பாடல் #221

பாடல் #221: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுட ரோமத் தலைவனும் ஆமே.

விளக்கம்:

ஈடு இணையில்லாத அழகு பொருந்திய ஜோதியாக இருப்பவனும் அழிவு என்ற ஒன்று இல்லாத தலைவனும் எமது ஆன்மாவோடு இணைந்து எமது உள்ளத்துள் இருக்கின்றவனும் நெற்றிக் கண்ணில் நெருப்பாக இருப்பவனும் ஏழு உலகங்களையும் கடந்து எங்கும் வியாபித்து இருப்பவனும் குளிர்ந்த ஒளியைத் தரும் நிலவைத் தன் தலைமுடியில் சூடியிருப்பவனும் முறையாகச் செய்யப்படும் ஹோமத்திற்கெல்லாம் தலைவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே ஆவான்.

பாடல் #222

பாடல் #222: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடற்
கோமத்துள் அங்கி குரைகனலும் தானே.

விளக்கம்:

ஹோமத்தில் வளர்க்கும் தீயின் உள்ளிருந்து எழும்புகின்ற ஜோதியானவன் எமது இறைவன் சதாசிவமூர்த்தியே. இறந்த உடல்களைத் தகனம் செய்யும் போது அங்கே நெருப்பாக இருந்து உடலை எரிக்கின்றவனும் அவனே. அந்த உடலின் ஆன்மாவை வானத்திற்கு தாங்கி எடுத்துச் செல்கின்றவனும் அவனே. உடல் பிறக்கும்போதே உயிரோடு சேர்ந்து பிறக்கும் கடல் போன்ற வினைகளை ஹோமத்தின் தீயினுள் இருந்து சத்தத்தோடு எரியும் நெருப்பாக சுட்டு எரிப்பவனும் அவனே.

பாடல் #223

பாடல் #223: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்
தங்கி இருக்கும் வகையருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழுமது வாமே.

விளக்கம்:

யாகத்தில் தோன்றும் நெருப்பின் தலைவன் அரும்பெரும் தவத்துக்கு உரியவனான இறைவனே. யாகம் வளர்க்கும் முறைகளை வேதங்களில் வழங்கியவனும் அவனே. வேத முறைகளை பலவித ஆகமங்களாக வகைபடுத்தி அருளியவனும் அவனே. இறைவன் வழங்கிய வேதங்களையும் ஆகமங்களையும் தவறாது செயல்படுத்தி, உலகத்தில் எங்கு சென்றாலும் அங்கு முறைப்படி யாகத்தை வளர்த்து யாகத்தின் மூலம் அங்கிருக்கும் உயிர்களுக்கு இறைவனின் அருளைக் கொண்டு வருபவன் அந்தணன். அதனால் அவன் உடலளவில் சிறிது துன்பப்பட்டாலும் அந்த துன்பத்திலிருந்து இளைப்பாறி பெருமளவு இன்பம் பெறும்படி இறைவன் அவனுக்கு வழங்குவது மாபெரும் புகழேயாகும்.

கருத்து: இறைவன் கொடுத்த முறைகளின்படி உலகெல்லாம் சென்று உயிர்கள் இறைவன் அருளைப் பெற வேண்டி எந்த அந்தணன் யாகம் வளர்க்கின்றானோ அவனுக்கு அளவில்லாத அளவு இன்பத்தையும் புகழையும் இறைவனே வழங்கிவிடுவான்.

பாடல் #209

பாடல் #209: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்க்கே.

