பாடல் #471: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயமவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுகின் றான்ஆகத்து நேர்பட்ட வாறே.
விளக்கம்:
பாடல் #470 பாடலின் படி ஈசனுடன் பேரின்பத்தில் கலந்து திளைத்து இருந்த போது ஈசன் அருளியவற்றை கேட்டு வியந்து நின்றேன். அது என்னவென்றால் எங்கும் கலந்திருக்கும் ஒரு மாசும் இல்லாத மாபெரும் சுடராக இருக்கும் இறைவனே வினைகளின் பொருட்டு உயிர்களைப் பிறக்க வைக்க முழுமுதல் காரணமாக இருக்கின்றான் என்பதையும் உயிர்கள் அவர்களின் வினைகளை அனுபவிக்க வேண்டிய மாயையாகவும் அவனே இருக்கின்றான் என்பதையும் சுக்கிலத்தை சுரோனிதத்தையும் சேர்த்து கர்ப்பப் பைக்குள் கொண்டு சென்று கருவாக்கி அதை குழந்தையின் உருவமாக அதை நீட்டிக் காப்பாற்றி அது பிறந்தபின் அதனுடன் உள் ஒளியாகக் கலந்து மாயையால் மறைந்து நின்று அந்த குழந்தை வாழும் காலம் வரை அதை உள்ளிருந்தே வழி நடத்துகின்றான் என்பதையும் கேட்டு உணர்ந்தேன்.