தேவர்கள் எல்லாம் தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச்சென்று இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் துயரங்களைத் தீர்த்தான்.
உட்கருத்து: தனக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தை உணர்ந்த உயிர்களுக்கு படைக்கும் பிரம்மாவின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து அந்த உயிருக்கு தேவர்கள் என்னும் தகுதியை அளிக்கும் இறைவன் (இதனை திருமந்திர பாடல் எண் #349 மூலம் அறியலாம்) அவர்கள் உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரித்து பிறவா நிலையை அந்த உயிருக்கு அளிப்பார். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.
பாடல் #351: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)
உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.
விளக்கம்:
இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த தண்டி மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து அந்த மணல் லிங்கத்தை பசும்பாலால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட தண்டியின் தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தார். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டி பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் சண்டேசுரருக்கு அணிவித்தான்.
உட்கருத்து: லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த உயிர் உடலில் இருந்து உயிரை பிரிக்கவும் மீண்டும் பிறவாமல் பிறவியை அறுக்கவும் தான் உணர்ந்த இறைவனை பூஜை செய்யும் பொழுது உடல் தனது ஐம்புலன்களால் அதை தடுக்கிறது. குண்டலினி சக்தி என்னும் கம்பால் ஐம்புலன்களை அடிக்க குண்டலினி என்னும் கம்பு மழுவாக மாறி உடலில் இருக்கும் இடகலை பிங்கலை முச்சுக்காற்றை வெட்டி உடலில் இருந்து உயிரை பிரிக்கிறது. உயிரின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் அந்த உயிருக்கு அணிவித்து தனது அடியவர்களின் தலைவன் என்னும் பதவி அளிப்பார்.
பாடல் #350: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.
விளக்கம்:
இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த இலங்கையின் அரசன் ராவணன் ஒரு முறை அவரைப் பார்க்க எண்ணி கையிலாய மலைக்கு வந்தான். அவன் மானிடனாக இருப்பதால் உள்ளே விட முடியாது என்று வாயிற் காவலர்கள் தடுத்துவிட இறைவனைக் காண முடியவில்லையே என்ற கோபத்தில் தனது இருபது தோள்களால் கையிலாய மலையை தூக்கி இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ராவணனை நிகரில்லாத பேராற்றலை உடைய இறைவன் தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தம் கொடுக்க அதன் அழுத்தத்தால் தாங்க முடியாத பெரும் வேதனையை அடைந்த இராவணன் கோபம் நீங்கி இறைவா எம்மைக் காப்பாற்று என்று உரக்க அழைத்தான். ஒரு மாசும் இல்லாத இறைவனும் அவனின் உண்மையான பக்தியை மெச்சி அவன் முன்னே தோன்றி அவனுக்கு என்றும் நீங்காத திருவருளை வழங்கி அருளினார்.
உட்கருத்து: உயிர்கள் பாடல் #347 ல் உள்ளபடி லிங்க தத்துவத்தையும் லிங்கத்தையும் தனக்குள் உணரும் போது மனிதனின் குணங்கள் பத்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்தும் அவற்றால் ஏற்படங்கூடிய உலகப்பற்றுகள் இறைவனை அடையவிடாமல் தடுக்கும் போது இறைவா காப்பாற்று என்று உயிர்கள் வேண்டிட அவர்களுக்கு திருவடி தீட்சை வழங்கி அவர்களின் குணங்கள் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை நீங்கி மீண்டும் வராமல் அருள் செய்வான்.
கன்மேந்திரியம் என்றால் செயல் மனித உடல் செய்யும் ஐந்து வகையான செயல்கள் இந்த ஐந்து வகையான செயல்கள் தொடர்ந்து செயல்படுவதால் ஆத்மா உடலோடு கலந்து இருக்கிறது.
கடல் போல் வலிமை கொண்ட பிரமன் திருமால் இருவரும் நெடுங்காலம் ஒளி வடிவாக இருக்கின்ற ஆதி இறைவனை வழிபட திருமாலுக்கு சக்ராயுதமும் பிரம்மனுக்கு வாளும் கொடுத்து அருளினான்.
