பாடல் #1283: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்
காக்கலு மாகுங் கருத்திற் றடமெங்கும்
நோக்கலு மாகு நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகு மறிந்துகொள் வார்க்கே.
விளக்கம்:
பாடல் #1282 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசிக்கின்ற மந்திரத்தின் ஒளி வடிவமாகிய ஏரொளிச் சக்கரமே உலகத்திற்கும் உடலுக்குமான பந்தங்களாகிய பசி தூக்கம் சோர்வு இயற்கை உபாதைகள் ஆகியவற்றை அறுக்கின்றது. ஆனாலும் சாதகர்கள் இந்த உலகத்திலேயே தங்களின் உடலை அழியாமல் நீண்ட காலம் பாதுகாக்க முடியும். சாதகர்கள் தங்களின் எண்ணங்கள் செல்கின்ற அனைத்து இடங்களையும் தாங்கள் அமர்ந்து இருக்கின்ற இடத்திலிருந்தே பார்க்க முடியும். இது மட்டுமின்றி ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நுண்ணியது பெரியது என்கிற அளவுகள் இல்லாத மிகவும் அதிநுட்பமான பொருளாக இருக்கின்ற இறைவனையும் சாதகர்கள் தங்களுக்குள் அறிந்து கொள்ள முடியும். ஏரொளிச் சக்கரத்தை தமக்குள்ளிருந்து மேல் நோக்கி எழும்பச் செய்து அதன் ஒளி வடிவத்தை தரிசித்த சாதகர்களால் தான் இவை அனைத்தையும் செய்ய முடியும்.
