பாடல் #1065: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
உண்டில்லை என்ற துருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே.
விளக்கம்:
திரிபுரை சக்திக்கு உருவம் உண்டு என்று சொல்பவர்களுக்கு உருவமாக இருக்கிறாள். உருவம் இல்லை என்று சொல்பவர்களுக்கு அருவமாக இருக்கிறாள். தன்னைத் தியானித்தவர்களுக்கு அவர்கள் தியானித்த உருவமாகவே அவள் காட்சி கொடுக்கின்றாள். உலகத்தின் இயக்கத்திற்கு காரணம் இறைவன் காரியம் இறைவி இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அருவுருவமாக தில்லை அம்பலத்தில் எங்கும் நிறைந்து ஆடுகின்றார்கள். இந்த அருவுருவமே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் உய்ய வேண்டும் என்பதற்காக சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று மண்டலங்களிலும் நிறைந்து திரிபுரை சக்தியாக நிற்கின்றாள்.
கருத்து: உலக இயக்கத்திற்கு வெப்பம் குளிர்ச்சி இரண்டுமே வேண்டும் இதை சூரிய சந்திர மண்டலங்களாக இருந்து திரிபுரை சக்தி அருளுகின்றாள். பிரளயத்தில் அனைத்து உயிர்களும் இறைவனோடு திரும்பவும் சென்று கலந்து விடுவதற்கு அக்னி மண்டலமாக திரிபுரை சக்தி நிற்கின்றாள். பாடல் #612 இல் உள்ளபடி உடலில் (பிண்டத்தில்) இருக்கும் மூன்று மண்டலங்களே உலகத்திலும் (அண்டத்தில்) இருக்கின்றது. இவளே திரிபுரை என்று அறியப்படுகின்றாள்.