பாடல் #472: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
விளக்கம்:
பூவிதழ் போன்ற யோனியில் நுழைந்த மொட்டு போன்ற இலிங்கத்தின் நுனியிலிருந்து வெளிவந்த சுக்கிலம் சென்று கர்ப்பப் பையின் வாசலில் இருக்கும் கருமுட்டையுடன் கலந்தபின் கருமுட்டை கர்ப்பப் பைக்குள் சென்று விரியும். அப்போது விரிந்த முட்டையிலிருந்து வெளிவந்த நீர்க் குழம்பில் ஒளி வடிவான இறைவனின் அம்சமும் ஜென்ம சுமைகளைச் சுமந்த ஆன்மாவும் சேர்ந்து கலந்து பிறவி எடுக்கும். ஆண் பெண்ணின் உயிர் அணுக்கள் சேர்ந்து ஆண் பெண்ணின் சாயலிலேயே உலகத்தில் பிறக்கும் உடம்பாக மாறிவிடும். அந்த உடம்பு முழுவதும் இறைவனின் அம்சம் பரவி எட்டுவிதமான காரணிகள் பற்றிக்கொள்ளும்.
உடலின் எட்டுவித காரணிகள்:
- உடல். 2. வாய். 3. கண். 4. மூக்கு. 5. காது. 6. மனம். 7. புத்தி.
- 8. அகங்காரம்.