உட்கருத்து: பாடல் #347 ல் உள்ளபடி அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் அசையும் சக்தியான குண்டலினி கடல் போல் வலிமை கொண்ட 2வது சக்கரமாகிய பிரம்மன் வீற்றீருக்கும் சுவாதிட்டானம், 3வது சக்கரமாகிய திருமால் வீற்றிருக்கும் மணிப்பூரகத்தை உணர்ந்தும் அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர்ந்து தனக்குள் லிங்க உருவத்தை உணர்ந்தும் தத்துவத்தை உணர்ந்தும் நெடுங்காலம் ஒளி வடிவாய் இருக்கும் ஆதி இறைவனை வழிபட்டால் திருமால் செய்யும் காக்கும் வேலையும் பிரம்மன் செய்யும் படைக்கும் வேலையையும் இறைவன் கொடுத்து அருளுவான்.
இதனை திருமந்திர பாடல் #302, பாடல் #321 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பல புராண வரலாறுகளில் பல மகான்கள் சித்தர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் இறந்தவர்களை மீண்டும் மீட்டு படைக்கும் பிரம்மனின் தொழிலை செய்துள்ளார்கள். கர்மவினைகளின் படி இறக்கவேண்டியவர்களை காத்து காக்கும் திருமாலின் தொழிலை செய்துள்ளார்கள்.
எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிக்கொண்டு சோர்ந்து போக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மை பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்ல. பாடல் #347 ல் உள்ளபடி தனக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடன் பெருங்கருணையோடு நின்று அவர்களின் பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.
பாடல் #347: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)
அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமாத வஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.
விளக்கம்:
ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று சக்தி உறுதி எடுத்துக் கொண்டு இமய மலையின் அரசனாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்து பல காலம் உறுதியுடன் மாபெரும் தவம் செய்து தேவர்களும் அறியாத வழிபாட்டு முறைகளை தேவர்களும் அறிய முறையாக பூஜை செய்து இறைவனை அடைந்தாள்.
உட்கருத்து: ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் உயிர்கள் தமது உறுதியிலிருந்து சற்றும் விலகாமல் தியானமும் தவமும் செய்து அசையும் சக்தியாகிய குண்டலினி சக்தியை மேலேற்றி தனது சிரசின் இடப்பக்கம் இருக்கும் அசையா சக்தியாகிய சிற்சக்தியுடன் சேர்த்தால் தேவர்களும் அறியாத இறைவனின் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் தனக்குள்ளேயே உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சென்று அடையலாம்.
உலக நன்மைக்காக இன்னொரு உயிரை உருவாக்க தனது துணையுடன் சேரும் உயிர்கள் இறைவனை அடைய தடையாய் இருக்கும் காமம் என்னும் நோயில் சிக்காமல் இருக்க இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு நிலைப்பட்ட மனமுடன் இறைவனை வேண்ட இறைவன் காமம் என்னும் நோயிலிருந்து உயிரை காப்பாற்றி உலக நன்மைக்காக இன்னொரு உடலுடன் கூடிய உயிரை உருவாக்க மட்டுமே இறை எண்ணத்துடன் தன்னுடைய துணையுடன் சேரும் உயிருக்கு அருந்தவ யோகத்தை அருளுவார்.
இந்த புராண நிகழ்வு நடந்த இடம் திருக்கொறுக்கை தலமாகும். சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது உலக நன்மைக்காக அவர் தியானத்தை கலைக்க வேண்டும் என்று இந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மன்மதன் இறைவனின் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப்போதும் இறைவன் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனைப் பார்க்க அந்த நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் மன்மதன் எரிந்து சாம்பலானான். பிறகு மன்மதனின் மனைவியான ரதி தேவி இறைவனை வேண்டிக்கொள்ள உருவமில்லாத அருவமாக மன்மதனை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார்.
