பாடல் #1285

பாடல் #1285: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்
மாறியல் பாக வமைந்து விரிந்திடுந்
தேறிய வஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1284 இல் உள்ளபடி சக்தி மயங்களை நன்கு உணர்ந்து தெளிந்த சாதகர்கள் எடுத்துக் கூறிய ஏரொளிச் சக்கரத்தின் உள்ளிருந்து மேலெழுந்து வருகின்ற மந்திரமானது ஆறு விதமான இயல்புகளைக் கொண்டு ஒரு தன்மையில் சக்கரமாக அமைந்து அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவுகின்றது. அதனுடைய இயல்பிற்கு சரிசமமான நிலையை அடைகின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்றாகச் சேர்ந்து எழுகின்ற போது இயல்பிலேயே அழியக்கூடிய தன்மையைக் கொண்ட சாதகரின் உடலானது அவர் இந்த சாதகத்தை இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கின்ற போது தனது தன்மையில் இருந்து மாறி என்றும் அழியாத இயல்பைப் பெறுகின்றது.

கருத்து: சாதகர்கள் ஏரொளிச் சக்கரத்தின் சாதகத்தை இடைவிடாமல் செய்வதன் மூலம் எவ்வாறு என்றும் அழியாத உடலைப் பெறுகின்றார் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1286

பாடல் #1286: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

மதித்திடு மம்மையு மாமாது மாகும்
மதித்திடு மம்மையு மங்கன லொக்கும்
மதித்தங் கெழுந்தவை காரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

விளக்கம்:

பாடல் #1285 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திற்கான சாதகத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்ற சாதகர்களின் உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியே அண்ட சராசரங்களில் இருக்கின்ற பராசக்தியாகவும் இருக்கின்றது. இந்த சக்தியே சாதகர்களுக்குள் இருக்கின்ற மூலாக்கினிக்கு சரிசமமாக இருக்கின்றது. அதனால் சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்த ஏரொளிச் சக்கரம், பாடல் #1285 இல் உள்ளபடி ஐந்து பூதங்கள், பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்களுக்கும் விரிவடைகின்ற மந்திர ஒலிகள் போன்ற அனைத்திற்கும் இந்த சக்தியே மூல காரணமாகவும் இருக்கின்றது. அதனால் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்ற மூலாக்கினியும் வீறு கொண்டு எழுந்து மூலாதாரத்திலிருந்து மேலேறி வருகின்ற அனைத்தினாலும் சாதகரின் உடலுக்கும் உலகத்திற்குமான தொடர்புகளை அறுப்பதாகவும் அதுவே இருக்கின்றது.

பாடல் #1287

பாடல் #1287: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கூடிய தம்பன மாரணம் வசிய
மாடியல் பாக வமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1286 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து மேலெழுந்து வந்து ஒன்றாகக் கூடி இருக்கின்ற தம்பனம் மாரணம் வசியம் ஆகியவற்றுடன் மறைந்து இருக்கும் மோகனம் ஆகருடணம் உச்சாடனம் ஆகிய தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஆறு விதமான தன்மைகளைக் கொண்ட மந்திரங்களும் அதனதன் இயல்பிலேயே ஏரொளிச் சக்கரத்துடன் அமைந்து செழிப்பான சக்தி மயமாக உருவாகும். இந்த சக்தி மயமானது சாதகரின் உடலுக்கு வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களின் மூலம் வருகின்ற எந்தவிதமான இடையூறுகளையும் சாதகரின் உடலுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தாதவாறு பாதுகாக்கும். இந்த நிலை ஏரொளிச் சக்கரத்தின் தன்மைகளைத் தமக்குள்ளேயே தேடி தெளிவு பெற்றவர்களுக்கே கிடைக்கும்.

பாடல் #1288

பாடல் #1288: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

தெளிந்திடும் சக்கர மூலத்தி னுள்ளே
யளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்
குளிர்ந்த வரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை யங்கெழு நாடிய காலே.

