பாடல் #1150

பாடல் #1150: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

போற்றியென் றாள்புவ னாபதி யம்மையென்
ஆற்றலுள் நிற்கு மருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

விளக்கம்:

பாடல் #1149 இல் உள்ளபடி அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவளும் உலகங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்றவளும் யான் போற்றி வணங்குகின்றவளும் அரியதான தவங்களை செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற என்றும் இளமை ஆற்றலுடன் இருப்பவளுமாகிய இறைவியை போற்றி வணங்குகின்ற உயிர்களின் ஆற்றலுக்குள் வந்து வீற்றிருந்து அவர்களின் முகத்தில் இருக்கும் நெற்றிக்குள் அழகிய ஆபரணங்களை சூடிக்கொண்டு வீற்றிருந்து அவர்களின் அகங்காரத்தை அடக்கி விட்டு பசுமையான கொடியாக இருந்து அவர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கிறாள்.

கருத்து:

உலகங்கள் அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற எமது இறைவியை போற்றி வணங்குகின்ற சாதகர்களின் நெற்றிக்குள் நீல ஜோதியாக அமர்ந்து அவர்களின் அகங்காரத்தை அடக்கி மரணமில்லா பெருவாழ்வை அளித்து ஆட்கொண்டு அருளுகின்றாள்.

4 thoughts on “பாடல் #1150

  1. வசீகரன் Reply

    தயவுசெய்து பாடல் ஆடியோக்களை தொகுப்பாக பதிவேற்றம் செய்வீர்களா?? இல்லையெனில் அது எங்கு பதிவிறக்கம் செய்வது என கூறுங்கள் ஐயா??

  2. வசீகரன் Reply

    எனக்கு அந்த ஆடியோக்கள் பிடித்துள்ளது. எனவே தான் கேட்கிறேன் ஐயா!

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.