அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #26

11-6-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பயம் என்பது என்ன? அது எவ்விதம் உருவாகிறது? அதை எவ்விதம் வெல்வது?

பயம் என்பது ஒரு மனநிலை என்பதை முதலில் உணர வேண்டும். இது நாமாக உருவாக்கும் ஒரு மானசீக பூதமென்பதை அறிய வேண்டும். பொதுவாக மனிதன் பயப்பட வேண்டியது இல்லை. இப்பயம் எதனால் வருகின்றது என்பதை நன்கு சிந்தித்தோம் என்றால் பயம் என்பது நமது என்கின்ற அந்தச் சொல்லினால் அந்த மனத் தன்மையால் நமது சொத்து, நமது சொந்தம், நமது பிள்ளைகள், நமது உயிர் என்றெல்லாம் சிந்திக்கும் போது பயம் ஏற்படுகின்றது. இவை இழந்து விடுவோமோ என்கின்ற அந்தப் பயமானது நம்மை முழுமையாகக் கவர்ந்து ஒருவித கிலியை (அச்சத்தை) உண்டாக்குகின்றது. அதாவது ஓர் மனநிலை இழப்போமோ என்கின்ற பயமாக மாறுகின்றது. இந்தப் பயத்தை எவ்விதம் வெல்வது என்பது ஓர் விளக்கத்தில் உண்டு. கீதையின் சாரமதை நன்கு உணர்ந்து கொண்டால் பயத்தை எவ்விதம் நீக்குவது என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். வரும்பொழுது ஒன்றுமில்லை செல்லும்பொழுதும் ஒன்றுமில்லை இடையிலிருப்பது அவன் அளித்தது என முழுமையாக உணர்ந்து கொண்டால் உயிரும் அவ்விதமே என உணர்ந்து கொண்டால் எதுவும் நஷ்டப்படுவதற்கில்லை. எதுவும் தொலைப்பதற்கில்லை. எதுவும் இழப்பதற்கும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்பு பயமும் இல்லை அச்சமும் இல்லை. இந்நிலை மாறுவதற்கு மன உறுதி வேண்டும். பொதுவாக இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் தானாக தைரியம் உருவாகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.