பாடல் #1267: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
ஆவின மானவை முந்நூற் றறுபதும்
ஆவின மப்பதி னைந்தின மாயுறும்
ஆவின மப்பதி னெட்டுட னாயுறும்
ஆவின மக்கதி ரோன்வர வந்தே.
விளக்கம்:
பாடல் #1266 இல் உள்ளபடி முக்காலத்தையும் தமக்குள்ளேயே அறிகின்ற நிலையை அடைந்த சாதகர்கள் அனைவரின் இனமாகவே (குழுக்கள்) இருப்பவை சூரியனை முதலாகக் கொண்டு வருகின்ற முந்நூற்று அறுபது நாட்கள் கொண்ட தமிழ் வருடங்களாகவும் அதற்குள் சந்திரனை முதலாகக் கொண்டு வருகின்ற வளர் பிறை மற்றும் தேய் பிறை ஆகிய பதினைந்து நாட்களாகவும் அதற்குள் இருக்கின்ற பன்னிரண்டு மாதங்களாகவும் ஆறு விதமான பருவங்களாகவும் சாதகருக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற ஏரொளிச் சக்கரமே ஒன்றோடு ஒன்று இணைந்து வெளிப்படுகின்றது.
கருத்து: சாதகருக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற ஏரொளிச் சக்கரமே உலகத்தில் இருக்கின்ற காலங்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது.
தமிழ் பருவங்கள்:
- கார்காலம் – இது தமிழ் மாதமான ஆவணி புரட்டாசியை உள்ளடக்கியது.
- குளிர்காலம் – இது தமிழ் மாதமான ஐப்பசி கார்த்திகையை உள்ளடக்கியது.
- முன்பனிக்காலம் – தமிழ் மாதமான மார்கழி தையை உள்ளடக்கியது.
- பின்பனிக்காலம் – இது தமிழ் மாதமான மாசி பங்குனியை உள்ளடக்கியது.
- இளவேனில்காலம் – இது தமிழ் மாதமான சித்திரை வைகாசியை உள்ளடக்கியது.
- முதுவேனில்காலம் – இது தமிழ் மாதமான ஆனி ஆடியை உள்ளடக்கியது.