பாடல் #83

பாடல் #83: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

விளக்கம்:

நல் நெறிகளின் மூலம் இறைவனை அடையும் வழிகளை அறிந்து சிவனை மனதுள் வைத்துத் துதித்து மனதை வெல்லக்கூடிய பேரறிவு ஞானத்தை மிகவும் பெற்ற ஒரு முனிவராக நான் இருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் மேலுலகம் செல்லும் நுண்ணிய (சூட்சும) வானத்தின் வழியே யானும் புகுந்து இந்தப் பூமியை நோக்கி வந்தேன்.

பாடல் #84

பாடல் #84: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

விளக்கம்:

இறைவன் கூறிய உத்தமமான வேதங்களின் பொருளை அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதுவதால் சிறப்பு பெறுகின்ற மந்திரங்களை உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும் பொழுது உள்ளிருந்து உற்பத்தியாகும் பேரின்ப உணர்வுகளை என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

பாடல் #85

பாடல் #85: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பம் இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்றும் அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள் ஆவார். அந்த இறைவனை உள்ளுணர்வு கொண்டு அனைவரும் அறிந்து கொள்ளவே திருமந்திரத்தை வழங்கினோம். இந்தத் திருமந்திரத்தை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.

பாடல் #86

பாடல் #86: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடு கூடிநின் றோதலும் ஆமே.

விளக்கம்:

பிறப்பு இறப்பு இல்லாதவனும் நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் இறைவனை ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

பாடல் #87

பாடல் #87: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

அங்கிமி காமைவைத் தானுல கேழையும்
எங்குமி காமைவைத் தானுடல் வைத்தான்
தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

விளக்கம்:

சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களை அளவோடு வைத்தவன். இந்த உலகங்களில் உயிர்கள் பிறக்க வேண்டி உடலை அளவோடு வைத்தவன். அந்த உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தவன். சொல்லப்பட்ட இந்தத் திருமந்திரத்தின் பொருளை வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

பாடல் #88

பாடல் #88: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டன் என்றயன் பொய்மொழிந் தானே.

விளக்கம்:

தமக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் திருமாலும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு மாபெரும் நெருப்புத் தூணாக நின்று இத்தூணின் அடியையோ அல்லது உச்சியையோ காண்பவரே பெரியவர் என்று அறிவித்தார். பிரம்மன் பறந்து உச்சியைக் கண்டுவிடலாம் என்று நினைத்து அன்னப் பறவையாக பறந்து சென்றார். திருமால் பூமியைக் குடைந்து அடியை கண்டுவிடலாம் என்று நினைத்து பன்றியாக குடைந்து சென்றார். இருவரும் தங்கள் எண்ணப்படி அடியையும் உச்சியையும் காணாமல் பூமியின் மேல் வந்து நின்ற அடியைக் காண முடியவில்லை என்று திருமால் ஒப்புக்கொண்டார். பிரம்மன் உச்சியைக் கண்டுவிட்டேன் என்று பொய் கூறினான்.

உள் விளக்கம்:

இந்தப் பாடலில் திருமூலர் ஒரு புராணக் கதையை சித்தரிப்பது போல இருந்தாலும் இறைவனின் திருவடிகளை கண்டு அவன் திருவடிகளின்கீழ் இருப்பதே பேரின்பம் என்பதை அனுபவத்தில் கண்டு அறிந்த திருமூலர் (பாடல் #82 இல் கூறியபடி) அந்தப் பேரின்பத்தை அனைவரும் அடையும் வழியாகவே திருமந்திரத்தை வழங்கினோம் என்பதையே இங்கு உணர்த்துகிறார்.

பாடல் #89

பாடல் #89: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

விளக்கம்:

காளையும் (இடபம்) மானும் மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவனின் கற்பனையிலிருந்து (எண்ணத்திலிருந்து) தோன்றியதே இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும். அப்படிப்பட்ட இறைவன் என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி அடியவன் என் தலைமேல் தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து ஆகமங்கள் அனைத்தையும் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.

பாடல் #90

பாடல் #90: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

விளக்கம்:

உணர்வினால் அறியப்பட வேண்டிய இறைவனையும் அந்த இறைவனை அறிந்து கொள்ளும் அறிவைக் கொடுக்கும் ஞானத்தையும் உயிருக்குள் ஆன்மாக இருக்கும் இறைவனையும் அந்த ஆன்மாவை அறியவிடாமல் தடுக்கும் மாயையும் அந்த மாயையை ஆளும் சிவத்தையும் இந்த சிவத்திலிருந்து வரும் சக்தியையும் சிவமும் சக்தியும் சேர்ந்த சதாசிவமூர்த்தியையும் தனக்குள்ளே உணர்ந்து இறைவனை அடையும் வழிகளான ஓலி ஓளி தத்துவங்கள் அனைத்தையும் விளக்கி யாம் வழங்கியதே இந்தத் திருமந்திர மாலை.

பாடல் #91

பாடல் #91: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கரும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பின் கயிலை வழியில்வந் தேனே.

விளக்கம்:

ஆகம வேதப் பொருளை விளக்கி அருளிய குருநாதன் பரம்பொருள் எனப்படும் உண்மையான ஞானத்தின் ஜோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமைகளைக் கொண்டவன். ஆனந்த வடிவானவன். மும்மலங்களையும் அறுக்கும் ஆனந்த நடனத்தை ஆடும் கூத்தன். அப்பேர்பட்ட இறைவன் சொன்ன சொல்லைக் கட்டளையாக ஏற்று அதன்படியே நானும் அரும்பெரும் வளங்கள் நிறைந்த திருக்கயிலாய வழியில் இந்த உலகம் தேடி வந்தேன்.

பாடல் #92

பாடல் #92: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே.

விளக்கம்:

குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன். அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன். அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன். அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.