பாடல் #23

பாடல் #23: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

விளக்கம் :

சர்வ வல்லமை படைத்தவனும் அக்கினிக்குத் தலைவனானவனும் காட்டு யானைத் தோலை ஆடையாகப் போர்த்தியவனும் மும்மலங்கள் தனது அடியவர்களைப் பாதிக்காது நில் என்று கட்டளையிட்டவனும் அனைத்து உயிர்களுக்கும் சரிசமமாக நீதியை வழங்குபவனுமாகிய எம்பெருமான் இறைவனை அறியாமையால் இல்லை என்று கூறாதீர்கள். வானத்து தேவர்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் இரவும் பகலும் இடையறாது அருளை வழங்கி நிற்கின்றான் இறைவன்.

உள் விளக்கம்:

இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். குண்டலினி அக்கினி, உணவை செரிக்கச் செய்யும் ஜடராக்கினி, கடல் நீரை கரை தாண்டாமல் வைத்திருக்கும் படபாக்கினி, உலகின் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பூமியின் மைய அக்கினி, எரிமலைக் குழம்பாக வெடித்துவரும் அக்கினி முதலாகிய அனைத்து அக்கினிக்களுக்கும் இறைவன் தலைவன். உயிர்களின் உடலில் குண்டலினி அக்கினி இருக்கும் மூலாதாரத்தில்தான் அவர்களின் நல்கர்மாக்கள் இருக்கின்றன. அவற்றை மேலெழும்பவிடாமல் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகியவை யானை போன்ற கனத்துடன் தடுத்துக்கொண்டு எளிதில் அசைக்க முடியாமல் (எளிதில் தீர்க்க முடியாமல்) இருக்கின்றன. பிறவியை விட்டு நீங்கி இறைவனை அடையவேண்டும் என்ற உண்மையான பக்தியோடு இறைவனை வணங்கும் அடியவர்களின் முக்திக்கு உதவும் நல்கர்மாக்களை மேலெழுப்ப யானை போன்ற மும்மலங்களை இறைவன் தனது இடையில் ஆடையாக அணிந்துகொண்டு அவை தம் அடியவர்களின் முத்தியடையும் வழியைத் தடுக்காது நில்லுங்கள் என்று கட்டளையிட்டு தம் அடியவர்களை பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றுகின்றவன் இறைவன். இப்படி அனைத்திற்கும் நீதியாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கும் இறைவனை அறியாமையால் உணராதிருந்து அவனை இல்லை என்று கூறவேண்டாம். அவன் இரவும் பகலும் எப்போதும் தம்மை நாடிவரும் உயிர்களுக்கு அருளை இடைவிடாமல் அருளிக்கொண்டேதான் இருக்கின்றான்.

பாடல் #24

பாடல் #24: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

விளக்கம் :

இறைவனின் பெருமைகளை எப்போதும் போற்றிப் பாடியும் அவன் புகழ்களை வாழ்த்தியும் அவனது திருவடியை எண்ணி வணங்குபவர்கள் மிகப்பெரும் அருட் செல்வம் சேர்ப்பவர்கள். உலகத்திலுள்ள செல்வங்களே பெரிது என்ற மாயையின் மயக்கத்தில் இருக்காமல் இறைவனின் திருவடியை எண்ணிப்பெறும் அருட் செல்வமே உண்மையானது என்று உணர்ந்தவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைக் காத்து அவர்களோடு இருக்கின்றான் இறைவன்.

பாடல் #25

பாடல் #25: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

விளக்கம்:

பிறப்பில்லாதவனும் பிறை நிலாவைத் தலைமுடியில் சூடியவனும் மிகப்பெரும் அருளாளனும் இறப்பில்லாதவனும் எல்லோருக்கும் இன்பங்களை வழங்கி அருளுபவனும் எவரையும் விட்டு எப்போதும் நீங்காதவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியைத் தினமும் வணங்குங்கள். அவனை வணங்கி வந்தால் மாயையால் மறைக்கப்பட்டிருக்கும் சிற்றறிவு நீங்கி இறைவனின் திருவடியை என்றும் மறக்காத பேரறிவைப் பெறலாம்.

