பாடல் #461

பாடல் #461: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சித் திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நண்பால் ஒருவனையே நாடுகின் றேனே.

விளக்கம்:

உயிர்கள் தாம் ஆசைப்பட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்று எலும்புகளை இணைத்து நரம்புகளால் வரிசையாகக் கட்டி வைத்து சிவந்த இரத்தத்தை வைத்து தோலால் அழகாக மூடி திருத்தமாக செய்யப்பட்ட இந்த வீடாகிய உடலுக்கு உயிர் கொடுத்த இறைவனின் கருணையை எண்ணி அவன் மீது பொங்கிய நட்பினால் அவன் ஒருவனை மட்டுமே அன்பினால் தேடி அடைகின்றேன்.

உட்கருத்து: ஆன்மா ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசையைத் தீர்க்க பிறவி கொடுத்து அருமையான உடலைக் கருவிலிருந்தே செதுக்கி அழகான வீடாக்கி அதனுள் உயிராக உலவ விட்ட இறைவனை உயிர்கள் எப்போதும் நினைத்து அவன் கருணையை எண்ணி அன்பு கொண்டு அவனைத் தமக்குள் தேடி அடைய வேண்டும்.

பாடல் #462

பாடல் #462: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதஞ்செய்யும் மாறே விதித்தொழிந் தானே.

விளக்கம்:

நிலவைப் போன்ற வெள்ளை நிறத்தில் சூரியனைப் போன்ற பிரகாசிக்கும் ஒளி உடலாக இருக்கின்ற இறைவன் தாயின் சூரிய கலை (வலது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான சூட்டையும் சந்திர கலை (இடது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான குளிர்ச்சியையும் கொண்டு கருவின் உடலோடு கலந்து எங்கும் பரவி நின்று தாயின் அடிவயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சூடாக உருவாகும் நெருப்பினாலும் நீராலும் கரு ஒருவித பாதிப்பும் அடையாமல் இருக்கும்படி காத்து நின்று குழந்தை எந்த விதமாக வளர வேண்டுமோ அப்படியெல்லால் வளர வைத்து குழந்தை பிறக்கும் வரை காத்து அருளுகின்றான்.

பாடல் #463

பாடல் #463: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

விளக்கம்:

ஆன்மா தான் இருக்கும் உடலின் மூலம் அனுபவிக்க வேண்டிய வினைகளை எப்போது அனுபவித்து முடிக்கின்றதோ அப்போதே அதனது அடுத்த பிறவியை எடுக்க உதவும் பலவிதமான வழிகளை உருவாக்கி விடுகின்றான் இறைவன். ஆன்மா இருக்கும் உடல் இறந்த பின் சுற்றத்தாரால் நீராட்டப்பட்டு சுடுகாட்டிற்கு சுட்டெரிக்க எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து வெளிப்பட்ட ஆன்மாவை இன்னும் அனுபவிக்க வேண்டிய பலவிதமான வினைகளான பந்த பாசத்தால் கட்டி புதிய கருவாக உருவாக்கி கர்ப்பப் பைக்குள் வைத்து அங்கே பெண்ணின் அடிவயிற்றில் இருக்கும் நெருப்பினாலும் நீராலும் பாதிக்கப் படாதபடி காப்பாற்றி அருளுகின்றான் இறைவன்.

பாடல் #464

பாடல் #464: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புகுந்து நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

விளக்கம்:

ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சிவப்பு நிற கருமுட்டையாக வளர்கிறது. இதற்காக ஆணின் சுக்கிலம் எட்டு விரற்கடை அளவும் பெண்ணின் சுரோணிதம் நான்கு விரற்கடை அளவும் பயணிக்கின்றது. இப்படி பயணிக்கின்ற அனைத்தும் கருமுட்டையாக வளர்வது இல்லை. இறைவன் அருளால் பிழைத்த ஒன்றோ அல்லது சமயத்தில் பலவும் ஒன்றாக ஒரே சமயத்தில் கருமுட்டையாக வளர்கிறது. அப்படி உருவான கருமுட்டை உடல்தான் எட்டு ஜாண் அளவிற்கு வளர்கிறது.

