பாடல் #119

பாடல் #119: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அறிவைம் புலனுட னேநான்ற தாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே.

விளக்கம்:

உயிர்களின் சிற்றறிவு அவர்களின் ஐந்து பொறிகளின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியே கிடைத்து உணர்வுகளிலிலேயே (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) லயித்திருந்து பேரறிவை அறியாமல் அழிந்து போகின்றது. ஆற்றின் ஆழம் தெரியாமல் நீரில் இறங்கி மூழ்கியவர்கள் போல உயிர்களும் உலக இன்பங்களில் மூழ்கி தங்களின் பிறவியைக் கடத்துகிறார்கள். இவர்களின் சிற்றறிவுக்குள்ளே பேரறிவு ஞானம் இருப்பதையும் அதை அறிந்தால் உண்மைப் பொருளை உணர்ந்து பந்த பாச உலகப் பிணைப்புகளை அறுத்து இறைவனை அடைய முடியும் என்பதையும் பரம்பொருள் இறைவன் குருவாக வந்து குறிப்பில் உணர்த்துவான்.

பாடல் #120

பாடல் #120: முதல் தந்திரம் – 1. உபதேசம்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.

விளக்கம்:

பசுவன் பாலில் கலந்து இருக்கும் நீரை அகற்றி வெறும் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல உயிர்கள் தினமும் தங்களின் பலவித காரணங்களால் சேர்த்துக்கொள்ளும் தீவினைகளாகிய அழுக்கை சுத்தமான அவர்களின் ஆன்மாவிலிருந்து அகற்றி அந்தத் தீவினைகளால் அவர்கள் எடுக்கும் ஏழுவித பிறப்புகளுக்கு வித்தாகிய வினைகளை எரித்து உயிர்களைத் தம்பால் ஈர்த்துக்கொள்ளவே தில்லை அம்பலத்தில் இறைவன் எப்போதும் தனியாகத் திருநடனம் புரிகின்றான்.

பாடல் #121

பாடல் #121: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

விளக்கம்:

உயிர்கள் மறுபடியும் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் வினைகளை அழித்து அருள குருநாதராக வந்த இறைவன் உபதேசித்த பேரறிவு ஞானம் மிகவும் வாய்க்கப் பெற்று அந்தப் பேரறிவு ஞானத்தின் மூலம் மல மாசு இல்லாத சுத்தமான ஆன்மாவாகப் பிறந்து உலகப் பற்றுக்களை உதறிவிட்டு ஐம்புலன்களைக் கொண்ட உயிரும் உடலும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போதே இறந்து போன உடலைப் போல அசைவற்று எப்போதும் இறைவனின் நினைப்பிலேயே இருப்பவர்கள் சிவயோகியர்கள் ஆவார்கள்.

பாடல் #122

பாடல் #122: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாரா தவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே.

விளக்கம்:

சிவயோகியர்கள் செய்யும் சிவயோகம் என்பது என்னவென்றால் சித்து (உயிர்) அசித்து (உடல்) ஆகிய இரண்டும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தவம் புரியும் யோக வழியில் தானும் தனக்குள் இருக்கும் இறைவனும் ஒன்றாகச் சேரும்படி தியானித்து பிறப்பு இறப்புகளுக்குக் காரணமாகிய உலக வழிகளில் செல்லாமல் உயிர்களின் தலைவனாகிய இறைவனின் திருவடிகளை நாடிச்சென்று அடைதல் ஆகும். பிறவியின் பெரும் பயனைத் தரும் இந்தச் சிவயோக நிலையை உயிர்களுக்கு அளித்து குருநாதராக வந்த இறைவன் பெரும் கருணை செய்தான்.

பாடல் #123

பாடல் #123: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்தும் சிவமாகவே இருக்கும் உண்மையையும் தேவர்களும் அமரர்களும் அறியாத பேரின்ப உலகையும் உயிர்கள் உய்வதற்கென்று தில்லை அம்பலத்தில் ஆடும் தம் திருவடிகளையும் பேரின்பம் சூழ்ந்த அருள்வெளியாகிய பரவெளியையும் இறைவன் தன் பெருங்கருணையால் உயிர்களுக்கு அளித்து அருளினான்.

