பாடல் #1366

பாடல் #1366: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஏய்ந்த மரவுரி தன்னி லெழுதிநீ
வாய்ந்த விப்பொன்னெண்பத் தொன்றி னிரைத்தபின்
காய்ந்தவி நெய்யொட் கலந்துட னோமமு
மாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயநத மரவுரி தனனி லெழுதிநீ
வாயநத விபபொனனெணபத தொனறி னிரைததபின
காயநதவி நெயயொட கலநதுட னொமமு
மாயநத வியாயிர மாகுதி பண்ணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதி நீ
வாய்ந்த இப் பொன் எண்பத்து ஒன்றில் நிரைத்த பின்
காய்ந்த அவி நெய்யோடு கலந்து உடன் ஓமமும்
ஆய்ந்த அவி ஆயிரம் ஆகுதி பண்ணே.

பதப்பொருள்:

ஏய்ந்த (நவாக்கிரி சக்கரத்தை வரைவதற்கு ஏதுவான) மர (மரத்தின்) உரி (பட்டையை) தன்னில் (எடுத்து அதில்) எழுதி (நவாக்கிரி சக்கரத்தை எழுதி) நீ (நீங்கள்)
வாய்ந்த (அதற்கு ஏற்றபடி வார்க்கப்பட்டு) இப் (புடம் செய்த) பொன் (தங்கத் தகடில் வைத்து) எண்பத்து (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் எண்பத்து) ஒன்றில் (ஓரு அறைகளையும் வரைந்து அதற்குள் எண்பத்தோரு பீஜங்களையும்) நிரைத்த (எழுதி அடைத்த) பின் (பிறகு)
காய்ந்த (நன்றாக காய்ச்சிய) அவி (அவிர் பாகத்திற்கு ஏற்ற) நெய்யோடு (நெய்யுடன்) கலந்து (கலந்து) உடன் (அதனோடு மரக்கட்டைகளை வைத்து) ஓமமும் (ஹோமம் செய்து)
ஆய்ந்த (தங்கத் தகடில் எழுதிய பீஜங்களை நன்றாக ஆராய்ந்து அவற்றையே) அவி (அவிர் பாகமாக) ஆயிரம் (ஆயிரம் முறை ஜெபித்து) ஆகுதி (ஹோமத்தில் ஆகுதி / சமர்ப்பணம்) பண்ணே (செய்யுங்கள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை வரைந்து பூஜை செய்வதற்கு ஏதுவான மரத்தின் பட்டையை எடுத்து அதில் சக்கரத்தை எழுத வேண்டும். அதன் பிறகு அதற்கு ஏற்றபடி வார்க்கப்பட்டு புடம் செய்த தங்கத் தகடில் மரப் பட்டையை வைத்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் எண்பத்தோரு அறைகளையும் வரைந்து அதற்குள் எண்பத்தோரு பீஜங்களையும் எழுதி அடைக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக காய்ச்சிய அவிர் பாகத்திற்கு ஏற்ற நெய்யுடன் கலந்து அதனோடு மரக்கட்டைகளை வைத்து ஹோமம் செய்து தங்கத் தகடில் எழுதிய பீஜங்களை நன்றாக ஆராய்ந்து அவற்றையே அவிர் பாகமாக ஆயிரம் முறை ஜெபித்து ஹோமத்தில் சமர்ப்பணம் செய்யுங்கள்.

குறிப்பு:

இதுவரை நவாக்கிரி சக்கரத்தை மானசீகமாக சாதகம் செய்யும் முறைகளை அருளிய திருமூலர் இந்தப் பாடலில் இருந்து வெளிப்புற பூஜையில் நவாக்கிரி சக்கரத்தை அமைத்து சாதகம் செய்யும் முறைகளை அருளுகிறார்.

பாடல் #1367

பாடல் #1367: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பண்ணிய பொன்னைப் பகைப்பற நீபிடி
யெண்ணிய நாள்களி லின்பமே யெய்திடு
நண்ணிய நாமமு நான்முக னொத்திடுஞ்
சொல்லிய லேறிற் சொக்கனு மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பணணிய பொனனைப பகைபபற நீபிடி
யெணணிய நாளகளி லின்பமெ யெயதிடு
நணணிய நாமமு நானமுக னொததிடுஞ
சொலலிய லெறிற சொககனு மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பண்ணிய பொன்னை பகைப்பு அற நீ பிடி
எண்ணிய நாள்களில் இன்பமே எய்திடும்
நண்ணிய நாமமும் நான் முகன் ஒத்திடும்
சொல் இயல் ஏறில் சொக்கனும் ஆகுமே.