அறிவியல் விளக்கம்: கருவில் உருவாகும் குழந்தையிலிருந்து பிறந்து வளர்ந்து இறக்கும் மனிதன் வரை அனைவருக்குமே அவர்களது விரல்களால் அளவிட்டால் எட்டு ஜான் அளவிற்கே உடல் இருக்கும் இதைத்தான் திருமூலரும் எண் சாண் அது ஆகுமே என்று அருளுகின்றார்.

பாடல் #465

பாடல் #465: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்
ஓகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்குஒரு முட்டைசெய் தானே.

விளக்கம்:

ஆண் பெண் இருவரின் இன்பத்தில் உருவான கருவின் மூலமாக ஆன்மாவை உயிராக உருவாக்கும் கொடைத் தொழிலைப் புரிந்து அருளுகின்றான் புனிதனான இறைவன். கருவிற்குள் இருபத்தைந்து தத்துவங்களையும் (பாடல் #451 இல் காண்க) சேர்த்து ஆண் பெண்ணின் இன்பத்தின் விளைவாக அங்கே ஒரு சினைமுட்டையைச் செய்து அருளுகின்றான்.

உட்கருத்து: ஆணும் பெண்ணும் எத்தனை முறை இன்பம் கொண்டாலும் கரு எளிதில் உருவாகி விடுவதில்லை. அப்படி நடந்தால் பெண் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற வேண்டும். பெண்ணிடம் உருவாகும் அனைத்து கருமுட்டைகளும் சினைமுட்டையாக மாறுவதில்லை. அப்படி நடந்தால் பெண் கோடிக்கணக்கான குழந்தைகள் பெற வேண்டும். கருமுட்டை சினைமுட்டையாகிவிட்டால் மட்டும் குழந்தை உருவாகி விடுவதில்லை. அப்படி நடந்தால் கருத்தரித்த அனைத்து பெண்களும் உயிரோடு இருக்கும் குழந்தையைப் பெற்று இருக்க வேண்டும். அறிவியலின்படி பல பெண்கள் கரு கலைந்தோ அல்லது இறந்த குழந்தைகளை பெற்றெடுக்கின்றார்கள். ஆணும் பெண்ணும் இன்பமாக இருக்கும் போதே இவர்களுக்கு இப்படிப்பட்ட குழந்தைதான் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதன்படி சினைமுட்டைகளை கருவாக்கி அதைக் குழந்தையின் உடலாக்கி இருபத்து ஐந்து தத்துவங்களையும் சேர்த்த உயிராக்கி பிறக்கும் வரை பாதுகாத்தும் அருளுகின்றான் இறைவன்.

பாடல் #466

பாடல் #466: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்தில் அமர்ந்திடுந் தானே.

விளக்கம்:

பெண்ணின் கருப்பைக்குள் உருவாகும் குழந்தையின் உடலினுள் மாயையால் ஒன்றும் அறியாத ஐந்துவகைப் புலன்களும் சேர்ந்து உடலோடு வளர்ந்து உடலோடு இறக்கின்றன. அதுபோலவே அண்டசராசரங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் இறைவனின் நாதத் தத்துவத்திலிருந்து உருவாகிய ஆன்மா கருவுக்குள் உயிரோடு பிறந்து உடலோடு இறந்தபின் மீண்டும் இறைவனின் நாத தத்துவத்திலேயே சென்று அமர்ந்து இருக்கின்றது.

உட்கருத்து: அசையா சக்தியாகிய இறைவனிடமிருந்து உருவாகிய ஒளி ஓசை ஆகிய இருவகைத் தத்துவங்களாலேயே ஆன்மா உருவாகின்றது. அத்தகைய ஆன்மா வினைப் பயனால் கருவுக்குள் புகுந்து உடலோடு உயிராகி வளர்ந்து உடல் இறந்தபின் பிரிந்து மீண்டும் அந்தத் தத்துவங்களுடனே சேர்ந்து அடுத்த பிறவி வரை காத்திருத்து பிறவி எடுக்கும். எப்போது அனைத்து பிறவிக்கான வினைகளும் தீர்ந்துவிடுகின்றதோ அப்போது இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடும்.

