பாடல் #452

பாடல் #452: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

விளக்கம்:

தியானத்தின் மூலம் உயிர்கள் அறியக்கூடிய ஆறு ஆதார சக்கரங்களில் முதலாவதான மூலாதரத்திற்கு மேல் இருக்கின்ற சுவாதிட்டான சக்கரத்தின் அருகில் மூச்சுக்காற்றின் வெப்பமும் பித்த நீரும் கலந்து இருக்கின்ற கர்ப்பப் பைக்குள் செக்கச் சிவந்த சிறு கால்களோடு தலையையும் சேர்த்து உடலை வைத்திருக்கின்ற கருவை உடலில் இருக்கின்ற வெப்பமும் நீரும் சிதைத்துவிடாத படி பொறுமையோடு உயிருக்கு உயிராய் உடன் இருந்து பாதுகாக்கும் இறைவன் அந்தக் கரு வெளியே போக வழி தேடும் போது அது இன்னமும் வளர்ச்சி பெற்று முழுமையடைந்த பிறகே வெளியே போக வேண்டும் என்று அதற்கான தேவையாக பத்து மாதங்களை காலக் கெடுவாக வைத்து அந்தக் காலக் கெடு முடியும் வரை கருவையும் காத்து அதைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற தாய்க்கும் அதன் பாரம் பாதிக்காத படி பாதுகாத்து அருளுகின்றான் இறைவன்.

3 thoughts on “பாடல் #452

  1. Kesava perumal Reply

    மிக அருமையான விளக்கம் ஐயா உஙகளது பணி அளப்பரியது

  2. V Krishnakumari Reply

    மிக்க நன்றி ஐயா சிறந்த விளக்கம் ஓம் சிவ சிவ திருச்சிற்றம்பலம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.