பதப்பொருள்:

பண்ணிய (சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய) பொன்னை (தங்கத் தகடை) பகைப்பு (எந்தவித குற்றங்களோ தீய எண்ணங்களோ) அற (இல்லாமல்) நீ (சாதகர்) பிடி (கைவரப் பெற்றால்)
எண்ணிய (சாதகர் சாதகத்தில் தியானித்து இருக்கும்) நாள்களில் (அனைத்து நாட்களிலுமே) இன்பமே (பேரின்பமே) எய்திடும் (கிடைத்துக் கொண்டிருக்கும்)
நண்ணிய (சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்) நாமமும் (நவாக்கிரி சக்கரத்திலுள்ள பீஜ மந்திரங்களும்) நான் (நான்கு) முகன் (முகங்களைக் கொண்ட பிரம்மனின்) ஒத்திடும் (படைத்தல் தொழிலுக்கு சமமான சக்தி மந்திரத்திற்கும் வரப் பெறும்)
சொல் (சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் மந்திர பீஜங்களின்) இயல் (சக்தியின் இயல்பை) ஏறில் (முழுவதுமாகப் பெற்று விட்டால்) சொக்கனும் (சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும்) ஆகுமே (ஆகிவிடுவார்).

விளக்கம்:

பாடல் #1366 இல் உள்ள முறைப்படி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தங்கத் தகடை எந்தவித குற்றங்களோ தீய எண்ணங்களோ இல்லாமல் சாதகர் கைவரப் பெற்றால் அவர் தியானித்து இருக்கும் அனைத்து நாட்களிலுமே பேரின்பமே கிடைத்துக் கொண்டிருக்கும். சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலுள்ள பீஜ மந்திரங்களும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனின் படைத்தல் தொழிலுக்கு சமமான சக்தி மந்திரத்திற்கும் வரப் பெறும். அதன் பிறகு அந்த மந்திர பீஜங்களின் சக்தியின் இயல்பை சாதகர் முழுவதுமாகப் பெற்று விட்டால் சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும் ஆகிவிடுவார்.

பாடல் #1368

பாடல் #1368: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆகின்ற சந்தன குங்கும கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
யாகின்ற கற்பூர மாகோசன நீருஞ்
சேர்கின்ற வொன்பதுஞ் சேரநீ வைத்திடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற சநதன குஙகும கததூரி
பொகினற சாநது சவாது புழுகுநெய
யாகினற கறபூர மாகொசன நீருஞ
செரகினற வொனபதுஞ செரநீ வைததிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவ்வாது புனுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.

பதப்பொருள்:

ஆகின்ற (அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான) சந்தனம் (சந்தனமும்) குங்குமம் (குங்குமமும்) கத்தூரி (கஸ்தூரியும்)
போகின்ற (வாசனை மிகவும் பரவும்) சாந்து (கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்தும்) சவ்வாது (ஜவ்வாதும்) புனுகு (புனுகும்) நெய் (நெய்யும்)
ஆகின்ற (அதனுடன் அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான) கற்பூரம் (பச்சைக் கற்பூரமும்) ஆ (பசுவின்) கோசன (மேன்மை பொருந்திய) நீரும் (கோமியமும்)
சேர்கின்ற (இப்படி சேர்க்க ஏதுவான) ஒன்பதும் (ஒன்பது பொருட்களையும்) சேர (ஒன்றாகச் சேர்த்து) நீ (சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றிய தங்கத் தகடில்) வைத்திடே (வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்).

விளக்கம்:

அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான சந்தனமும் குங்குமமும் கஸ்தூரியும் வாசனை மிகவும் பரவும் கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்தும் ஜவ்வாதும் புனுகும் நெய்யும் சேர்க்க வேண்டும். அதனுடன் அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான பச்சைக் கற்பூரமும் பசுவின் மேன்மை பொருந்திய கோமியமும் சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதற்கு ஏதுவான ஒன்பது பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பாடல் #1367 இல் உள்ளபடி சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றிய தங்கத் தகடில் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

பாடல் #1369

பாடல் #1369: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

வைத்திடும் பொன்னுடன் மாதவ னோக்கிடில்
கச்சிரு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சது வாக சமைந்தவிம் மந்திர
மச்சியல் பாக வாயிரஞ் சிந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைததிடும பொனனுடன மாதவ னொககிடில
கசசிரு கொஙகை கலநதெழு கனனியைத
தசசது வாக சமைநதவிம மநதிர
மசசியல பாக வாயிரஞ சிநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்திடும் பொன் உடன் மாதவம் நோக்கிடில்
கச்சு இரு கொங்கை கலந்து எழு கன்னியை
தச்சு அது ஆக சமைந்த இம் மந்திரம்
அச்சு இயல்பு ஆக ஆயிரம் சிந்தியே.

பதப்பொருள்:

வைத்திடும் (சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றி வைத்திருக்கும்) பொன் (தங்க) உடன் (தகடுடன்) மாதவம் (மாபெரும் தவமாக மனதை ஒரு நிலைப் படுத்தி வேறு எதையும் சிந்திக்காமல்) நோக்கிடில் (அதையே மானசீகமாக உள்ளுக்குள் பார்த்துக் கொண்டு இருந்தால்)
கச்சு (மார்புக் கச்சையால் கட்டிய) இரு (பேரழகு பொருந்திய இரண்டு) கொங்கை (மார்பகங்களைக் கொண்டு) கலந்து (தங்கத் தகடுடன் சக்தியாகக் கலந்து) எழு (அதிலிருந்து பேரொளியாக எழுகின்ற) கன்னியை (என்றுமே மாறாத இளமை பொருந்திய இறைவியை)
தச்சு (அவள் கலந்து இருக்கும் அளவுகளுக்கு) அது (ஏற்ற) ஆக (படியாகவே) சமைந்த (சாதகருக்குள் உருவாகியிருக்கும்) இம் (இந்த நவாக்கிரி சக்கரத்திற்கான) மந்திரம் (மந்திரத்தை)
அச்சு (அது இருக்கும் அதே) இயல்பு (தன்மையில் சிறிதும் மாறாமல்) ஆக (இருக்கும் படி மானசீகமாக ஜெபித்து) ஆயிரம் (ஆயிரம் முறை) சிந்தியே (அந்த மந்திரத்தையே சிந்தித்து இருக்க வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1368 இல் உள்ளபடி சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றி வைத்திருக்கும் தங்க தகடுடன் மாபெரும் தவமாக மனதை ஒரு நிலைப் படுத்தி வேறு எதையும் சிந்திக்காமல் அதையே மானசீகமாக உள்ளுக்குள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது மார்புக் கச்சையால் கட்டிய பேரழகு பொருந்தி அமிர்தத்தை கொடுக்கும் இரண்டு மார்பகங்களைக் கொண்டு தங்கத் தகடுடன் சக்தியாகக் கலந்து அதிலிருந்து பேரொளியாக எழுகின்ற என்றுமே மாறாத இளமை பொருந்திய இறைவியை காணலாம். அதன் பிறகு சாதகர் செய்யும் சாதகத்தின் அளவிற்கு ஏற்றபடி தங்கத் தகடோடு கலந்து இருக்கும் இறைவியின் அருளால் நவாக்கிரி சக்கரத்திற்கான மந்திரம் சாதகருக்குள் உருவாகும். அதன் பிறகு அந்த மந்திரம் இருக்கும் தன்மையில் இருந்து சிறிதும் மாறாமல் மானசீகமாக ஜெபித்து ஆயிரம் முறை அந்த மந்திரத்தையே சிந்தித்து இருக்க வேண்டும்.

