25-6-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
கேள்வி: இறந்து சென்றவர்கள் பல பிறவி எடுக்கின்றனர் என்கின்ற நிலையில் ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகும் அவர்களுக்கு ஏன் ஸ்ரார்த்தம் தவசம் என்றெல்லாம் நடத்துதல் வேண்டும்?
இது உங்கள் மன திருப்திக்காக நடத்துகின்றீர்கள். ஓராண்டு உங்கள் திருப்திக்கு செய்தபின் வருகின்ற ஆண்டுகளில் அந்நாளில் அன்னம் பலித்து (அன்னதானம் செய்து) அந்த அண்ணதான புண்ணியத்தை அந்த ஆத்மாவிற்கு எங்கு இருந்த போதிலும் அங்கு சமர்ப்பணம் செய்வதே சிறந்த வழியாகின்றது. பசியுள்ளவனுக்கு அன்னதானம் செய்து அவன் உண்டு வாழ்த்துதல் வேண்டும். இங்கு உயர் குலத்தோன் கீழ் குலத்தோன் என்பது எதுவுமில்லை. ஆண் பெண் பேதமில்லை. பசி என்பது யாவர்கும் ஒன்றே. நன்றாக பசித்து பசி தீர்ந்த பின் வாழ்த்தும் வாழ்த்தே சிறந்த வாழ்த்தாகும். இவ்வழி செய்வதே நலம் தருவதாகும். மற்றவர்கள் ஆச்சாரம் அடிப்படையில் இவ்விதம் அவ்விதம் என்று கூறுவார்கள். இழுவு வீட்டில் உள்ளோர் ஓராண்டு காலம் ஆலயம் செல்லுதல் வேண்டாம் என்றும் கூறுவது உண்டு. இதுவும் எமது அபிப்பிராயத்தில் மடமையாகின்றது. விதி முடிவதற்கும் ஆண்டவனுக்கும் என்ன சம்பந்தம். சைவ நெறியில் உட்பட்டதாக ஒருவர் மாண்டுவிட்டால் காரியங்கள் அன்று முடிந்த பின்பே ஆலயத்திற்கு செல்லுதல் வேண்டும் என்பதே விதியாகும். இதில் சைவ சித்தாந்தத்தில் வழியுண்டு என்று கூறுகிறோம். மற்றவர்கள் கூறுவது ஆச்சார்ய முறைகளாகும். மதத்தை சார்ந்ததாகும் உண்மையான ஆன்மீகம் மதம் எங்கு முடிகின்றதோ அங்கு தான் துவங்கும். இங்கு வருபவர்கள் ஆன்மீகத்தை நாடுகின்றனர் என்கின்ற ஓர் கருத்தின் அடிப்படையில் இவ்விதம் கூறினோம்.
கேள்வி: மானசீக பூஜையில் ஆலய விதிமுறைகளின் படி பூஜை செய்ய முடியுமா?
உள்ளம் ஓர் ஆலயம் எனக் கணக்கிட்டால் நமது ஸ்வரமானது (மூச்சுக் காற்றானது) நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பு மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபகரணங்களாகவும் கண்களில் காணும் மின் ஒளியை ஆரத்தியாகவும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வளர்த்தல் வேண்டும். இவ்விதம் செய்திட்டால் உள்ளமானது ஓர் உத்தமமான ஆலமாகின்றது. அவ்விதம் ஆகிய பின் மற்ற தலங்களில் (ஆலயங்களில்) அலைய மனதிற்குத் தோன்றாது.