விளக்கம்:

பாடல் #1287 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளேயே தேடி தெளிந்து கொண்ட ஏரொளிச் சக்கரத்தின் ஆதாரமான மூலாதாரத்திற்கு உள்ளே தமது ஏரொளிச் சக்கர சாதகத்தினால் அருளாகக் கிடைத்த ஓங்கார மந்திரத்தின் அகாரத்தை நடுவில் வைத்து அமைக்க வேண்டும். சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்குள்ள அனைத்து உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கும் அருளுவதற்கான சக்தியைப் பெறுவதற்கு மீண்டும் சாதகரின் உள்ளுக்குள் வருகின்ற எப்போதும் மாறாத சுழற்சியை செய்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியோடு அந்த அகாரத்தை ஒன்றாகச் சேர்த்து அதற்கு உள்ளே வைத்தால் கிடைக்கும் அமைப்பிலிருந்து எழுகின்ற மந்திரத்தில் ஒரு ஒரு நாழிகையின் சிறிய அளவாகிய கால் பங்கு அளவு கிடைக்கும்.

பாடல் #1289

பாடல் #1289: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்ததாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1288 இல் உள்ளபடி சாதகர் செய்கின்ற சாதகத்தின் அமைப்பிலிருந்து எழுகின்ற மந்திரமானது கால் பங்கு, அரைப் பங்கு, முக்கால் பங்கு, முழுப் பங்கு என்ற வெவ்வேறு அளவுகளில் வேறுபட்டு எழுந்து வரும். இப்படி வந்த மந்திரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒரே மந்திரமாக சாதகருக்குள் முழுவதும் ஊறி எழுகின்றது. இந்த மந்திரமானது சாதகரின் உடலையும் தாண்டி வெளியே வந்து அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களுக்கும் விரிந்து பரவி நின்று அந்த உலகங்களில் இறைவனை அடைய வேண்டும் என்று சாதகம் செய்கின்ற உயிர்களுக்கெல்லாம் பிறைவியை அறுத்து அருள் பாலிக்கின்றது. தமக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற மந்திரத்திலேயே இலயித்து தாமும் மந்திரமாகவே மாறி மந்திரத்தை தமக்குள் முழுவதுமாக உள் வாங்கிக் கொண்ட சாதகர்களே இந்த நிலையை அடைவார்கள்.

பாடல் #1290

பாடல் #1290: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கொண்டவிம் மந்திரங் கூத்த னெழுத்ததாய்ப்
பண்டையுன் னாவிப் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்று மிதயத் தெழுந்து நமவெனே.

விளக்கம்:

பாடல் #1289 இல் உள்ளபடி சாதகர் முழுவதுமாக உள் வாங்கிக் கொண்ட மந்திரமானது இறைவனின் அம்சமாக உலக இயக்கத்தை செய்து கொண்டே இருக்கும் ஆதி எழுத்தான ஓங்காரமாகவே மாறிவிடுகின்றது. இந்த மந்திரத்தை அன்னாக்கில் வைத்து சிறிதளவு கூட மாறுபாடு இல்லாமல் அசபையாக உச்சரித்துக் கொண்டே இருந்தால் தலை உச்சியில் இருக்கின்ற சிற்றம்பலமாகிய சகஸ்ரதளத்திலிருந்து அண்ட சராசரங்கள் முழுவதும் நிறைந்து பிரகாசிக்கும் பேரொளியாக மாறி உலக இயக்கத்திற்கான நன்மையை செய்து கொண்டிருக்கும். அதனால் மந்திரத்திலேயே இலயித்துக் கொண்டு இருக்கும் இதயத்திலிருந்து பிரிந்து நின்று இறைவனை எப்போதும் ‘நம’ என்று போற்றி வணங்கிக் கொண்டே சாதகர் இருப்பார்.