5-1-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: இறைவன் மட்டும் தான் சத்தியம் (உண்மை) என்றும் மற்ற அனைத்தும் அசத்யம் அநித்யம் (உண்மை இல்லாதது) என்கின்றதை பெரியோர்கள் கூறியுள்ளனர். அவ்விதமிருக்க வேதங்களும் அநித்யம் அசத்யம் என்றும் எடுத்தல் வேண்டுமா?
வேதங்கள் இறைவனின் கீழ்நோக்கும் முகமான ஐந்தாம் முகத்திலிருந்து வெளிவந்தாக கருதப்படுகின்றது. தெய்வத்தின் வாக்கு தெய்வம் போல் என்றும் நித்யமாகவே இருக்கும் என்கின்றதால் வேதங்களும் நித்யமானதே. அசத்யமாக இருப்பதை வைத்து சத்யத்தை உணருதல் இயலும். இதற்கு உதாரணமாக தூக்கத்தில் கனவில் ஓர் காட்சி காண அதில் புலி ஒன்று நம்மை விரட்டுவதாக கண்டு கொண்டால் அந்நேரத்தில் அக்காட்சியானது முழுமையாக உண்மையாகவே தோற்றம் அளிக்கும். நமக்கு பயம் தோன்றி சட்டென்று எழுந்து ஒடத் தோன்றும். முழித்தால் அது கனவு என உணருவோம். இருப்பினும் அக்காலத்தில் நடைபெற்றது நமக்கு உண்மையாகவே தோன்றியது அல்லவா? இவ்விதம் இங்கிருக்கும் பொய்யான உலகத்தில் காணும் தோற்றங்கள் அனைத்தும் சட்டென்று நாம் முழிக்கும் போது இவையாவும் உண்மையல்ல உண்மையென்பது ஆண்டவன் ஒன்றே என்கின்ற ஓர் நிலை உண்டாகும். இருக்கும் போது அதுவே உண்மையாக தோன்றும் மறைந்த பின் இவையாவும் இல்லை என்றும் நித்யமானது இறைவன் ஒன்றே என நாம் கூறுவோம். இந்நிலையில் வேதங்கள் இறைவனின் வாக்கு என்கின்றதால் அதிலிருந்து நாம் கற்க வேண்டியதை அனைத்தும் கற்று இறைவனை அடைந்தால் பின்பு அது ஒன்றே சத்தியமாகிறது இதற்கே நமது முயற்சிகள் வேண்டும்.