பாடல் #161: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.
விளக்கம்:
இந்த மனித உடலாகிய வீட்டிற்கு மேலும் கூரையில்லை (உச்சியில் தலை மட்டுமே) அடியிலும் செப்பனிட்ட தளமில்லை (காலுக்குக்கீழ் ஒன்றுமில்லை) வீட்டின் சுவரைத் தாங்கும் கழிகளும் இரண்டுதான் இருக்கின்றது (இரண்டு கால்கள் மட்டுமே) அதன் நடுவில் உத்திரத்தைத் தாங்கும் கழி (முதுகெலும்பு) ஒன்றுதான் இருக்கிறது. இப்படி இருக்கும் வீட்டிற்கு சொந்தக்காரனோ (மனித உயிர்) வீட்டை என்றும் அழியாமல் உறுதியாக வைக்கத் தெரியாமல் விட்டுவிட்டான் (சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை செலுத்தத் தெரியாமல் விட்டுவிட்டான்). வேலையால் (வினைக் கர்மங்கள்) செய்யப்பட்ட இந்த வெள்ளிக் கோயில் போன்ற உடல் (வெள்ளை நிற சுக்கிலத்தால் உருவானது) வீணே அழிந்து போகின்றது (இறந்து போகின்றது).
கருத்து: இறைவன் மனித உடலில் கூரையாக சகஸ்ரர தள பரவெளியையும் அடித்தளமாக குண்டலினி சக்தியையும் கால்களாக இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளையும் தாங்கும் முதுகெலும்பாக நடுவில் சுழுமுனை நாடியையும் கொடுத்து உடம்பை ஒரு கோயிலாக படைத்திருக்கின்றான். இருப்பினும் உயிர்கள் தம் உடலிலுள்ள குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் சேர்த்து என்றும் அழியாத உடலைப் பெறும் வழியைத் தெரிந்து கொள்ளாமல் தங்களின் வாழ்க்கையை வீணே கழித்து ஒரு நாள் அழிந்து போகின்றார்கள்.