14-8-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
பலர் தேவையற்று கோபம் கொள்கின்றனர். நடப்பது வாழ்வது கூறுவது செயல்படுவது அனைத்தும் கர்ம விதிகளின் பலனாக கண்டு கொண்டால் கோபம் என்பது ஓர் தேவையற்ற மனநிலை ஆகின்றது அல்லவா? அடுத்ததாக கோபத்தால் நீங்கள் சாதிக்கப் போவது என்ன என்று வினாவக் கண்டால் சாதிப்பது ஒன்றுமில்லை. அடைவது நஷ்டநிலைகளே என்றும் உணர முடியும், இந்நிலையில் எப்பொழுதும் அமைதி ஆனந்தம் கொள்ள வேண்டிய மனதில் நாமாக கோபத்தை கொடுத்து கஷ்டப்படுத்துகின்றோம். இவ்விதம் கஷ்டப்படும் மனதால் இறைவனை தொழ முடியாது என்ற உண்மையை உணர வேண்டும். அன்று மாகாளி அவள் காளிதாசனை கண்டு உரைத்த வாக்குகள் என்னவென்றால் ஊருக்கு கதை சொல்லும் மனமது வதை கண்டால் அந்த தெய்வத்தின் முகம் வாடுமே. அதாவது மனம் ஒர் நிலையில் அமைதி இல்லாமல் இருந்தால் தெய்வத்தின் முகம் சுருங்குமாம் இவ்விதமிருக்க வீணாக சிறு சிறு காரியங்களுக்கு கோபம் கொள்ள வேண்டாம். அதற்கு ஈடாக எது கோபத்தை கொடுக்கிறதோ அதனை எளிதாக பேசி தீர்த்து விடலாம் என்கின்ற ஓர் நிலையைக் காண வேண்டும். இல்லையேல் மன அமைதி குறையும். உலகத்தில் இன்று உள்ள பெரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் கோபமே இந்த கோபத்தை நீக்கிட அகங்காரம் என்பது நீங்கி விடும் மனதில் அமைதி நிலவும் மனதில் இறைவனும் அமர்வான்.