விளக்கம்:

உயிர்களிடம் இருந்த ஆடைகளை திரும்பத் திரும்ப போட்டுக்கொண்டதால் கிழிந்து போனது. அவர்களின் வாழ்க்கையும் துன்பப் பட்டுக் கசந்து போனது. அவருக்கென்று இருந்த துணையும் பிறந்த குழந்தைகளும் பெற்ற தாய் தந்தையரும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளும் என அனைவருமே அவர்களின் மேல் அன்பில்லாமல் விலகிப் போய்விட்டனர். அவர்களுக்குத் தானமாகவோ இல்லை கடனாகவோ பொருள் கொடுப்பவர்களும் யாரும் இல்லை. அவர்களுக்குச் சிறப்புடைய நாட்கள் என்று ஒன்றும் இல்லாமல் போனது. அப்படிச் சிறப்பான நாட்கள் இல்லாததால் எதையும் கொண்டாடுவதும் இல்லாமல் போனது. அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து நடந்த நடை இப்போது இல்லாமல் போனது. வெறும் இயந்திரம் போன்றே இவர்கள் நாட்களைக் கழித்து வாழ்கின்றார்கள்.

பாடல் #210

பாடல் #210: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே.

விளக்கம்:

உயிர்களின் வயிறு என்பது ஒரு பொய்யான குழி போன்றது. பசி வரும்போது உணவு சாப்பிட்டு பசி தீர்ந்தது போலத் தெரிந்தாலும் மீண்டும் நான்கு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடுகின்றது. இப்படி பொய்யாக இருக்கும் வயிறு எனும் குழியை நிரப்புவதற்கு உணவு கிடக்குமா என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன. பொய்யான வயிற்றுப் பசியைப் போக்க உணவு தேடும் உயிர்கள் தமது பசியை எப்படி தீர்த்துக் கொண்டாலும் எந்த வேலை செய்தாலும் எப்படி பொருள் சம்பாதித்தாலும் அதிலேயே மூழ்கி இருந்துவிடாமல் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடவும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு வந்தால் பிறவியோடு வந்த மும்மலங்களாகிய (ஆணவம், கன்மம், மாயை) அழுக்குகளும் நீங்கி உள்ளம் தெளிவுபெறும். உள்ளம் தெளிவு பெற்ற உயிர்களின் பிறவிப்பசி அப்போதே தீர்ந்து இனி பிறவி இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.

பாடல் #211

பாடல் #211: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

கற்குழி தூரக் கனகமும் தேடுவார்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்குஅற்ற வாறே.

விளக்கம்:

கல்லால் ஆன குழியை மூட தங்கக் கட்டிகளைத் தேடுவது போல தினமும் ஏற்படும் பசிக்காக பலவித செல்வங்களைத் தேடுகின்றன உயிர்கள். கல்லால் ஆன குழியை எப்படி தங்கத்தால் நிரப்ப முடியாதோ அதுபோலவே வயிற்றுப் பசியை எத்தனை வகையான செல்வம் சேர்த்தாலும் நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது. நிரந்தரமாக பசியைத் தீர்ப்பது எப்படி என்கிற அறிவை அறிந்து கொள்ளுங்கள் அப்படி நிரந்தரமாகப் பசியைத் தீர்ப்பது எப்படி என்கிற அறிவைத் தெரிந்து கொண்டு விட்டால் அதன் மூலம் இனி எப்போதுமே பசி வராமல் இருக்கும்படி ஆன்மாவின் அனைத்து அழுக்குகளும் நீங்கி பிறவி இல்லா பெருவாழ்வு கிடைத்துவிடும்.

பாடல் #212

பாடல் #212: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை )

தொடர்ந்தெழும் சுற்றம் வினையினும் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.

விளக்கம்:

உயிர்கள் இந்த உலகில் பிறக்கும் பொழுதே அவற்றின் முன் பிறவிகளிலிருந்து தொடர்ந்து வரும் வினைகளும் கூடவே பிறந்து அந்த உயிரைச் சுற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகளாக எப்போதும் இருக்கின்றன. உயிரின் வாழ்க்கை கடந்து முடிவதற்கு முன்பே உலகப்பற்றுகளில் இருந்து விடுபட்டு தமக்குள் இருக்கும் இறைவனை போற்றிப் புகழ்ந்து வழிபட்டு தமது உள்ளுக்குள்ளேயே இறைவனை ஜோதியாக உணர்ந்து ஆன்மாவின் இருளை அகற்றும் விளக்காக ஏற்றிவைத்து அது காட்டும் வழியிலேயே எப்போதும் மாறாமல் நின்று வந்தால் பொய்யான வயிற்றுப் பசியோடு பிறக்கும் பிறவிகளும் இனி இல்லாமல் போய்விடும்.