பாடல் #1370

பாடல் #1370: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியா
யெந்தை கரங்க ளிருமூன்று முள்ளது
பந்தமாஞ் சூலப் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலியெழ முன்னிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிநதையி னுளளெ திகழதரு சொதியா
யெநதை கரஙக ளிருமூனறு முளளது
பநதமாஞ சூலப படைபாசம விலலமபு
முநதை கிலியெழ முனனிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய்
எந்தை கரங்கள் இரு மூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு
முந்தை கிலி எழ முன் இருந்தாளே.

பதப்பொருள்:

சிந்தையின் (தமக்குள்ளிருந்து கிடைத்த நவாக்கிரி மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருக்கும் சாதகரின் எண்ணங்களுக்கு) உள்ளே (உள்ளே) திகழ் (பிரகாசமான ஒளியைத்) தரு (தருகின்ற) சோதியாய் (ஜோதி வடிவமாகவும்)
எந்தை (எமது தந்தையாகிய இறைவனின் அம்சத்தில்) கரங்கள் (கைகள்) இரு (இரண்டும்) மூன்றும் (மூன்றும் பெருக்கி மொத்தம் ஆறு கைகள்) உள்ளது (கொண்டு இருக்கும் வடிவமாகவும்)
பந்தம் (தீச்சட்டி) ஆம் (ஆகவும்) சூலம் (திரிசூலம்) படை (அங்குசம்) பாசம் (பாசக் கயிறு) வில் (வில்) அம்பு (அம்பு ஆகிய ஆறு ஆயுதங்களோடு)
முந்தை (சாதகரின் முந்தைப் பிறவிகளில் இருந்து தொடர்ந்து வருகின்ற மும்மல இருளும்) கிலி (பயந்து விலகும் படி) எழ (பேரொளியாக எழுந்து) முன் (சாதகரின் சிந்தனைக்கு முன்பு) இருந்தாளே (நிற்கின்றாள் இறைவி).

விளக்கம்:

பாடல் #1369 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து கிடைத்த நவாக்கிரி மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருக்கும் சாதகரின் எண்ணங்களுக்கு உள்ளே பிரகாசமான ஒளியைத் தருகின்ற ஜோதி வடிவமாகவும் எமது தந்தையாகிய இறைவனின் அம்சத்தில் ஆறு கைகளைக் கொண்டு இருக்கும் வடிவமாகவும் அந்த ஆறு கைகளிலும் தீச்சட்டி திரிசூலம் அங்குசம் பாசக் கயிறு வில் அம்பு ஆகிய ஆறு ஆயுதங்களோடும் சாதகரின் முந்தைப் பிறவிகளில் இருந்து தொடர்ந்து வருகின்ற மும்மல இருளும் பயந்து விலகும் படி பேரொளியாகவும் எழுந்து சாதகரின் சிந்தனைக்கு முன்பு நிற்கின்றாள் இறைவி.

பாடல் #1371

பாடல் #1371: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

இருந்தன சத்தியறு பத்து நால்வர்
யிருந்தனர் கன்னிக ளெண்வகை யெண்ம
ரிருந்தனர் சூழ வெதிர் சக்கரமா
யிருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதன சததியறு பதது நாலவர
யிருநதனர கனனிக ளெணவகை யெணம
ரிருநதனர சூழ வெதிர சககரமா
யிருநத கரமிரு விலலமபு கொணடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்தன சத்தி அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர் சக்கரம் ஆய்
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே.

பதப்பொருள்:

இருந்தன (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியின் அம்சமாக இருக்கின்ற) சத்தி (சக்திகள்) அறுபத்து (மொத்தம் அறுபத்து) நால்வர் (நான்கு பேர் இருக்கின்றார்கள்)
இருந்தனர் (இருக்கின்ற இந்த அறுபத்து நான்கு) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற சக்திகளும்) எண் (எட்டு) வகை (வகையாகவும்) எண்மர் (வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்து நான்கு பேர் இருக்கின்றார்கள்)
இருந்தனர் (இருக்கின்ற இந்த அறுபத்து நான்கு சக்திகளும்) சூழ (நவாக்கிரி சக்கிரத்தை சூழ்ந்தும்) எதிர் (அதற்கு நடுவில் வீற்றிருக்கும் இறைவிக்கு எதிர் புறமாகவும்) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தின் பாதுகாப்பு வளையம்) ஆய் (ஆகவே இருக்கின்றார்கள்)
இருந்த (இப்படி நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும்) கரம் (தமது கைகள்) இரு (இரண்டிலும்) வில் (வில்லும்) அம்பு (அம்பும்) கொண்டே (ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1370 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியின் அம்சமாக அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இந்த அறுபத்து நான்கு சக்திகளும் என்றும் இளமையுடன் எட்டு வகையாகவும் வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்து நான்கு பேர் இருக்கின்றார்கள். இந்த அறுபத்து நான்கு சக்திகளும் நவாக்கிரி சக்கிரத்தின் நடுவில் வீற்றிருக்கும் இறைவிக்கு எதிர் புறமாகவும் சக்கரத்தை சூழ்ந்தும் பாதுகாப்பு வளையம் போல இருக்கின்றார்கள். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் தமது இரண்டு கைகளிலும் வில்லும் அம்பும் ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #1372

