பாடல் #167: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தீட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
விளக்கம்:
உடலாகிய இந்தத் தோல் பையினுள் (தோலால் சூழ்ந்த உடல்) உயிராக இருந்து வினைகளைச் (செயல்களை) செய்து அதன் மூலம் தன்னுடைய கர்ம பலன்கள் கழிந்த பின் உடல் இயங்க காரணமான இறைவன் (உயிர்) உடலில் இருந்து பிரிந்த பிறகு வெறும் எலும்பும் தோலுமாகிய இந்த மனித உடலை, காக்கை வந்து கொத்தித் திருடிச் சென்றால் என்ன? கண்டவர்கள் பிணம் என்று பழித்தால் என்ன? உடலை சுட்டு எரித்தபின் எலும்பின் மேல் பால் ஊற்றி காரியம் செய்தால் என்ன? பலவகைப் பட்டவர்களும் வந்து உயிர் இருக்கும் போது செய்த காரியங்களைப் பற்றி பழி சொன்னால் என்ன? பலரும் புகழ்ந்து பேசினால் என்ன? அதனால் இந்த உயிருக்கோ அல்லது வெறுமெனக் கிடக்கும் உடலுக்கோ ஒரு பயனும் இல்லை.
கருத்து: வாழும்போது இந்த உடலின் மூலம் இறைவனை அடையும் வழிகளைப் பற்றி எண்ணாமல் இறந்தபிறகு அந்த வெறும் உடலை என்ன செய்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.
மிகவும் எளிமையாகவும் எளிதில் புரியும்படியும் உள்ளது 5
6 7 8 9 தந்திரங்களின பதிவும் வெளியிடுங்கள் நன்றி
நன்றி தினந்தோறும் ஒரு பாடலாக எழுதி பதிவிட்டு வருகிறோம். தற்போது 4 ம் தந்திரம் எழுதிக் கொண்டிருக்கிறோம். தாங்கள் கேட்ட 5 6 7 8 9 தந்திரங்கள் 4 ம் தந்திரம் எழுதி முடித்ததும் தொடர்ந்து வரும்