பாடல் #234

பாடல் #234: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

விளக்கம்:

காலையிலும் மாலையிலும் வேத முறைப்படி வேள்விகளை வளர்த்து அனைத்து உயிர்களையும் அன்போடு இறைவனாகவே பார்க்கின்ற தண்மையைக் கொண்டு உயர்ந்த வேதங்களையும் அவற்றின் பொருளான வேதாந்தங்களையும் எப்போதும் தமது சிந்தனையில் வைத்துத் தியானிக்கும் அந்தணர்கள் சேர்ந்து வாழும் நாடானது செழுமையுடன் எல்லா வளங்களும் கொண்டு எப்போதும் பஞ்சமோ நோய்களோ இல்லாமல் எப்போதும் சீரும் சிறப்புமாக இருக்கும். அந்த நாட்டையும் அதன் மக்களையும் ஆளும் மன்னவர்களும் மிகவும் நலமாக இருப்பார்கள்.

பாடல் #235

பாடல் #235: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

வேதாந்த ஞானம் விளங்கும் விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.

விளக்கம்:

வேதங்களையும் அதன் பொருளாகிய வேதாந்தங்களையும் குருவின் மூலம் கற்று ஞானம் பெறும் வழியைத் தமது கர்மவிதியின் காரணமாக பெற இயலாதவர்கள் ஓம் என்னும் நாதத்தின் முடிவாகிய ஞானத்தை வழங்கும் குருவின் போதனைகளை அவரைச் சரணடைந்து கற்று உணர்ந்து அதன்படி நடந்தால் அதுவே அவர்களுக்கு இறைவனின் திருவடியில் சென்று சேரும் அருளை வழங்கி ஓம் என்னும் நாதத்தின் முடிவான முக்தியையும் ஞானத்தின் முடிவான சித்தியையும் அவர்களுக்கு வழங்கிவிடும்.

கருத்து: தமது கர்ம விதியால் வேதங்களையும் வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவற்றின் மூலம் இறைவனை அடையும் வழியைப் பெற வாய்ப்பு இல்லாதவர்கள் குருவின் திருவடிகளைச் சரணடைந்து அவர் காட்டிய வழியில் நடந்தாலே அது அவரை இறைவனிடம் கொண்டு சேர்த்து அவருக்கு வேண்டிய ஞானத்தையும் முக்தியையும் வழங்கிவிடும்.

பாடல் #236

பாடல் #236: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பவர் யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவையுடை யோரே.

விளக்கம்:

எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றும் அமைதியாக இருக்கும் காலத்திலும், எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றும் அதன் வேலைகளை செய்து கொண்டிருக்கும் காலத்திலும் அனைத்திற்குள்ளும் இருந்து அனைத்தையும் வெல்லும் இறைவனை தியானித்திருப்வர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்குப் பிறர் சென்று அவர்களை வணங்குமளவிற்கு இறைவனின் திருவருளைப் பெறுபவர்கள் அந்தணர்கள் ஆவார்கள்.

பாடல் #237

பாடல் #237: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பவர் யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

தானே விடும்பற் றிரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே.

விளக்கம்:

பாடல் #236 ல் கூறியபடி எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் சிவசிந்தனை வைத்த அந்தணரிடம் அகப்பற்றான உடம்பின் மேல் இருக்கும் பற்றும் புறப்பற்றான செல்வம் பந்தம் போன்ற பற்றுகளும் சென்றுவிடும். நான் என்னும் அகங்காரம் நீங்கி இறை சிந்தனையிலேயே இருக்கும் அவர்களை எதுவும் பாதிக்காது. அவர்கள் செய்யும் வேள்வியில் இடும் அவிர்பாகங்களை (நெய், அரிசி போன்ற வேள்வியில் இடும் பொருட்கள்) உண்ண தாமரை மலரில் வீற்றிருக்கும் அந்த புண்ணிய போகன் பிரமன் வருவான்.