பாடல் #467

பாடல் #467: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இலைப்பொறி ஏற்றி எனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

விளக்கம்:

பெண்ணின் உடல் என்ற இயந்திரத்தினுள் ஆணின் உடல் என்ற இயந்திரத்தை இயக்கி பெண்ணின் கர்ப்பப்பை என்னும் இயந்திரத்தினுள் கருவை உருவாக வைத்த இறைவன் அந்த கருவை ஐந்து பூதங்களால் ஆட்டி வைத்து ஆன்மாவையும் முப்பது தத்துவங்களையும் சேர்த்து உடல் என்ற இயந்திரத்தைக் கொடுத்து குழந்தையாக்கி அதைப் பித்த நீரினுள் பத்து மாதங்கள் மூழ்கி இருக்கச் செய்து மூச்சுக்காற்றினால் உணவைச் சுட்டு எரிக்கும் வயிறாகிய இயந்திரத்துடன் ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடம்பில் ஆன்மாவையும் உயிரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து அருளுகின்றான் இறைவன்.

ஒன்பது துவாரங்கள்:

கண்கள் 2, காதுகள் 2, மூக்குத்துவாரம் 2, வாய், பிறவிக்குறி, ஆசனவாய்.

முப்பத்தாறு தத்துவங்கள்:

5 சிவ தத்துவங்கள்: நாதம் – தூய அறிவாலான பரம்பொருளின் முழுமையான நிலை, விந்து – இயங்கிக் கொண்டிருக்கும் கிரியா சக்தி, சாதாக்கியம் – சதாசிவன், ஈசுரம் – மறைத்தல் சக்தியான மகேசுரன், சுத்த வித்தை – படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம்.

7 வித்தியா தத்துவங்கள்: காலம், நியதி, கலை, வித்தை, இராகம், மாயம், புருடன் (ஆன்மா)

24 ஆன்ம தத்துவங்கள்: 5 பூதங்கள் – நிலம் (உடல்), நீர் (இரத்தம் மற்று பித்த நீர்கள்), நெருப்பு (உணவைச் செரிக்கும் நெருப்பு மற்றும் உடல் சூடு), காற்று (மூச்சுக் காற்று மற்றும் பத்துவிதமான வாயுக்கள்), ஆகாயம் (உயிர் மற்றும் ஆன்மா). 5 புலன்கள் – கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள் – ஓசை (கேட்பது), ஊறு (தொடுவது), ஒளி (பார்ப்பது), சுவை (உண்பது), நாற்றம் (முகர்வது). 5 கன்மேந்திரியங்கள்: வாய் (பேச்சு), கைகள் (செயல்), கால்கள் (போக்குவரவு), எருவாய் (கழிவு நீக்கம்), கருவாய் (இன்பமும் பிறப்பும்). 4 அந்தக்கரணங்கள் – மனம் (எண்ணங்கள்), புத்தி (அறிவு), சித்தம் (சிந்தனை), அகங்காரம் (நான் என்ற எண்ணம்).

பாடல் #468

பாடல் #468: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளையில் விளைந்தது தானே.

விளக்கம்:

இன்பத்தில் கலந்த ஆண் பெண் இருவரும் மனமொத்து வைத்த கருவாகிய மண் (பிண்டம்) பந்த பாசத்தால் சிக்குண்டு துன்பத்தைப் பெறும் களிமண்ணாலான கலசம் போன்றது. அதைக் குயவன் போல குழைத்து உருவாக்குபவன் இறைவன் ஒருவனே. இந்தக் களிமண்ணாலான கலசத்தில் ஒன்பது துவாரங்களும் (கண்கள் 2 காதுகள் 2 மூக்குத்துவாரம் 2 வாய் பிறவிக்குறி ஆசனவாய்) பதினெட்டு அச்சாரங்களும் (எலும்புகள்) உள்ளன. எப்படி குயவன் தான் குழைத்து உருவாக்கிய கலசம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சூளையில் இட்டு சுடுகின்றானோ அதுபோல இறைவனும் கருவை தாயின் சூடான அடிவயிற்றுக் கருப்பை எனும் சூளையில் வைத்துப் பத்து மாதங்கள் சுட்டுப் பாதுகாத்து குழந்தையாக உருவாக்கி அருளுகின்றான்.

பாடல் #469

பாடல் #469: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

அறியீர் உடம்பினி லாகிய ஆறும்
பிறியீர் அதனிற் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஐந்தினுள் ளானது பிண்டமே.

