28-7-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
நன்கென கற்றோர் அறிவுள்ளோர் பாண்டித்யம் உள்ளோர் மகாபாதகங்கள் செய்வது ஏன்?
கல்லாதோர் செய்ய அஞ்சும் (பயப்படும்) பாதகங்கள் இவர்கள் செய்கின்றனர். அப்போது கல்வி எதற்கு என்று ஓர் வினா இங்கு கேட்கப்படுகிறது. கல்வி என்பது இருவகையாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஒன்று அறிவும் ஒழுக்கமும் நலமும் தரும் கல்வி. மற்றொன்று வெறும் தகவல்களை தரும் கல்வியாகும். இத்தகைய தகவல்கள் நன்கென படித்தும் புள்ளி விவரங்களை உணர்ந்தும் சமயங்களில் இதனை கூறியும் எழுதியும் காட்டுவது வெறும் பாண்டித்யம் ஆகும். இத்துடன் ஒழுக்கமும் அறிவும் குறிப்பாக நல்அறிவு சேராது இருந்தால் அது கல்வியே இல்லை. கல்லாதோர் பலர் பெருமளவில் ஒழுக்கமும் அறிவாற்றலும் படைத்து நேர்வழியில் செல்கின்றனர். பாண்டித்யம் மேல் படிப்பு படித்தவர்கள் எல்லாம் பலர் தீய வழிகளிலும் மனம் வக்ர நிலை கொண்டு செயல்படுகின்றனர். இதிலும் நல்லோர் உள்ளனர். கற்றோர்களில் சிலர் தீயவர்களும் உண்டு. கல்லாதோர்களில் பல மகான்களும் உண்டு.