மூலாதாரத்தில் எரிந்து கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி அங்கே சகஸ்ரரதளத்தில் சேர்த்து அதைத்தாண்டிய பரவெளியில் இருக்கும் இறைவனை உணரும் உயிர்களுக்கு காலனை உதைத்து சாகா வரம் அளிப்பான் இறைவன். இதை உலகத்தவர்க்கு உணர்த்தும் விதமாகவே திருக்கடவூரின் திருத்தலம் இறைவனின் அருளால் நன்றாக அமைந்தது.
இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். மிருகண்டு முனிவரும் அவருடைய மனைவியான மருத்துவவதி தேவியாரும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்படி இறைவனை வேண்ட குறைந்த ஆயுட்கொண்ட அறிவாளியான குழந்தை வேண்டுமா அல்லது அதிக ஆயுட்கொண்ட முட்டாளான குழந்தை வேண்டுமா என்று இறைவன் கேட்க அறிவாளியான குழந்தையே வேண்டும் என்று கேட்டு மார்க்கண்டேயன் எனும் குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். மார்க்கண்டேயர் பிறந்ததிலிருந்து ஆயுள் அதிகரிக்க இறைவனே சரணடைய வேண்டும் என்று போதித்து வந்தனர். அதனால் மிகச்சிறந்த இறை பக்தனான மார்க்கண்டேயர் எப்போதும் இறை பூஜையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தார். அவரது ஆயுட்காலம் முடியும்போது அவரை மேலுலகம் அழைத்துச்செல்ல எமதருமரும் எந்தப் பூஜையில் இருந்தாலும் அவரது ஆயுள் முடிந்தால் அழைத்துச் செல்லவேண்டியது தமது கடமை என்று எண்ணி அவரை அழைத்துச் செல்ல பாசக் கயிற்றை வீசுகிறார். சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருக்கும்போது பாசக்கயிறு அவரோடு சிவலிங்கத்தின் மீதும் விழ அதிலிருந்து இறைவன் வெளிவந்து எமது பூஜையில் இருக்கும் அடியவர் எவரையும் கொண்டு செல்லும் உரிமை உமக்கு இல்லை என்று கூறி எமதருமரை காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கும் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரமளித்தார்.
உட்கருத்து: தியானத்தில் இருந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அடக்கி அதன் மூலம் மூலாதாரத்தில் எரிந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று ஏழாவதான சக்கரமான சகஸ்ரரதளத்தில் சேர்த்து அங்கு இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் மரண பயம் இன்றி சிரஞ்சீவியாக இறைவனிடம் பேரானந்தத்திலேயே இருக்கலாம்.
தாருகா வனத்திலிருந்த முனிவர்கள் இறைவனை வணங்காமல் இறைவனின் அருளை விட தங்களின் மந்திர சக்தியே பெரிது தாம் கற்ற மந்திரங்களின் மூலமாக எதையும் அடையலாம் என்ற அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் அழகிய உருவம் கொண்ட பிக்ஷாடனராகத் தோன்றி அந்த முனிவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கு இருந்த முனி பத்தினிகளின் முன்னால் பிச்சை கேட்டு நின்றார். அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள் அவர் பின்னாலேயே மயக்கத்தில் கூடி வர ஆரம்பித்தனர். தங்களது பத்தினிகள் இப்படி ஒரு ஆடவனின் பின்னால் மயங்கி வருவதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள் தமது தவ வலிமையால் மூன்றுவிதமான தீயை வளர்த்து மந்திரங்கள் மூலமாக (ஆகவனீயம் – காட்டுத்தீ, காருகபத்தியம் – வீட்டுத்தீ, தட்சிணாக்கினியம் – ஏட்டுத்தீ) கரிய நிறமுடைய ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர். யாகத் தீயில் தோன்றிய யானை அவரை அழித்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தத் தீயிலிருந்து வெளிவந்த யானையைக் காடே அதிரும்படி பிளந்து கொன்று அதன் தோலை தனக்குப் போர்வையாக போர்த்திக்கொண்டு மூன்று வகையாக நெருப்பும் அதில் சொல்லும் மந்திரங்களும் மந்திரத்தின் பலனாக அதிலிருந்து வரும் பலனும் அனைத்தும் யாமே என்று தாருகா வனத்திலிருந்த முனிவர்களுக்கு உணர்த்தினார். இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவழுவூர் தலமாகும்.