விளக்கம்:

உடம்பு அடையும் ஆறு வகையான நிலைகளை அறியாமல் இருக்கின்றீர்கள். அந்த நிலைகளில் வினைப் பயனால் உருவாகிப் பெரியதாக வளரும் பலவித குணங்களில் நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து கெட்டதை விட்டுப் பிரியாமல் இருக்கின்றீர்கள். பஞ்ச பூதங்களால் ஆன இந்த பிண்டமாகிய உடம்பினுள் எட்டுவிதமான மாபெரும் சித்திகளையும் இறைவன் வைத்திருப்பதை அறிந்து அதை அடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கின்றீர்கள்.

உடலின் ஆறு நிலைகள்:

 1. பேறு – இன்பம்.
 2. இழவு – பற்றாக்குறை.
 3. துன்பம் – துயரம்.
 4. பிணி – நோய்கள்
 5. மூப்பு – முதுமை
 6. சாக்காடு – இழிவு நிலை.

வினைப் பயனால் பெறும் குணங்கள்: பாடல் #458 இல் காண்க.

உடலின் பஞ்ச பூதங்கள்:

 1. நிலம் – எலும்பு தோலால் ஆன உடல்.
 2. நீர் – இரத்தம் மற்றும் பித்த நீர்கள்.
 3. நெருப்பு – உணவைச் செரிக்கும் நெருப்பு மற்றும் உடல் சூடு.
 4. காற்று – மூச்சுக் காற்று மற்றும் உடலில் உள்ள பத்துவிதமான வாயுக்கள்.
 5. ஆகாயம் – உயிர் மற்றும் ஆன்மா.

எட்டு மாபெரும் சித்திகள்:

 1. அணிமா – அணுவைப் போல மிகவும் நுண்ணிய உருவம் எடுத்தல்.
 2. மகிமா – மலையை விடவும் மிகப் பெரிய உருவம் எடுத்தல்.
 3. இலகிமா – இலவம் பஞ்சை விடவும் மிகவும் லேசான எடையை எந்த உருவத்திலும் எடுத்தல்.
 4. கரிமா – மலையை விடவும் மிகவும் கனமான எடையை எந்த உருவத்திலும் எடுத்தல்.
 5. பிராந்தி – நினைத்த இடத்திற்கு கண் இமைக்கும் நேரத்திற்குள் உடனே சென்றுவிடுதல்.
 6. பிரகாமியம் – மனதில் நினைத்ததை உடனே கைகொள்ளுதல்.
 7. ஈசத்துவம் – வேண்டிய எதையும் கட்டுப் படுத்தி ஆட்டி வைத்தல்.
 8. வசித்துவம் – எதையும் அல்லது எவரையும் தன் வசமாக்கி ஆட்கொள்ளுதல்.

பாடல் #470

பாடல் #470: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலம் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

விளக்கம்:

ஆன்மா தனது வினையின் பயனால் பிறவி எடுக்க உடலை படைத்து உடலுக்குள் ஆன்மாவை வைத்து தேவையான காலத்திற்கு வாழும்படி உயிரையும் வைத்து தேவைக்கேற்ப திறந்து மூடிக்கொள்ளுகின்ற ஒன்பது துவாரங்களைக் கொண்ட உறுதியான உடலையும் வைத்து அந்த உயிர் பிறவியில்லா நிலையை அடைய அந்த உடலின் தலையின் உச்சியின் இறுதியில் சகஸ்ரரதளத்தில் ஆயிரம் இதழ் தாமரையின் மேல் நெருப்பு வடிவமாகத் தங்கியும் இருப்பதைக் கண்டு அவனோடு பேரின்பத்தில் கலந்து திளைத்து நின்றேன்.

உட்கருத்து: ஆன்மா தான் கொண்ட ஆசையினாலும் வினையினாலும் பிறவி எடுக்கின்றது. அந்தப் பிறவிச் சுழலிலிருந்து தப்பிக்க உடலில் ஆறு ஆதார சக்தி மயங்களிலும் உச்சியில் ஏழாவது இடமாக சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேலே நெருப்பு வடிவமாக இருக்கும் இறைவனை உயிர்கள் உணர்ந்தால் பிறவி இல்லாத பேரின்பத்தில் திளைத்திருக்கலாம்.