பாடல் #26

பாடல் #26: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

விளக்கம் :

அனைத்து உயிர்களையும் விட்டு நீங்காமல் அவர்களுடனேயே என்றும் நிற்கின்றவனாகிய இறைவனைத் தினமும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கி வந்தால் உலகம் மற்றும் அண்டசராசரங்கள் முழுவதும் படர்ந்து விரிந்து இருப்பவனும் அவற்றையும் தாண்டி நிற்பவனும் உயிர்களின் தலையுச்சியிலிருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தின் ஆயிரம் தாமரை இதழ்களில் வசிப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியுடன் கலந்து அவன் திருவடியை எப்போதும் காணும் புண்ணியத்தை அடையலாம்.

பாடல் #27

பாடல் #27: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சந்தி எனத்தக்க தாமரை வான்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.

விளக்கம்:

சூரியன் மறையும் மாலை நேரத்தில் தெரியும் வானத்தின் நிறம் போன்ற செந்தாமரை மலர் விரிந்து தெரியும் அழகைப் போன்ற முகத்தை உடையவரும் முடிவென்பதே இல்லாதவருமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருள் தமக்கே வேண்டும் என்று பக்தியோடு தம்முடைய குருவை நாளும் வணங்கி வருபவர்களின் எண்ணத்தில் இறைவன் உறைந்து இருக்கின்றான்.

பாடல் #28

பாடல் #28: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுடனும் எங்கும் எதிலும் கலந்து இருப்பவனும் உலக வழக்கங்களுக்கு மாறுபட்டு நிற்கின்றவனும் அனைத்திற்கும் ஆரம்பமாகவும் அவற்றின் முடிவாகவும் இருப்பவனும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இந்திரனுக்கும் தலைவனாக இருப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தி தன்னை உண்மையான பக்தியோடு வணங்கி நிற்பவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைப் பாதுகாத்துக்கொண்டு துணையாக வருகின்றான்.

பாடல் #29

பாடல் #29: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

காணநில் லாய்அடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதிலிருந்து மாறாத குணமுடைய அடியவர்களின் மனதில் ஆணி அடித்தது போல அமர்ந்து இருக்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையால் துடிக்கும் எமது முன் நீங்கள் எழுந்தருள வேண்டும். நீங்கள் எம் முன் எழுந்தருளிவிட்டால் உங்களை உடனே எம்மோடு ஆரத்தழுவிக்கொள்வதில் யாம் வெட்கப் படமாட்டோம்.

பாடல் #30

பாடல் #30: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானம் கருதியே.

விளக்கம்:

வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் பொதுவாக பெய்கிறது. அதுபோல இறைவனின் அருள் வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் இறையருள் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள் எவ்வாறு கன்று தன் பசியை தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிக்கின்றதோ அதுபோலவே குருவான எம்பெருமான் சதாசிவமூர்த்தியை நான் வேண்டி அழைப்பது எமது ஞானப் பசியை அவர் தீர்க்கவேண்டும் என்கிற வேண்டுதலால்தான்.

பாடல் #31

பாடல் #31: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

விளக்கம்:

மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனிதவடிவிலும் விண்ணகத்தில் உள்ள தேவர்களுக்கு தேவவடிவிலும் முத்திஅடைபவர்களுக்கு வீடுபேறுதருபவனாகவும் சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியை ஞானக் கண்ணால் கண்டுணர்ந்து அவர் மேல் அளவில்லாத அன்புகொண்டு நின்றிருந்தோம்.

பாடல் #32

பாடல் #32: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீர்உல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லை
பாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

விளக்கம்:

தேவர்களுக்கெல்லாம் தலைவனாக தேவர்களோடு கலந்து இருப்பவனும் நமக்கும் தலைவனாக நம்மோடு கலந்து இருப்பவனும் பத்து திசைகளிலும் (எட்டுத்திசைகள் மற்றும் ஆகாயம் பூமி ஆகியவை) பரவி இருப்பவனும் பெரும் கடலால் சூழப்பட்டுள்ள ஏழு உலகங்களையும் தாண்டி இருப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் தன்மை என்னவென்பதை யாரும் அறிந்துகொள்ளவில்லை. எங்கும் எதிலும் பரந்து நிறைந்து இருக்கும் அந்தப் பரம்பொருளின் அருளைப் பற்றியே யாம் பாடுகின்றோம்.