18-07-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
கேள்வி: நான் என்ற சொல்லினை குறித்தே. நான் என்பது அகங்காரம் என்றால் எதார்த்தத்தில் எவ்விதம் நடப்பது? என்பதே வினாவாகும்.
அதன் பொருளாவது எதார்த்த வாழ்க்கையில் நான் என்ற சொல் அது இல்லாமல் அறிமுகபடுத்தும் போது என் பெயர் இது. நான் இது என்று ஆரம்பிக்கிறோம். எதார்த்த வாழ்க்கையில் நான் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் இல்லாமல் வாழ முடியாது. அப்படியானால் எப்படி வாழ்வது என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.
நான் என்கின்ற வாக்குதனில் பிழை இல்லை. நான் என்கின்றதை இயற்கையிடம் கோர்த்திடவே பிழை ஆகின்றது. நான் என்பது மற்றவர்களிடம் ஒப்பிட நாம் சிறப்பென கண்டும் மற்றவர் இதில் எளியோர் என காண்பதும் தவறாகின்றது. இவ்விதமே அகங்காரம் பிறவியும் காண்கின்றது. மற்ற சீவன்கள் அனைத்திலும் இறை சக்தியை உணர்ந்தால் அனைத்திலும் இறை நிலையை கண்டால் இவ்விதம் அகங்காரம் வளர்வதில்லை. பின்பு நான் என்பதில் பிழையும் இல்லை என்றும் எடுத்துரைத்தோமே. நான் பெரியோன் மற்றவர் எல்லாம் தாழ்ந்த நிலையில் உள்ளனர். நான் சிறப்பானவன் மற்றவர் எளியோர். நான் செல்வந்தன் மற்றவர்கள் ஏழைகள். நான் கல்வியில் சிறந்தவன். மற்றவர் மூடர்கள் என்பதெல்லாம் எண்ணத் துவங்கினால் அகங்காரம் வளரும் என்பதேயாகின்றது. வாக்கில் பிழை இல்லை. நாம் அதை உபயோகிக்கும் மனநிலையில் தவறாகும் என்றும் இங்கு விளக்கிட்டோமே.