பாடல் #213

பாடல் #213: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

விளக்கம்:

உயிர்கள் கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – சுவைத்தல், மெய் – தொடுதல்/உணர்தல்) ஆகிய ஐந்து இந்திரியங்களின் உதவியால் உயிர்களின் பசி உணவு சாப்பிட்டவுடன் தீர்ந்துவிட்டாலும் அதே இந்திரியங்கள்தான் ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் அறுத்து விடுகிறது. ஆகையால் உயிர் தான் எடுத்த பிறவியில் எண்ணிலடங்காத துன்பங்களைப் பெற்று வருந்துகின்றது. மேலும் ஜென்ம வினை, கர்ம வினை, எண்ண வினை, பந்தம், பாசம், பற்று, செல்வம் என பல காரணங்களாலும் துன்பம் அடைகின்றது. துன்பத்தின் இறுதியில் இனி இப்படிப் பட்ட பிறவியே வேண்டாம் என்று வெறுக்கும் உயிர்கள் பிறவி இல்லாத நிலை வேண்டி ஈசனிடம் நிற்கின்றான்.

கருத்து : செல்வ செழிப்புடன் இருப்பவர்களை விட வறுமை நிலையில் இருக்கின்றவர்கள் விரைவில் இந்த பிறவி வாழ்க்கையை வெறுத்து இறைவனை அடைந்து பிறவி இல்லாத பேரின்பநிலை அடைய எண்ணுகின்றார்கள்.

பாடல் #204

பாடல் #204: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

விளக்கம்:

எட்டி மரத்தின் இலைகள் பார்க்க அழகாக இருக்கும் அதன் பழங்கள் பழுத்துவிட்டால் குலை குலையாக அழகாகத் தொங்கும். அதற்காக அழகாகவும் சாப்பிடுவதற்கு சுவையானது போலவும் தோன்றும் எட்டிப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டால் உடனே அதன் விஷம் உயிரைக் கொல்லும். அதுபோலவே அழகான முலைகளைக் கொண்டு சிந்தனையைக் கவரும் வண்ணம் புன்னகையை வீசும் பெண்களின் மேல் காமம் ஏற்பட்டால் அதுவும் விஷமாகி அழித்துவிடும். அத்தகைய பெண்களின் மேல் ஆசைப்படும் நெஞ்சை விஷத்திற்கு ஆசைப்படாதே என்றும் கொடியதென்றும் கோபத்துடன் திட்டி ஆசையால் முறைதவறிச் செல்லாமல் வைத்திருங்கள்.

பாடல் #205

பாடல் #205: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் அன்பை
நனவது போலவும் நாடவொண் ணாதே.

விளக்கம்:

கணவர் வீட்டில் வாழும் இல்லற நெறியில் இருக்கும் பெண்களின் மேல் காமம் கொண்டு அணுகினால் சுழல் நீரின் மேலே நீந்துபவர்களையும் தன்னுடன் இழுத்துச் சென்றுவிடுவது போல நம்மையும் அந்தக் காமம் இழிவில் இழுத்துக் கொண்டு போய்விடும். மற்றவர்களின் மனைவிகள் மீது கசிந்து எழும் சிறிது அன்பானது தூக்கத்தில் கண்ட கனவு போன்றது அதை உண்மை என்று நம்பி மேலும் அன்பு செய்வது அழிவுக்கே வழிவகுக்கும்.

கருத்து:

தூங்கும்போது சாப்பிடுவது போல கனவு கண்டால் அப்போதைக்குச் சந்தோஷமாக இருக்குமே தவிர உண்மையில் பசி தீர்ந்துவிடாது. அதுபோலவே தமக்கு உரிமையில்லாத பெண்கள் மீது காட்டும் அன்பானது அப்போதைக்கு இன்பமாக இருக்குமே தவிர உண்மையில் இழிவு நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும்.