பாடல் #1372: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்
கண்டவிம் மூர்த்தங் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
யுண்டங் கொருத்தி யுணர்ந்து கொள்வார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணட கனகங குளைமுடி யாடையாயக
கணடவிம மூரததங கனலதிரு மெனியாயப
பணடமர சொதிப படரித ளானவை
யுணடங கொருததி யுணரநது கொளவாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்
கண்ட இம் மூர்த்தம் கனல் திரு மேனி ஆய்
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவை
உண்டு அங்கு ஒருத்தி உணர்ந்து கொள்வார்க்கே.

பதப்பொருள்:

கொண்ட (தங்களின் கரங்களில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கின்ற சக்திகள் அனைவரும்) கனகம் (தங்க ஆபரணங்களோடும்) குழை (வளைந்து சுருண்டு நீண்டு இருக்கும்) முடி (தலை முடியே) ஆடை (உடுத்தி இருக்கும் ஆடை) ஆய் (ஆகவும்)
கண்ட (சாதகர்கள் தமக்குள் கண்டு அறிந்து கொண்ட) இம் (இந்த) மூர்த்தம் (சக்திகளின் உருவங்கள் அனைத்தும்) கனல் (அக்னிக் கனலே) திரு (தங்களின் திரு) மேனி (உருவம்) ஆய் (ஆக இருக்கின்றார்கள்)
பண்டு (அவர்களின் அக்னிக் கனலாகிய உருவமானது ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாக கலந்து இருக்கும் இறைவியாகவே) அமர் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருந்து) சோதி (ஜோதி வடிவில்) படர் (சாதகருக்குள் முழுவதும் படர்ந்து) இதழ் (சக்திமயங்களாக) ஆனவை (இருக்கின்றாள்)
உண்டு (இப்படி சாதகருக்குள் இருக்கின்ற அனைத்து சக்திமயங்களும்) அங்கு (சக்கரத்தின் நடுவில்) ஒருத்தி (வீற்றிருக்கின்ற இறைவி ஒருத்தியில் இருந்தே பரவி இருக்கின்றது என்பதை) உணர்ந்து (தமக்குள் இருக்கும் இறைவியை உணர்ந்து) கொள்வார்க்கே (கொண்ட சாதகர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1371 இல் உள்ளபடி தங்களின் கரங்களில் ஆயுதங்களுடன் நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து கொண்டு இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் தங்க ஆபரணங்களோடும் வளைந்து சுருண்டு நீண்டு இருக்கும் தலை முடியே அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடையாகவும் அக்னிக் கனலே தங்களின் திரு மேனியாகவும் இருக்கின்றார்கள். இதை தமக்குள் கண்டு கொண்ட சாதகர்கள் அந்த அக்னிக் கனலாகிய உருவமானது ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாக கலந்து இருக்கும் இறைவியாகவே தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் ஜோதி வடிவில் வீற்றிருக்கின்றாள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இப்படி தமக்குள் வீற்றிருக்கின்ற இறைவியை உணர்ந்து கொள்ள முடிந்த சாதகர்களால் அவள் ஒருவளே தமக்குள் முழுவதும் சக்திமயங்களாக படர்ந்து இருக்கின்றாள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1373

பாடல் #1373: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உணர்ந்திருந் துள்ளே யொருத்தியை நோக்கிற்
கலந்திருந் தங்கே கருணை பொழியு
மலர்ந்தெழு மோசை யொளியது காணுந்
தளர்ந்தெழு சக்கரந் தான்றரு வாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரநதிருந துளளெ யொருததியை நொககிற
கலநதிருந தஙகெ கருணை பொழியு
மலரநதெழு மொசை யொளியது காணுந
தழரநதெழு சககரந தானறரு வாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து அங்கே கருணை பொழியும்
மலர்ந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தளர்ந்து எழு சக்கரம் தான் தருவாளே.

