பாடல் #205: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் அன்பை
நனவது போலவும் நாடவொண் ணாதே.
விளக்கம்:
நதியில் உருவாகும் சுழலானது தனக்குள் நுழைந்த எதையும் வெளிவிடாமல் இழுத்துச் சென்று அழித்து விடுவது போலவே திருமணம் புரிந்து கணவருடன் வீட்டில் வசிக்கின்ற குடும்ப பெண்களிடம் இச்சையை தேடிச் சென்றால் அந்த உரிமை இல்லாத காமமானது தம்மையும் சேர்த்து இழுத்து உயிரை வாங்கிவிடும். ஆகவே, உறக்கத்தில் கண்ட கனவானது தூங்கும் போது உண்மையானது போலவே தோன்றினாலும் காலையில் எழுந்தவுடன் பொய்யாகி கலைந்து போவதைப் போலவே காமத்தின் உள்ளிருந்து கசிந்து வெளிவருகின்ற ஆசையானது உண்மையான அன்பைப் போலவே தெரிந்தாலும் அது பொய்யான அன்பு என்று பிறகு தெரிந்து விடும். அதனால் அந்த பொய்யான அன்பைத் தேடி ஓடுகின்ற மனதை விட்டு விலகி இருங்கள்.
கருத்து:
தூங்கும்போது சாப்பிடுவது போல கனவு கண்டால் அப்போதைக்குச் சந்தோஷமாக இருக்குமே தவிர உண்மையில் பசி தீர்ந்துவிடாது. அதுபோலவே தமக்கு உரிமையில்லாத பெண்கள் மீது காட்டும் அன்பானது அப்போதைக்கு இன்பமாக இருக்குமே தவிர உண்மையில் இழிவு நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும்.
