15-6-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கர்மத்தின் விளைவுகள் அனைத்தும் என்றால் இறைவன் எதற்கு?
கர்மங்களை இறைவன் செய்வதில்லை. கர்மங்கள் செய்வது மானிடரே என்பதை முதலில் உணர வேண்டும். கர்மத்தின் விளைவுகள் அனுபவிப்பதும் மானிடரே. இவ்விதமிருக்க இறைவன் எதற்கு என்று கேட்டால் முதலில் மனிதன் செய்யும் கர்மவினைகளை மனிதன் சகிக்க வேண்டும். அதன் விளைவுகளையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியும் உண்டு. இதற்கு இறைவன் எங்கு நுழைகின்றான் என்று கேட்டால் மனிதன் செய்த பாவங்களை அனுபவிக்கும் போதும் நல்வினைகளை அனுபவிக்கும் போது அனைத்தையும் தாங்கும் சக்தியை இறைவன் தருகின்றான் என்பதே இதற்கு விளக்கம் ஆகின்றது. இதற்காகவே இறைவனை வணங்குதல் வேண்டுமே ஒழிய என் கர்மத்தை ஏற்றுக்கொள் என்று கூறுவதும் மன்னிக்க வேண்டும் என்று கூறுவதும் மானிடர் தன்மையே. இதனை மாற்றி அமைத்தல் வேண்டும். இறைவனை இறைவனாகக் கண்டு இக்கர்மங்களை தீர்த்திட வாய்ப்பு அளித்ததற்கும் நாம் நன்றி கூறுதல் வேண்டும். பாவம் இறைவன் செய்வதில்லை மானிடரே செய்கின்றனர் என்பதை நல்நிலையில் உணர்ந்து செயல்பட்டால் அனைத்து வழிகளிலும் நலம் காண்பீர்கள். மனிதன் செய்யும் தவறுகளை இறைவன் சகித்தல் வேண்டும். செய்யும் பாவங்கள் இறைவன் சகித்தல் வேண்டும் என எண்ணுவது ஒரு நலம் தரும் விஷயமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக நீங்கள் உங்கள் பாவங்களை சகித்தல் வேண்டும் என்றால் உடன் இருப்பவரும் சகித்தல் வேண்டும் என்று பொருள் ஆகின்றது. இதற்கு இறைவன் காரணமாகின்றானா? உமது செயல் உடன் இருப்பவர்களை பாதிக்கின்றதல்லவா பாதிக்கப்பட்டவர்கள் உங்களை சபிக்கும் போது அந்த பாவங்களையும் நீ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையும் உண்டு. இதையும் தாங்கும் வழியையும் மேலும் சகிக்கும் தன்மையும் இறைவன் அளிக்கின்றான். தவறுகள் செய்கின்றோம் என உணரும் திறனும் அவ்விறைவனே அளிக்கின்றான். இதனை உணர்ந்து செயல் படுதல் வேண்டும்.