உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் உடலோடு உயிராக ஆன்மா கூடித் தனது வினையின் பயனாக பிறவி எடுக்கும்படி செய்த மாபெரும் குருவான இறைவன் ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி பெற்ற அந்த உயிர்களின் உள்ளத்துக்குள் நின்று காதல் மயக்கத்தினால் ஒருவரை ஒருவர் நாடிச் சென்று மேலும் பிறவிகளை உருவாக்க காரணமாகவும் இருப்பதை இறைவனது திருவருளால் யான் அறிந்துகொண்டேன்.
சிவந்த தாமரை மலரின் நிறத்தைப் போன்ற பிரம்மனும் கொழுந்து விட்டு எரியும் தீப் பிழம்பின் நிறத்தைக் கொண்ட எமது இறைவன் சிவபெருமானும் நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட திருமாலும் சேர்ந்து மாயையால் பாசப்பிணைப்புகளை உண்டாக்கி உயிர்களை மயக்கி பூக்களை தங்களது கூந்தலில் சூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்துடன் ஆண்களை கூடுமாறு செய்து அவர்களின் கூடுதலில் பிறவியை அமைத்து நிற்கின்றான் இறைவன்.
ஏழு உலகங்களையும் படைக்கின்ற பிரம்மனாகவும் ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமாலாகவும் ஏழு உலகங்களையும் அழிக்கின்ற சிவபெருமானாகவும் இருப்பவன் இறைவன் ஒருவனே. சதாசிவமூர்த்தியாக இருந்து ஒவ்வொரு உயிரின் உடலோடு உயிராக கலந்து இருப்பவனும் இறைவன் ஒருவனே.
பாடல் #403: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்துஇருந் தானே.
விளக்கம்:
அசையா சக்தியும் அசையும் சக்தியும் சேர்ந்த ரூபமான அருளல் தொழிலை செய்யும் சிவனின் அம்சம் முழுவதும் நிறைந்து தாமாகவே சதாசிவனிடமிருந்து தோன்றியவர் மறைத்தல் தொழில் செய்யும் மகேஸ்வரன். இவரே காத்தலையும் அழித்தலையும் செய்யும் உருத்திரன் திருமாலின் செயல்களில் இயக்கமாக இருக்கிறார். திருமாலின் தொப்புள் கொடியிலிருந்து வெளி வந்த தாமரை மலரின் மீது உருவானவர் அனைத்தையும் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் ஆவார். ஆகவே இந்த ஐந்து தேவர்களாகவும் அசையா சக்தியான இறைவன் ஒருவனே ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவராகக் கலந்து இருக்கின்றான்.
சூரிய சந்திரனை மார்புக் கச்சையாக சூடியிருக்கும் சிவனின் சக்தியான மனோன்மணி மங்கள சொரூபமானவள். அவளே அனைத்திற்கும் காரணமாகிய அசையா சக்தியான இறைவனுடன் அசையும் சக்தியாகவும் உலக காரியங்களை செய்யும் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காரிய சக்திகளாகவும் கலந்து நிற்கின்றாள். அவளே ஓங்கார வடிவாகவும் அழிக்கும் தொழிலில் வாரணியாகவும் படைக்கும் தொழிலில் ஆரணியாகவும் காக்கும் தொழிலில் வானவர் கொண்டாடும் மோகினியாகவும், மறைக்கும் தொழிலில் பூரணியாகவும் பேரறிவாக இருக்கின்றாள்.
உட்கருத்து: அசையா சக்தியாகிய இறைவனின் அசையும் சக்தியாகிய இறைவி உலகம் உருவாக வேண்டும் என்கிற காரணத்தில் பேரறிவு ஞானமாக இருந்து அதை செயலாக்கும் பொருட்டு காரிய சக்திகளாக ஐந்து தேவர்களுடன் ஐந்து தேவிகளாக இருந்து அனைத்தையும் செயல்படுத்துகின்றாள்.
பரவிந்து, அபரநாதம், அபரவிந்து எனும் மூன்று முக்கோணம் போன்ற ஒளி ஒலியாகிய அசையும் சக்தியின் மையப்பகுதியில் இருந்து திரிபுரை என்ற பெயருடைய சக்தி தோன்றுவாள். அவளே சதாசிவமூர்த்தியின் தொழிலை செயல்படுத்துவாள். அவளது மாபெரும் கருணையினால் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய ஐந்து மூர்த்திகளின் சக்தியாக உடன் இருந்து அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்வாள்.
