருளால் மண்ணுலகிலேயே தரிசித்தவர்களாகவும் ஓசையும் அவ்வோசையின் முடிவில் இருக்கும் அமைதியையும் பேரானந்தத்தையும் தமக்குள்ளே உணர்ந்தவர்களாகவும் என்றும் அழிவில்லாதவர்களாகவும் மும்மல அழுக்குகள் இல்லாதவர்களாகவும் உலகப் பற்றுக்கள் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் உடம்புடன் இருக்கும்போதே இறைவனின் அருளால் முக்திபெற்றவர்கள். இவர்கள் பெற்ற முக்திக்கு முழுமுதல் காரணமாக இருந்தது முப்பத்து ஆறு தத்துவங்களே ஆகும். இவை ஆன்ம தத்துவம் இருபத்தி நான்கும் (ஆன்ம ஞானம்) வித்தியா தத்துவம் ஏழும் (கலை/அறிவு ஞானம்) சிவ தத்துவம் ஐந்தும் (பரம்பொருள் ஞானம்) ஆக மொத்தம் முப்பத்து ஆறு தத்துவங்கள் ஆகும்.

பாடல் #126

பாடல் #126: முதல் தந்திரம் – 1. உபதேசம்

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலாத ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்பரிய சிவங்கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.

விளக்கம்:

பாடல் #125 ல் கூறிய முப்பத்தாறு தத்துவங்களையும் முக்தி பெறுவதற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளைப் போல ஒவ்வொன்றாக இறையருளால் அறிந்து கொண்டு அதன் பயனாய் ஈடு இணையில்லாத பேரானந்தத்தை வழங்கும் பேரொளியை தமக்குள்ளே கண்டு வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத சிவத்தைத் தமக்குள்ளே தரிசித்து தாம்தான் சிவம் என்பதை உணர்ந்து தெளிந்தவர்களாக இறைவன் வழங்கிய இந்தப் பேரருளே தமது பிறவியின் பெரும் பரிசாக ஏற்றுக்கொண்டு அவன் வழங்கிய பேரானந்த நிலையிலேயே அமர்ந்து இருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.

பாடல் #127

பாடல் #127: முதல் தந்திரம் – 1. உபதேசம்

இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்து
இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

விளக்கம்:

சித்தர்கள் தாமே சிவம் என்பதை உணர்ந்து சிவம் போலவே அனைத்தும் தாம் தான் என்ற நிலையில் இருப்பார்கள். சிவம் செய்யும் ஐந்துவித தொழில்களையும் ரசித்தபடியே இருப்பார்கள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளின் தன்மைகளை உணர்ந்து இருப்பார்கள். தமக்கென செய்யும் செயல் பேச்சு என்று எதுவும் இல்லாமல் சிவத்தோடு ஒன்றி இருப்பார்கள் சித்தர்கள்.

பாடல் #128

பாடல் #128: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே.

விளக்கம்:

சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது எந்தவிதமான மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான். அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் இறைவனிடமிருந்து பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் சுத்தமான பரவெளியில்தான். அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில் அவர்கள் மனதிற்குள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து அத்திருநாமத்தில் லயித்து இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

பாடல் #129

பாடல் #129: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வது எவ்வாறே.

விளக்கம்:

பாடல் #128 ல் உள்ளபடி சமாதி நிலையில் இருக்கும் சித்தர்கள் அனைத்து உலகங்களும் சிவமாய் இருப்பதை தமக்குள்ளே தரிசித்துக்கொண்டார்கள். அப்படியே இருந்துதான் சிவனை விட்டுப் பிரியாது சிவனோடு கலந்து நிற்கும் சிவயோகமும் தம்முள்ளே கண்டார்கள் அப்படியே இருந்துதான் சிவபோகமான பேரானந்த நிலையையும் தமக்குள்ளே கண்டார்கள். அப்படி அவர்கள் இருக்கும் நிலையை யாம் வெறும் வார்த்தைகளால் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே அறிய முடியும்.

பாடல் #130

பாடல் #130: முதல் தந்திரம் – 1. உபதேசம்

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய் செழுஞ்சுடர் மாணிக்கமே.

விளக்கம்:

பாடல் # 129 ல் கூறியபடி பேரின்பத்தில் இருக்கும் சித்தர்கள் எந்த அளவு பேரறிவு ஞானத்தைப் பெற்று இருக்கின்றார்களோ அந்த அளவு அவர்களுக்கு தன் அருளை வழங்குபவன் ஆதியிலிருந்து இருக்கின்ற பரம்பொருளான சதாசிவமூர்த்தி. அவனே ஈடு இணை சொல்லமுடியாத தில்லையம்பலத்தில் உமாதேவியார் கண்டு களிக்க திருநடனம் ஆடுகின்ற போது மாலை நேரத்தில் சூரியன் மறையும் போது சிவந்து தெரியும் வானத்தையும் விட சிவப்பான சுடர்களுடைய பேரொளியைத் தரும் மாணிக்கம் போல இருப்பவன்.

பாடல் #131

பாடல் #131: முதல் தந்திரம் – 1. உபதேசம்

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதுஎன்ன பேறு பெற்றாரே.

விளக்கம்:

பாடல் #130ல் உள்ளபடி பேரொளியாய் இருக்கும் மாணிக்கத்தின் (சிவன் – செந்நிறம்) உள்ளிருந்து மரகதஜோதியாய் (சக்தி – பச்சை) சக்தியே சிவனுக்கு திருமேனியாக இருவரும் இணைந்து தில்லையின் பொன்னம்பலத்தில் ஆடும் திருநடனத்தைத் தம்முள் தரிசித்த சிவயோகியர் என்ன பேறு பெற்றார்களோ என்று வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு பெரிய பேறு பெற்றார்கள்.

பாடல் #132

பாடல் #132: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாய் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

விளக்கம்:

பாடல் 131 ல் உள்ளபடி சிவ சக்தியின் திருநடனத்தைத் தம்முள்ளே கண்ட சிவயோகியர் இந்த உலகத்திலிருந்து என்றும் பிரிந்துவிடாத (இறவாத) பெரும் வழியையும் இந்த உலகத்தில் மீண்டும் பிறக்காத (இறப்பில்லையேல் மீண்டும் பிறப்பும் இல்லை) பெரும் பயனையும் தில்லை பொன்னம்பலத்தில் தாம் தரிசித்த சிவசக்தியர் தம்மை என்றும் பிரியாமல் அவர்களுடனே பேரானந்தத்தில் என்றும் நிலைத்து இருக்கும் பெரும் பேறும் பேரானந்தத்தில் நிலைத்திருக்கும் நிலையில் உலகோடு எந்த செயலும் கொள்ளாமல் தனித்து தமக்குள்ளே தியானித்து இருக்கும் பெருமையும் ஆகிய அனைத்தையும் பெற்றார்கள்.