பாடல் #128: முதல் தந்திரம் – 1. உபதேசம்
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே.
விளக்கம்:
சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது எந்தவிதமான மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான். அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் இறைவனிடமிருந்து பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் சுத்தமான பரவெளியில்தான். அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில் அவர்கள் மனதிற்குள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து அத்திருநாமத்தில் லயித்து இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

Excellent job…..thanks
தமிழர்கள் அனைவரும் திருமந்திரத்தில் உள்ள சூட்சுமத்தை அறிய உதவும் உங்கள் பணி போற்றுதலுக்குரியது.