பாடல் #1573: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
பத்திப் பணிந்து பரவும்படி நல்கிச்
சுத்த வுரையாற் றுரிசறச் சோதித்துச்
சத்து மசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்த மிறையே சிவகுரு வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பததிப பணிநது பரவுமபடி நலகிச
சுதத வுரையாற றுரிசறச சொதிததுச
சதது மசததுஞ சதசததுங காடடலாற
சிதத மிறையெ சிவகுரு வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பத்தி பணிந்து பரவும் படி நல்கி
சுத்த உரையால் துரிசு அற சோதித்து
சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவ குரு ஆமே.
பதப்பொருள்:
பத்தி (பக்தியையும்) பணிந்து (இறைவனை வணங்கி பணிவதையும்) பரவும் (செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும்) படி (தெரிந்து கொள்ளும் படி) நல்கி (கொடுத்து அருளி)
சுத்த (தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும்) உரையால் (சத்திய வாக்கையும் கொடுத்து அருளி) துரிசு (ஒரு குற்றமும்) அற (இல்லாமல் போகும் படி) சோதித்து (பல விதமான சோதனைகளால் சோதித்து)
சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) காட்டலால் (தாமே என்பதை காட்டி அருளியதால்)
சித்தம் (அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும்) இறையே (இறை சக்தியே) சிவ (அருளைக் கொடுக்கின்ற) குரு (குருவாக வந்து) ஆமே (இருக்கின்றான்).
விளக்கம்:
பக்தியையும் இறைவனை வணங்கி பணிவதையும் செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் படி கொடுத்து அருளி, தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும் சத்திய வாக்கையும் கொடுத்து அருளி, ஒரு குற்றமும் இல்லாமல் போகும் படி பல விதமான சோதனைகளால் சோதித்து, நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் தாமே என்பதை காட்டி அருளியதால் அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும் இறை சக்தியே அருளைக் கொடுக்கின்ற குருவாக வந்து இருக்கின்றான்.