பதப்பொருள்:

உணர்ந்து (சாதகர் தமக்குள் உணர்ந்து) இருந்து (தியானத்தில் வீற்றிருக்கும் போது) உள்ளே (அவருக்குள்ளே வீற்றிருக்கும்) ஒருத்தியை (இறைவியை) நோக்கில் (மனதிற்குள் கண்டு கொண்டே இருந்தால்)
கலந்து (சாதகரோடு ஒன்றாக கலந்து) இருந்து (அவருக்குள் வீற்றிருந்து) அங்கே (அங்கிருந்தே) கருணை (சாதகருக்கு பேரருள் கருணையை) பொழியும் (வழங்கும் இறைவியானவள்)
மலர்ந்து (சாதகருக்குள்ளிருந்து பூவைப் போல மென்மையாக மலர்ந்து) எழும் (எழுகின்ற) ஓசை (இறைவனது அம்சமாகிய சத்தத்தையும்) ஒளி (இறைவியது அம்சமாகிய வெளிச்சத்தையும்) அது (உருவாக்கி) காணும் (அவர் காணும் படி அருளுவாள்)
தளர்ந்து (அதன் பிறகு அந்த வெளிச்சமும் சத்தமும் சாதகத்திற்கு ஏற்றவாறு இணங்கி) எழு (சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தோடு சேர்ந்து செயல்படும்படி) தான் (இறைவி) தருவாளே (அருளுவாள்).

விளக்கம்:

பாடல் #1372 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் வீற்றிருக்கின்ற இறைவியை உணர்ந்து கொண்ட பிறகு அவளையே மனதிற்குள் கண்டு கொண்டே தியானத்தில் வீற்று இருந்தால் இறைவியும் சாதகரோடு ஒன்றாக கலந்திருந்து அங்கிருந்தே சாதகருக்கு பேரருள் கருணையை வழங்குவாள். அதன் பிறகு சாதகருக்குள்ளிருந்து பூவைப் போல மென்மையாக மலர்ந்து எழுகின்ற இறைவனது அம்சமாகிய சத்தத்தையும் இறைவியது அம்சமாகிய வெளிச்சத்தையும் உருவாக்கி அவர் காணும் படி அருளுவாள். அதன் பிறகு அந்த வெளிச்சமும் சத்தமும் சாதகத்திற்கு ஏற்றவாறு இணங்கி சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற நவாக்கிரி சக்கரத்தோடு சேர்ந்து செயல்படும்படி இறைவி அருளுவாள்.

பாடல் #1374

பாடல் #1374: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தரும் வழியாகிய தத்துவ ஞானங்
குருவழி யாயங் குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை யறுத்துப்
பெருவழி யாகிய பேரொளி காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரும வழியாகிய தததுவ ஞானங
குருவழி யாயங குணஙகழில நினறு
கருவழி யாய கணககை யறுததுப
பெருவழி யாகிய பெரொளி காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரும் வழி ஆகிய தத்துவ ஞானம்
குரு வழி ஆய் அங்கு குணங்களில் நின்று
கரு வழி ஆய கணக்கை அறுத்து
பெரு வழி ஆகிய பேரொளி காணே.