பாடல் #124

பாடல் #124: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

விளக்கம்:

பரவெளி மற்றும் உலகத்தைச் சுற்றியிருக்கும் வெற்றிட வெளிகளில் (ஆகாயம்) இறைவன் பரவி இருக்கும் முறைகளையும் உயிர்களிடத்தில் அன்பு அடங்கி இருக்கும் முறைகளையும் பேரொளியாக இருக்கும் இறைவனிடத்தில் சிற்றொளியாகிய ஆன்மாக்கள் சேர்ந்து இருக்கும் முறைகள் அனைத்தையும் தம் பேரறிவு ஞானத்தால் அறிந்து தெளிவாக உணர்ந்து இருப்பவர்களே சிவயோகியர்கள் எனப்படும் சித்தர்கள்.

பாடல் #125

பாடல் #125: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத்து ஆறே.

விளக்கம்:

சித்தர்கள் என்பவர்கள் சிவ உலகத்தை இறைவனின் அருளால் மண்ணுலகிலேயே தரிசித்தவர்களாகவும் ஓசையும் அவ்வோசையின் முடிவில் இருக்கும் அமைதியையும் பேரானந்தத்தையும் தமக்குள்ளே உணர்ந்தவர்களாகவும் என்றும் அழிவில்லாதவர்களாகவும் மும்மல அழுக்குகள் இல்லாதவர்களாகவும் உலகப் பற்றுக்கள் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் உடம்புடன் இருக்கும்போதே இறைவனின் அருளால் முக்திபெற்றவர்கள். இவர்கள் பெற்ற முக்திக்கு முழுமுதல் காரணமாக இருந்தது முப்பத்து ஆறு தத்துவங்களே ஆகும். இவை ஆன்ம தத்துவம் இருபத்தி நான்கும் (ஆன்ம ஞானம்) வித்தியா தத்துவம் ஏழும் (கலை/அறிவு ஞானம்) சிவ தத்துவம் ஐந்தும் (பரம்பொருள் ஞானம்) ஆக மொத்தம் முப்பத்து ஆறு தத்துவங்கள் ஆகும்.

பாடல் #126

பாடல் #126: முதல் தந்திரம் – 1. உபதேசம்

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலாத ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்பரிய சிவங்கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.

விளக்கம்:

பாடல் #125 ல் கூறிய முப்பத்தாறு தத்துவங்களையும் முக்தி பெறுவதற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளைப் போல ஒவ்வொன்றாக இறையருளால் அறிந்து கொண்டு அதன் பயனாய் ஈடு இணையில்லாத பேரானந்தத்தை வழங்கும் பேரொளியை தமக்குள்ளே கண்டு வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத சிவத்தைத் தமக்குள்ளே தரிசித்து தாம்தான் சிவம் என்பதை உணர்ந்து தெளிந்தவர்களாக இறைவன் வழங்கிய இந்தப் பேரருளே தமது பிறவியின் பெரும் பரிசாக ஏற்றுக்கொண்டு அவன் வழங்கிய பேரானந்த நிலையிலேயே அமர்ந்து இருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.

பாடல் #127

பாடல் #127: முதல் தந்திரம் – 1. உபதேசம்

இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்து
இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

விளக்கம்:

சித்தர்கள் தாமே சிவம் என்பதை உணர்ந்து சிவம் போலவே அனைத்தும் தாம் தான் என்ற நிலையில் இருப்பார்கள். சிவம் செய்யும் ஐந்துவித தொழில்களையும் ரசித்தபடியே இருப்பார்கள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளின் தன்மைகளை உணர்ந்து இருப்பார்கள். தமக்கென செய்யும் செயல் பேச்சு என்று எதுவும் இல்லாமல் சிவத்தோடு ஒன்றி இருப்பார்கள் சித்தர்கள்.

பாடல் #128

பாடல் #128: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே.

விளக்கம்:

சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது எந்தவிதமான மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான். அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் இறைவனிடமிருந்து பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் சுத்தமான பரவெளியில்தான். அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில் அவர்கள் மனதிற்குள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து அத்திருநாமத்தில் லயித்து இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையில் அவர்கள் இருப்பார்கள்.