பாடல் #473: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.
விளக்கம்:
பாடல் #472 ல் உள்ளபடி குழந்தையின் உடலெங்கும் பரவி ஒட்டிக்கொள்ளும் அந்த எட்டுவித சூட்சும காரணிகளாக இருப்பவை ஐந்து ஞானேந்திரியங்களும் மூன்று அந்தக் கரணங்களும் ஆகும். இவற்றோடு குழந்தையை ஒட்டியே பிறப்பது வினைப் பயனால் பெற்ற பந்தம் பாசம் எனும் உணர்வுகள். இப்படி எல்லாம் கலந்து உருவாகிய பை போன்ற உடலை வினையின் படி கட்டி வைத்து உருவாக்குவதும் பிறவி முடிவில் அவிழ்த்து அழிப்பதும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானே.