பாடல் #484: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.
விளக்கம்:
ஆண் பெண் இன்பத்தின் முடிவில் பெண்ணின் வயிற்றில் தங்கிய கருவானது மனித உடலின் உள் நாக்கிற்கு மேலே இருக்கும் சுழு முனை நாடித் துளை வழியே தரிசிக்கும் ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகும். அந்தக் கரு குழந்தையாக மாறும் போது சூரியனைப் போன்ற தகதகக்கும் தங்க நிறத்தில் இருக்கும். பிறகு அதுவே உடலின் பல்வேறு உறுப்புகளாக வளரும் போது தந்தை தாயின் உருவத்திற்கு ஏற்ற மாதிரி குழந்தையின் உருவமும் பொருத்தமாக வளரும்.
உட்கருத்து: உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களும் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியின் வழியில்தான் இருக்கின்றன. அதன் வழியே குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால் அது ஏழாவது இடமான தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரர தளத்தைச் சென்று சேர்ந்து அங்கே ஒளி வடிவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து பிறகு அங்கிருந்து கீழே வந்து உள் நாக்கிற்கு மேலே இருக்கும் துளை வழியே அமிர்தமாகப் பொழிந்தால் பிறவி இல்லாத பெரும் வாழ்வு கிடைக்கும். இந்தத் துளை வழியே இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க முடியும். அங்கே ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின் அம்சம்தான் தந்தையின் உடலிலிருந்து குழந்தையின் உயிராகத் தாயின் வயிற்றில் சென்று சேருகின்றது. பெண்ணின் வயிற்றில் தங்கிய கரு குழந்தையாக மாறும் போது சூரியனைப் போன்ற நிறத்திலும் பிறகு எல்லா உறுப்புகளும் உருவாகும் போது தந்தை தாயின் சாயலிலேயே உருவாகும்.