பாடல் #1284: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
அறிந்திடும் சக்கர மாதி யெழுத்து
விரிந்திடும் சக்கர மேலெழுத் தம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலு மாமே.
விளக்கம்:
பாடல் #1283 இல் உள்ளபடி பரம்பொருளான இறைவனை தமக்குள் அறிந்து கொண்ட சாதகர்களால் ஏரொளிச் சக்கரத்தின் சக்தி மயங்களில் மூல மந்திரமான ஓங்காரத்தின் முதல் எழுத்தாகிய அகாரத்தில் இறைவனும் இரண்டாவது எழுத்தான உகாரத்தில் இறைவியும் மூன்றாவது எழுத்தாகிய மகாரத்தில் நிலம் நீர் காற்று அக்னி ஆகிய நான்கு பூதங்களும் ஒன்றாகக் குவிந்து இருப்பதை அறிந்து உணர்ந்து அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் முடியும்.