பாடல் #475: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னாலோர் உயிர்க்குத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
விளக்கம்:
அருளைத் தருகின்ற சக்தியில்லாமல் சிவம் இல்லை. அசையா சக்தியாகிய சிவம் இல்லாமல் அருளுகின்ற சக்தியும் இல்லை. உயிர்களுக்கு உடலைத் தருகின்ற போதே சிவத்தையும் சக்தியையும் இரண்டு வளர்ப்புத் தாய்களாக கூடவே வந்து விடுகின்றான் இறைவன். சிவமும் அன்பும் வேறு வேறு இல்லை வளர்ப்புத் தாய்களாக வந்த சிவமும் சக்தியும் அன்போடு கருவை வளர்த்து பாதுகாத்து அதைப் பிறக்க வைக்கின்றார்கள்.