உள்விளக்கம்: உயிர்களுக்கு வரும் கோபத்தினால் நான் என்ற அகங்காரம் அதிகரித்து என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் மதம் பிடித்த யானை போல் இருக்கும் போது உயிர்கள் இறைவனை சரணடைய இறைவன் கோபத்தையும் அகங்காரத்தையும் அழித்து அனைத்தும் யாமே என்று உணர்த்துகிறார்.
கங்கையைத் தன் சிவந்த சடையில் சூடியவனும் எல்லாவற்றிற்கும் முதலாயும் மூலமாயும் இருப்பவனுமாகிய இறைவனை முப்புரம் என்னும் இடத்தை எரித்தவன் என்று கூறுபவர்கள் மூடர்கள். அவர்களுக்கும் முப்புரமாக இருப்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பது புரியவில்லை. அவற்றை இறைவன் அழிக்கிறான் என்பதை உணராமல் மூன்று புரங்களை எரித்ததாக கூறுபவர்களில் எவரும் அந்தப் புரங்கள் எரிந்த விதத்தை அறிந்தவர்கள் இல்லை.
இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவதிகை தலமாகும். தாருகாசுரன் என்கிற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் மிகச்சிறந்த இறை பக்தர்கள். அவர்கள் மூவரும் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் செய்து நினைத்த இடத்திற்கு உடனே பறந்து செல்லும் மூன்று கோட்டைகளையும் அவை மூன்றும் ஒன்றாக இருக்கும்போது ஒரேயொரு அம்பினால் மட்டுமே தாங்கள் அழியவேண்டும் என்றும் வரம் பெற்றனர். வரம் கிடைத்ததும் அவர்கள் தேவலோகம் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்தனர். அவர்களின் அதிகாரம் தாங்காமல் தேவர்களும் பிரம்மரும் திருமாலும் இறைவனை வேண்ட மனமிறங்கிய இறைவன் அழகிய பைரவ அவதாரம் எடுத்து தேவதச்சன் விஸ்வகர்மாவிடம் ஒரு தேர் செய்யச் சொல்லி சந்திர சூரியரே தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களே தேரில் பூட்டிய குதிரைகளாகவும் பிரம்ம தேவரே தேரை ஓட்டும் சாரதியாகவும், மேரு மலையே வில்லாகவும், வாசுகி நாகமே வில்லைப் பூட்டும் நாணாகவும், அக்கினி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் வாலாகவும், திருமாலே அம்பாகவும் ஆக்கி எடுத்துக்கொண்டு முப்புரத்தை வந்து சேர்ந்தார். இறை பக்தியில் மிகவும் சிறந்து விளங்கும் அசுரர்களை அழிக்க வேண்டாமென்ற பெருங்கருணையில் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்க்க மூன்று கோட்டைகளும் உடனே எரிந்து சாம்பலாகி மூவரும் இறைவனின் காலடியில் விழுந்து வணங்க இறைவனும் அவர்களை ஆட்கொண்டு தமது கோயிலின் வாயிற் காவலர்களாகவும் இருவரையும் கோயிலில் செய்யும் குடமுழுக்கை ஏற்பவராக ஒருவரையும் ஏற்றுக்கொண்டார்.
குறிப்பு: 113, 114, 115, 118, 210, 212, 218 ஆகிய திருமந்திர பாடல்களில் உயிர்களிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை இறைவன் எப்படி அழித்து உயிர்களை காக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பாடல்களை நமது https://www.kvnthirumoolar.com/topics/thirumanthiram/ வலைதளத்தில் தேடல் பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.