பதப்பொருள்:

தரும் (இறைவி அருளுகின்ற) வழி (சாதகருக்கான வழி) ஆகிய (ஆக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமும்) தத்துவ (இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ) ஞானம் (ஞானத்தை கொடுத்து)
குரு (குருவாக வீற்றிருந்து) வழி (சாதகருக்கான வழி) ஆய் (ஆகவே) அங்கு (அவருக்குள்ளிருக்கும்) குணங்களில் (தன்மைகளுக்கு ஏற்றபடியே) நின்று (நின்று காட்டி அருளுவாள்)
கரு (அதன் பிறகு சாதகரின் முதல் பிறவியில் இருந்தே தொடர்ந்து வரும் கரு) வழி (வழியாகிய பிறவிகளுக்கும்) ஆய (இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும்) கணக்கை (காரணமாகிய கர்ம கணக்குகளை) அறுத்து (நீக்கி)
பெரு (முக்தி அடைவதற்கான பெரிய) வழி (வழியாக) ஆகிய (இருக்கின்ற) பேரொளி (இறைவனின் பேரொளி) காணே (உருவத்தை காணும் படி செய்து அருளவாள்).

விளக்கம்:

பாடல் #1373 இல் உள்ளபடி இறைவி அருளால் சாதகருக்குள்ளிருந்து மலர்ந்து எழுகின்ற சத்தமும் வெளிச்சமும் சாதகருக்கான வழியாக இருந்து இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ ஞானத்தை கொடுக்கின்றாள். அவளே குருவாக வீற்றிருந்து சாதகருக்குள் இருக்கும் தன்மைகளுக்கு ஏற்றபடியே நின்று காட்டி அருளுகின்றாள். அதன் பிறகு சாதகரின் முதல் பிறவியில் இருந்தே தொடர்ந்து வரும் கரு வழியாகிய பிறவிகளுக்கும் இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும் காரணமாகிய கர்ம கணக்குகளை நீக்கி முக்தி அடைவதற்கான பெரிய வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவத்தை காணும் படி செய்து அருள்வாள்.

பாடல் #1375

பாடல் #1375: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேரொளி யாய பெரிய மலர்நடுச்
சீரொளி யாகத் திகழ்தரு னாயகித்
தாரொளி யாயவள் தன்னிறம் பொன்மையாய்ப்
பாரொளி யாகப் பரந்துநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெரொளி யாய பெரிய மலரநடுச
சீரொளி யாகத திகழதரு னாயகித
தாரொளி யாயவள தனனிறம பொனமையாயப
பாரொளி யாகப பரநதுநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேர் ஒளி ஆய பெரிய மலர் நடு
சீர் ஒளி ஆக திகழ் தரு நாயகி
தார் ஒளி ஆய் அவள் தன் நிறம் பொன்மை ஆய்
பார் ஒளி ஆக பரந்து நின்றாளே.

பதப்பொருள்:

பேர் (மிகப் பெரும்) ஒளி (ஒளியாக) ஆய (இருக்கின்ற) பெரிய (பெரியதான) மலர் (சகஸ்ரதள தாமரை மலரின்) நடு (நடுவில் வீற்றிருக்கும்)
சீர் (சிறப்பான) ஒளி (ஒளியாக) ஆக (இருந்து) திகழ் (பிரகாசமாகத் திகழும்) தரு (நிலையைத் தருகின்ற) நாயகி (தலைவியாகிய இறைவி)
தார் (சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலருக்கு) ஒளி (ஒளியாகவே) ஆய் (இருக்கின்ற) அவள் (இறைவி அவள்) தன் (தனது) நிறம் (திருமேனியின் நிறத்தில்) பொன்மை (தங்க நிறம்) ஆய் (போலவே பிரகாசமாக ஜொலிக்கின்றாள்)
பார் (உலகத்திற்கு) ஒளி (ஒளியாக) ஆக (இருந்து) பரந்து (எங்கும் பரவி விரிந்து) நின்றாளே (இறைவி நிற்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1374 இல் உள்ளபடி முக்தி அடைவதற்கான பெரிய வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவமானது சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதள தாமரை மலரின் நடுவில் சீரும் சிறப்பும் பொருந்திய பேரொளியாக திகழ்கின்ற நிலையைத் தருகின்ற தலைவியாகிய இறைவியே சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலரின் ஒளியாக இருக்கின்றாள். அவளுடைய திருமேனியானது தங்கம் போல பிரகாசமாக ஜொலிக்கின்றது. அவளே உலகத்திற்கு ஒளி தருபவளாக எங்கும் பரவி விரிந்து நிற்கின்றாள்.