28-6-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
கேள்வி: இறைவனின் நாமத்தை தொடர்ந்து கூறுவதன் பலன் என்ன?
இறைவனும் நாமமும் வேறல்ல. தெய்வ நாமத்தை நாம் முதலில் வசப்படுத்துகின்றோம். இதனை குருவிடம் பெற்றும் இல்லையெல் நாமாக நாடியும் இவ்வாக்குகளை ஓதிக்கொண்டே இருக்கின்றோம். நல்வழியில் சிரத்தையுடன் இவ்விதம் செய்துவர பின்பு அந்நாமம் நம்மை வசப்படுத்துகின்றது. இவ்விதம் இருக்கும் போது தெய்வம் நம்மை வசப்படுத்தியதாக கண்டு கொள்ளலாம். இதுவே நாம மந்திரத்தின் விஷேசமாகும்.
கேள்வி: இவ்வுலகில் சிறந்த மந்திரம் எது?
ராம நாமம் ஆகும். இதிலும் குறிப்பாக சிறப்பான அதிர்ச்சிகள் உருவாக்குவது ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்கின்ற மந்திரமாகும். இதன் முன் ஓர் ஓம் சேர்த்தல் வேண்டும். அப்பொழுதே இம்மந்திரம் முழுமையாகிறது. இது பெரும் அமைதியை அளிக்கவல்ல மந்திரம் மட்டுமல்லாது தொடர்ச்சியாக சிரத்தையுடன் ஜெபிக்க முக்தியை அளிக்க வல்லது. இதனை நன்கு உணர்தல் வேண்டும். சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் ஜெபித்து வர அவர்களை இது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே நல்நிலையில் இருக்கின்றவர் பெருமுக்திக்கு சிவநாமம் கூறுவது நலம். இதன் பொருள் என்னவென்றால் ஹரிதனிலிருந்து ஹரனுக்கு சென்று ஹரன்தனிலிருந்து பரம்பொருளில் கலத்தல் வேண்டும் என்பதாகும். இதற்கு காரணம் உண்டு ஹரி என்பவர் காக்க வல்லவர் சாதாரண லௌகீக காரியங்கள் என்பதை தொட்டு அனைத்தும் அவர் சிரத்தையாக கூர்ந்து கவனிக்கிறார். இவ்விதம் இருக்க செல்வங்கள் கொடுப்பதும் அவனே சுக வாழ்வது அளிப்பவனும் அவனே. முக்தியை அளிப்பது ருத்திரன் என்றும் முதன்மையில் ஓர் முக்தி நிலைக்கு ஹரி அழைத்துச் செல்ல ஹரன் அங்கிருந்து பெருமுக்திக்கும் பிறவி இல்லா நிலைக்கும் அழைத்துச் செல்வான் என்பதே பொருளாகின்றது.