ஆகாயம், நீர், நெருப்பு, காற்று, மண் ஆகிய பஞ்ச பூதங்களும். சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய பஞ்ச தெய்வங்களும் என்றும் அழியாத மாபெரும் சக்தியினுள்ளிருந்தே தோன்றியவர்களாகும். பஞ்ச தெய்வங்களில் உருவமில்லாமல் அருவமாக முதலில் தோன்றிய சிவனிடமிருந்து தூல உருவமுள்ள மகேசுவரன் தோன்றி மகேசுவரனிடமிருந்து உருத்திரன் தோன்றி உருத்திரனிடமிருந்து திருமால் தோன்றி திருமாலிடமிருந்து பிரம்மன் தோன்றினான். அதுபோலவே பஞ்ச பூதங்களில் உருவமில்லாத அருவமாக முதலில் தோன்றிய ஆகாயத்திலிருந்து சூட்சும உருவமான வாயு தோன்றி வாயுவிலிருந்து தூல உருவமான நெருப்பு தோன்றி நெருப்பிலிருந்து நீர் தோன்றி நீரிலிருந்து நிலம் தோன்றியது. இவை அனைத்தும் சேர்ந்தே உலகம் என்ற பொருள் தோன்றி கண்ணால் காண முடியும்படி அளிக்கப்பட்டது.
மாயையாகிய சக்தியிலிருந்து சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்றும் தோற்றுவிக்கப்படுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் சுத்த மாயையின் தொழிலாகும். இந்த மாயைகளைத் தாண்டி ஒலியும் ஒளியும் இருக்கின்றது. இவை இரண்டும் அசையும் சக்தியாகிய பரையிடமிருந்து பிறப்பதால் இவை அனைத்தும் அசையாத சக்தியாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியின் திருவிளையாடலால் உருவானவையே ஆகும்.
உட்கருத்து: அசையாத சக்தியாகிய பராவிடம் திருவிளையாடல் புரிய எண்ணம் தோன்றும்போது அசையும் சக்தியாகிய பரையிடமிருந்து ஒளியும் ஒலியும் தோன்றுகின்றது. இதிலிருந்து மாயைகள் அனைத்தும் உருவாகின்றது. இவை அனைத்துமே அசையாத சக்தியாகிய பரம்பொருளின் திருவிளையாடலாகும்.
சதாசிவமூர்த்தியாகிய பரம்பொருளின் திருவிளையாடலால் ஆணவ மாயையில் நின்று உயிர்களைப் படைக்கும் தொழிலை பிரம்மனும் காக்கும் தொழிலை திருமாலும் அழிக்கும் தொழிலை உருத்திரனும் மாயையால் மறைக்கும் தொழிலை மகேசுவரனும் கருணையால் அருளும் தொழிலை சதாசிவனும் செய்கின்றனர். இவர்களும் உடலெடுத்து உயிர்களாகப் பிறந்து இறைவனை வேண்டித் தவமிருந்து இறைவனது அருளால் இந்த ஐந்து தொழில்களையும் பெற்று அவரவர்களுக்கு உரிய தொழிலைச் செய்தாலும் ஆணவம் முற்றிலும் நீங்காமல் இருப்பவர்கள் தான்.
குறிப்பு: பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களும் சிறிதளவு ஆணவம் இருப்பதினால் தான் அவர்கள் ஐந்து பெயர்களில் குறிக்கப்பட்டு தனியாக ஐந்து தொழில்களை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சிறிதளவு ஆணவமும் இல்லையெனில் அவர்கள் அசையா சக்தியாக இருக்கும் சதாசிவமூர்த்தியுடன் கலந்திருப்பார்கள். இவர்களும் உடலெடுத்து உயிர்களாக பிறப்பெடுத்து சிவனடியார்களாக இருந்தவர்கள் தான் என்பதை திருமந்திரம் பாடல் எண் 302, 380 பாடல்களின் மூலம் அறியலாம்.