பாடல் #162: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
விளக்கம்:
நாட்டியம் ஆடுகின்ற கலைக்கூடம் வெறுமனே கிடக்கின்றது (உயிர் ஆடிய உடல் செத்துக் கிடக்கின்றது). அங்கே அழகிய அலங்காரங்கள் எதுவும் இல்லை (பிணத்திற்கு அழகு இல்லை). நாட்டியம் ஆடும் சுதியும் லயமும் இல்லை (மூச்சுக் காற்றும் இருதயத் துடிப்பும் இல்லை). அந்தக் கலைக்கூடத்தில் பாடுகின்றார்கள் சிலர் (பண்டாரங்கள் பறையறைந்து பாடுதல்) சுதியும் லயமும் இல்லாமல் வெறும் பண் வைத்துப் பாடுவது அழுவதுபோல இருக்கிறது (பிணத்தைச் சுற்றி ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்). இதனால் அழகிய நாட்டியத்தைக் காண வேண்டும் என்று தேடி வந்தவர்களின் ஆசைத் தீயினில் ஏமாற்றமெனும் தீயை வைத்து ஆசையை எரித்துவிட்டார்கள் (காய்ந்த விறகுகளைத் தேடி எடுத்து வந்து வைத்த தீயினில் உடலை வைத்து எரித்துவிட்டார்கள்).
கருத்து: உயிர் இருக்கும் வரை ஓயாது ஆசை எனும் தீயினில் ஆடும் இந்த உடல் அந்த உயிர் பிரிந்தவுடன் மற்றவர்கள் வைத்த தீயினில் வெந்து சாம்பலாகின்றது. அழிகின்ற உடலை நம்பி ஆசை எனும் தீயினில் ஆடாமல் இறைவனை நாடி என்றும் நிலைத்திருக்கும் வழியைத் தேட வேண்டும்.