17-12-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
கேள்வி: சிறிது எட்ட நின்று பார் என்கிற வாக்கியத்திற்கு என்ன பொருள்?
இதற்கு சாட்சியாக நில் என்பது மறு விளக்கமாகின்றது. இது சிறிது கடினம் என்கின்ற போதிலும் முயற்சிக்க படிப்படியாக செய்ய இயலும். நமக்கு நான் இவ்வுடல் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். இரண்டாக எமக்கு எதுவும் நேரிடவில்லை என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும். ஏனெனில் ஆத்மாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது எளிதல்ல என்கின்ற போதிலும் சிறு சிறு காரியங்களில் துவங்கி பெரும் காரியங்களுக்குச் செல்லுதல் வேண்டும். நோயுற்ற நிலையிலும் எமக்கு எதுவும் நேரிடவில்லை என உரைக்கும் (கூறும்) சக்தியையும் பொறுமையையும் வளர்த்தல் வேண்டும். இது ஒன்றே ஆன்மிகத்தில் மேன்மையளிக்க வல்லதாம். என் செயலால் யாதும் இல்லை என்கின்றதையும் அனைத்தும் அவன் செயலே என்கின்ற மனப்பாண்மையும் முழுமையாக வளர்த்தல் வேண்டும். நான் பணி செய்கின்றேன் என் பணியால்தான் அனைத்தும் முன்னேறுகிறது என்கின்ற மனப்பான்மை நீக்குதல் வேண்டும். ஏனெனில் அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை என்கின்றது உண்மையான நிலை. இதை நன்கு உணர உணர ஆன்மிகத்தில் வளர்ச்சி பெறக் காண்பீர்கள். முக்கியமாக அனைத்தையும் சாட்சியாக நின்று பார்த்தல் வேண்டும். அனைத்திற்கும் சாட்சியமே நல்லது. வழக்கில் சாட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அமைதி காண்பீர்கள். இதுவே வாழ்க்கையிலும் பெறுதல் வேண்டுமெனில் அனைத்தும் சாட்சியாக பார் எட்ட நின்று பார் எமக்கு இது நடைபெறவில்லை என்பது போல் எட்ட நின்று பார்த்தல் வேண்டும் என்பதே பொருளாகின்றது.